சிறப்புக் கட்டுரைகள்

கனவு நாயகி - பட்டுக்கோட்டை பிரபாகர் + "||" + Dream heroine

கனவு நாயகி - பட்டுக்கோட்டை பிரபாகர்

கனவு நாயகி - பட்டுக்கோட்டை பிரபாகர்
பிரபல நடிகை அபிநயா தங்களை அவமானப்படுத்தியதற்காக பாடம் கற்றுத்தர நடிகர்கள் இனியவனும், தீபக்கும் ஆலோசிக்கிறார்கள்.
முன்கதைச் சுருக்கம்:

பிரபல நடிகை அபிநயா தங்களை அவமானப்படுத்தியதற்காக பாடம் கற்றுத்தர நடிகர்கள் இனியவனும், தீபக்கும் ஆலோசிக்கிறார்கள். இதற்கிடையே தாயாரின் எதிர்ப்பை மீறி சொந்தமாக படம் எடுக்கும் முயற்சியில் அபிநயா ஈடுபடுகிறாள். இந்த விஷயம் அவளுடைய தாயாருக்கு தெரியவர, தான் காதலிக்கும் விக்டர் மூலம் படத்தயாரிப்பு வேலையில் ஈடுபடப்போவதை அபிநயா ஒப்புக்கொள்கிறாள். தான் கர்ப்பமாக இருப்பதாக பொய் சொல்லி படம் தயாரிப்பதற்கு பத்து கோடி முதலீடு செய்வதற்கும் விக்டரை சம்மதிக்க வைக்கிறாள்.

இதற்கிடையே சினிமா நிருபர் ராஜராஜனை சந்திக்கும் இனியவன் அவரிடம், அபிநயாவும், விக்டரும் ரகசியமாக பழகிக்கொண்டிருப்பதை ஆதாரத்துடன் வெளிக்கொண்டு வர உதவுமாறு வேண்டுகிறான். இதையடுத்து அபிநயாவை சந்திக்கும் ராஜராஜன் அவளுக்கு தெரியாமல் விக்டருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை ரகசியமாக தன் செல்போனில் படமெடுத்துவிடுகிறார். அதனை இனியவனிடம் ஒப்படைக்க, அவன் அபிநயாவை பழிவாங்கும் நோக்கத்துடன் தனது டிரைவர் மூலம் சதித்திட்டம் தீட்டுகிறான். இதற்கிடையே அமுதாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்துவரும் வேளையில் அவருடைய அப்பா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறார்.

‘‘அப்பாவுக்கு நெஞ்சு வலியாம்’’ என்றான் ஆனந்தன்.

‘‘அப்பாவா? உங்கப்பா உயிரோட இல்லைன்னு சொன்னியே?’’ என்று ஆச்சரியப்பட்டான் கோபால்.

ஆனந்தன் தலை குனிந்தபடி அமைதியாக இருந்தான். அவன் தோளை ஆறுதலாகத் தொட்டான் கோபால்.

‘‘நான் கேட்டது உன் மனசைப் புண்படுத்திருந்தா மன்னிச்சிடு ஆனந்தா’’

‘‘சேச்சே..நெருக்கமா பழகற உங்கிட்டயே இத்தனைநாளா இந்த உண்மையை மறைச்சதுக்கு நான்தான் மன்னிப்பு கேக்கணும்’’

‘‘பரவால்ல விடு.. இப்பக்கூட நீ எந்த விளக்கமும் எங்கிட்ட சொல்லணும்னு அவசியமில்லை.’’

‘‘இல்ல கோபால். எனக்கும் மனசுல இருக்கற பாரத்தை யார்கிட்டயாவது இறக்கிவெச்சாதான் நிம்மதியா இருக்கும். உனக்குத் தெரியாதது இல்ல.. யாரா இருந்தாலும் அவங்க குடும்ப ரகசியத்தை மறைக்கத்தானே செய்வாங்க.. அப்படித்தான் நான் இந்த விஷயத்தை மறைச்சிட்டேன்’’

‘‘அதுக்காக உயிரோட இருக்கற அப்பாவை இறந்துட்டதாச் சொல்றது ரொம்ப அதிகமாப் படலையா உனக்கு? ஏண்டா அப்படிச் சொன்னே? ஒரு உரிமையிலதான் கேக்கறேன்..’’

