உலகின் நீளமான கண்ணாடி பாலம்


உலகின் நீளமான கண்ணாடி பாலம்
x
தினத்தந்தி 12 May 2022 2:49 PM GMT (Updated: 12 May 2022 2:49 PM GMT)

உலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் வியட்நாமில் திறக்கப்பட்டுள்ளது. பாலத்தின் தரைத்தளம் மென்மையான கண்ணாடி இழைகளால் ஆனது.

பாலத்தின் கட்டமைப்புக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் வெண்மை நிறத்தில் பளிச்சென்று காட்சி தருகின்றன. அதனால் இது `வெள்ளை டிராகன்' பாலம் என்றும் வர்ணிக்கப்படுகிறது.



வியட்நாமின் வடமேற்கு பகுதியிலுள்ள சோன் லா மாகாணத்தில் இரண்டு மலை குன்றுகளை இணைக்கும் வகையில் இந்த பாலம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பாலத்தின் ஒரு முனையில் இருந்து பசுமை படர்ந்திருக்கும் பள்ளத்தாக்கின் அழகை ரசித்தபடியே மறு முனைக்கு சென்று வரலாம். இதில் ஒரே நேரத்தில் 450 பேர் நடக்க முடியும். பாலத்தின் மொத்த நீளம் 632 மீட்டர். 150 மீட்டர் (490 அடி) உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. உலக அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நோக்கத்தில் இந்த பாலம் கட்டப்பட்டிருக்கிறது.

பாலத்தின் ஆபரேட்டர் ஹோங் மன் டுய் கூறுகையில், ‘‘பாலத்தின் மீது நிற்கும் போது, இயற்கையின் அழகை பயமின்றி ரசிக்க முடியும். இதுநாள் வரை சீனாவின் குவாங்டாங்கில் உள்ள 526 மீட்டர் நீளமுடைய கண்ணாடி பாலம்தான் உலகின் மிக நீளமான பாலமாக கருதப்படுகிறது. அதை விட இந்த கண்ணாடி பாலம் நீளமானது. இது பற்றி கின்னஸ் சாதனை அமைப்பினருக்கு தெரியப்படுத்தி இருக்கிறோம். அவர்கள் அடுத்த மாதம் எங்கள் கோரிக்கையை சரி பார்த்து அங்கீகரிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்கிறார்.

வியட்நாமில் ஏற்கனவே இரண்டு கண்ணாடி பாலங்கள் நிறுவப்பட்டிருக்கிறது. மூன்றாவது பாலமான இது உலகின் நீளமான கண்ணாடி பாலம் என்ற சாதனையையும் தக்க வைக்க உள்ளது. கொரோனாவால் சுற்றுலா வர்த்தகம் இரண்டு ஆண்டுகளாக முடங்கிய நிலையில் சர்வதேச சுற்றுலா பயணிகளை மீண்டும் ஈர்க்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த பாலம் கட்டமைப்பு அமைந்திருக்கிறது.

‘‘இந்தப் பாலம் அதிகமான உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை எங்கள் பகுதிக்கு ஈர்க்கும் என்று நம்புகிறோம்’’ என்பது அதிகாரிகளின் கருத்தாக உள்ளது.


Next Story