சிறப்புக் கட்டுரைகள்

வெண்குடை ஊர்வலம் + "||" + Bronze march

வெண்குடை ஊர்வலம்

வெண்குடை ஊர்வலம்
சித்திரை திருநாள் கொண்டாட்டம் ஊருக்கு ஊர் வேறுபடுகிறது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ‘வெண்குடை திருவிழா’ என்ற பெயரில் விமரிசையாக நடத்தப்படுகிறது.
அந்த விழாவுக்கும், புராண காலத்துக்கும் ஓர் தொடர்பு உண்டு, என்கிறார்கள். அது என்ன தெரியுமா?...

பண்டைய காலத்தில் மருத நிலத்தை சேர்ந்த மக்கள் சித்திரையில் இந்திர விழா கொண்டாடினார்கள். அப்போது தேவர் களின் அரசனான இந்திரன், தனது வாகனமான வெண்ணிற யானையின் (ஐராவதம்) மீது அமர்ந்து பவனி வருவார். பவனியில் அவருக்கு வெண்ணிற குடையினை தலையின் மேல் பிடித்து வருவார்கள்.

மன்னர் ஆட்சி காலத்திலும் இது போன்று அரசர்களுக்கும், அவர்களது குடும்ப பிரதி நிதிகள், தளபதிகள் உள்ளிட்ட முக்கிய பதவிகளில் இருப்பவர் களுக்கும் வெண்குடை மரியாதை அளிக்கும் வழக்கம் இருந்துள்ளது. ஆனால், சாதாரண குடிமக்களுக்கு இந்த வெண்குடையை பயன்படுத்த அனுமதி கிடையாது.

அதை நினைவு படுத்தும் விதத்தில் இப்போதும் ராஜபாளையத்தில் வெண்குடை திருவிழா நடந்து வருகிறது. அதாவது சித்திரை 1-ந் தேதியன்று வெண்ணிறத்திலான குடையினை ஒருவரிடம் கொடுத்து முக்கிய வீதிகள் வழியாக விழாக் குழுவினர் அழைத்து வருவார்கள்.

அப்போது வெண்குடை ஏந்தி வரும் நபர் தனது இடது காலில் பெரிய அளவிலான தண்டை அணிந்து இருப்பார். தமிழர்களின் பாரம்பரியத்தை பறை சாற்றும் விதமாக பறை, நாதஸ்வரம், மேளம், தப்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடக்கும். யானையும் நடந்து வரும். ஊர்வலம் அப்படியே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள நீர்காத்த அய்யனார் கோவிலுக்கு செல்லும். அங்கு சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறும். பக்தர்கள் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்வார்கள். பின்னர் மீண்டும் ஊர்வலம் ஊரை நோக்கி திரும்பி வரும்.