‘‘இது உங்கிட்ட மட்டும் சொன்ன பொய் இல்ல. சென்னைக்குநாங்க வந்ததிலேர்ந்து நான் பாக்கற, பழகற எல்லார்கிட்டயும் இப்படித்தான் சொல்லிக்கிட்டிருக்கேன்.’’

‘‘அதான் ஏன்?’’

நீண்ட பெருமூச்சை வெளியேற்றிய ஆனந்தன் அமைதியாக இருந்தான்.

அவனாகப் பேசட்டும் என்றுக் காத்திருந்த கோபால் அதற்குள்கடைக்கு வந்த வாடிக்கையாளருக்கு என்ன வேண்டும் என்று கேட்டு பில் போட்டு பணியாளரிடம் ஒப்படைத்துவிட்டு மீண்டும் ஆனந்தனிடம் வந்தான்.

‘‘சொல்லுப்பா’’

‘‘என் மனசைப் பொருத்தவரைக்கும் அவர் எப்பவோ செத்துப்போய்ட்டார் கோபால். ஆனா இந்தப் பொய்யைச் சொன்னதுக்கு அந்தக் கோபம் மட்டும் காரணமில்லை’’

‘‘வேற என்ன காரணம்?’’

‘‘என் தங்கச்சிக்கு கல்யாணம் நடக்க வேணாமா? நீயே சொல்லு.. எங்கப்பா ஜெயில்ல இருக்கார்னு உண்மையைச் சொன்னா..எந்த சம்மந்தமாவது அமையுமா? எந்த மாப்பிள்ளைதான் தன் மாமனார் ஜெயில்ல இருக்கறதை விரும்புவான்?’’

கோபாலுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

‘‘என்னப்பா அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சியா குடுத்துட்டு இருக்கே? உங்கப்பா எதுக்காக ஜெயிலுக்குப் போனார்?’’

‘‘ஒரு கொலை செஞ்சிட்டு ஜெயிலுக்குப் போயிருக்கார். பத்துவருஷம் கடுங்காவல் தண்டனை!’’

‘‘என்னாச்சு ஆனந்த்? யாரைக் கொலை செஞ்சார்? எதுக்காக செஞ்சார்? விவரமாத்தான் சொல்லேன்..’’

‘‘குடும்பத்துக்காக, இல்லன்னா ஒரு சமூகப் பிரச்சினையை எதிர்த்து நின்னு ஒரு நல்ல காரணத்துக்காக அவர் கொலை செஞ்சிருந்தாலாவது அதை கம்பீரமா வெளில சொல்லிக்க முடியும். கேவலமான விஷயம் கோபால் அது..’’ என்ற ஆனந்தன் விரிவாகச் சொல்லத் தொடங்கினான்.

***

படப்பிடிப்புத் தளத்தில் அபிநயாவுக்கு ஒப்பனை டச்சப் செய்யப்பட்டுக்கொண்டிருக்க.. அருகில் நின்ற உதவி இயக்குனர் அடுத்த ஷாட்டில் அவள் பேச வேண்டிய வசனத்தைப் படித்துக்காட்டத் தயாராக நின்றான்.

அவளோ போனில் மும்முரமாக யாரோ ஒரு நடிகரிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

‘‘நானே டைரக்ட் செய்யப்போறப் படத்துல நீங்க அவசியம் இருக்கணும்னு ஆசைப்பட்டுதான் கேக்கறேன் சார். அந்த ரோல் நீங்க செஞ்சாதான் சரியா இருக்கும்’’

தூரத்தில் கேமராக் கோணத்தை சரிபார்த்து முடித்த இயக்குனர்தன் உதவி இயக்குனரை பெயர் சொல்லி கத்தி அழைத்தார்.

அவன் ஓடோடி வந்தான்.

‘‘என்னய்யா நாலு வரி டயலாக்! இதைச் சொல்லிக் குடுக்க இவ்வளவு நேரமா? ரெடியா? கூப்புடு அவங்களை!’’

‘‘சார்.. அவங்க போன் பேசிட்டே இருக்காங்க. இன்னும் டயலாக் என்னன்னே கேட்டுக்கலை சார்.’’

‘‘போய்யா.. ஷாட் ரெடி.. டைரக்டர் கூப்புடறார்னு சொல்லு’’

மீண்டும் அபிநயாவிடம் ஓடி வந்தான் அவன்.

போனில் பேசியபடியே இதையெல்லாம் கவனித்தபடி இருந்த அபிநயா பேசிமுடித்துவிட்டு, ‘‘என்ன டென்ஷனாகறாரா? பல தடவை எல்லாரும் ரெடியா இருப்போம்.. இவருக்கு வசனம் வரலைன்னு சிகரெட் பிடிச்சி யோசிச்சிக்கிட்டு அத்தனை பேரையும் ஒரு மணி நேரம்கூட காக்க வெச்சிருக்காரு.. சரி.. வசனம் என்ன..படி!’’ என்றாள் அமர்த்தலாக.

‘‘வில்லன் உங்ககிட்ட நாளைக்குள்ள பணத்தை கட்டலைன்னாஒட்டு மொத்த குடும்பத்தையும் கொளுத்திடுவேன்னு சொல்லிருக்கான். அதுக்குதான் நீங்க கவுன்டர் டயலாக் பேசறீங்க.’’

‘‘ஓகே. என்ன பேசறேன்?’’

‘‘வீட்ல ஆம்பளை இல்லாத நேரத்துல வந்து இப்படி கலாட்டா பண்றியே.. உனக்கு வெக்கமா இல்லை? எதுவா இருந்தாலும் நாளைக்கு வந்து பேசு! இதான் மேடம் டயலாக்’’

‘‘கொஞ்சம் உன் டைரக்டரைக் கூப்புடு இங்க’’

அவன் போய்ச் சொன்னதும் எரிச்சலுடன் வந்த டைரக்டரை தன்னருகில் காலியாக இருந்த நாற்காலியில் அமரச்சொன்ன அபிநயா,‘‘சார் எந்த காலத்துல இருக்கீங்க நீங்க? பெண்கள் எல்லாத் துறையிலயும் எவ்ளோ சாதிச்சிட்டிருக்கோம். இப்போப் போய் ஆம்பளை இல்லாத வீடு, அது இதுன்னு எழுதிருக்கிங்களே.. நாங்க என்ன அவ்வளவு கோழையா சார்? ஏன்.. இவளால நறுக்குன்னு பதில் சொல்ல முடியாதா? எதுக்காக இப்படிக் கெஞ்சறா?’’

டைரக்டருக்கு சுர்ரென்று கோபம் வந்தது. அதை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு அமைதியாகச் சொன்னார்,‘‘இத பாருமா..நீ பொறக்கறதுக்கு முன்னாடியே நான் டைரக்டராய்ட்டேன். பெண்கள் பெருமையை அருமையை கொண்டாடற பல படங்கள் குடுத்திருக்கேன். இந்தக் கதையில் அந்தப் பொண்ணை ஒரு பயந்தவளா..கோழையாதான் கேரக்டரை சித்தரிச்சிருக்கோம். அப்படிப்பட்டப் பொண்ணு இப்படித்தானே பேச முடியும்?’’ என்றார்.

‘‘ஆனா பேசறது அபிநயாவாச்சே சார்.. இப்ப எனக்கு இருக்கற சூப்பர் லேடி ஸ்டார் இமேஜுக்கு என் ரசிகர்கள் நான் இப்படி கோழைத்தனமா வசனம் பேசினா ரசிக்க மாட்டாங்க சார்’’

‘‘இது ஹீரோயின் படம் இல்லம்மா. ஹீரோ படம். அடுத்த சீன்ல ஹீரோ அவனைத் தேடிப்போயி என் பொண்டாட்டிகிட்ட வீரம் பேசுனியே, எங்கிட்ட பேசுடான்னு கேட்டு பைட்டும் பண்ணப் போறான்ம்மா. அதுக்கு இந்த சீன்ல நீ இப்படிப் பேசுனாதானே சரியா வரும்?’’

‘‘இல்ல சார். இது சரியா இல்ல. வசனத்தை மாத்துங்க’’

‘‘40 வருஷமா சினிமால இருக்கேன்ம்மா நான்’’

‘‘அதனாலதான் ரொம்பப் பழசா யோசிக்கிறீங்க சார்.’’

‘‘இது நல்லால்ல. இப்ப என்ன செய்யணும்னு சொல்றே?’’

‘‘ஹீரோ மட்டும்தான் கெத்தா பதில் பேசணும்னு இல்ல சார். தன்மானம் பொண்டாட்டிக்கும் இருக்கலாமே. இவளும் அவனை எடுத்தெறிஞ்சிப் பேசற மாதிரி ஒரு பஞ்ச் லைன் பிடிங்க. வசனத்தை மாத்திட்டுச் சொல்லுங்க. நான் கேரவன்ல இருக்கேன்’’ என்ற அபிநயா அவரின் பதிலுக்குக் காத்திருக்காமல் நடக்கத் தொடங்கினாள்.

இயக்குனர் தலையில் அணிந்திருந்த தொப்பியைக் கழற்றி தன்அருகில் நின்றிருந்த உதவி இயக்குனரின் மீது எரிந்துவிட்டு கத்தினார், ‘‘இந்தப் படத்துல இவ வேணாம்னு ப்ரொட்யூசர்ட்ட தலைபாடா அடிச்சிக்கிட்டேன். கேட்டாரா? போன் போட்டு வரச் சொல்லுடா. தினம் இவளோட ஒரே ரோதணையாப் போச்சி’’

கேரவன் உள்ளே வந்து அமர்ந்துகொண்ட அபிநயா தனக்காக இரண்டு பெரிய பேக்குகளுடன் காத்திருந்த நபரை உள்ளே வரச் சொன்னாள்.

‘‘சார் குடுத்துட்டு வரச் சொன்னாரு மேடம்’’ என்று அவன் இரண்டு பேக்குகளையும் வைத்துவிட்டு,‘‘வந்துடுச்சின்னு போன் பண்ணி சொல்லச் சொன்னார்’’ என்றான்.

தலையசைத்து அவனை போகச் சொல்லிவிட்டு போனில் விக்டரை அழைத்தாள்.

‘‘ஹாய் ஹனி டியர்.. வந்துடுச்சிப்பா. ஸோ நைஸ் ஆப் யூ. சொன்ன சொல் தவறாம நடந்துக்கிட்டிங்க..’’

‘‘இப்ப நான் ஒரு மீட்டிங்ல இருக்கேன். அப்பறம் பேசறேன்’’

போனை அபிநயா துண்டித்ததும் மீண்டும் அடித்தது. புது எண்ணாக இருந்தது. ஒரு சின்ன தயக்கத்திற்குப் பிறகு ,‘‘ஹலோ’’ என்றாள்.

‘‘அபிநயா..உனக்கு வாட்ஸ் ஆப்ல சில புகைப்படங்கள் அனுப்பிஇருக்கேன். பார்த்து ரசி. மறுபடியும் கூப்புடறேன்’’ என்றது ஒரு ஆண் குரல்.

குழப்பமாக தன் போனில் வாட்ஸ் ஆப் சென்று பார்த்தாள். அங்கு ஏழெட்டு புகைப்படங்கள் வந்திருந்தன. அவை அவளும் விக்டரும் நெருக்கமாக இருக்கும் காதல் புகைப்படங்கள்.

உச்சமாக அதிர்ந்து போனாள் அபிநயா.

-தொடரும்.