சிறப்புக் கட்டுரைகள்

இயந்திரம் தமிழ் பேசுகிறது., இதயங்கள் பேசக்கூடாதா? + "||" + The machine speaks Tamil., Hearts can't speak?

இயந்திரம் தமிழ் பேசுகிறது., இதயங்கள் பேசக்கூடாதா?

இயந்திரம் தமிழ் பேசுகிறது., இதயங்கள் பேசக்கூடாதா?
தமிழ்நாட்டில் உள்ள தொடர்வண்டி நிலையங்களில் உள்ள நிலைய அதிகாரிகளும் கட்டுப்பாட்டு அலுவலர்களும் தங்களுக்குள் தகவல் பரிமாற்றத்துக்காக இந்தி அல்லது ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
மாநில மொழியான தமிழில் பேசக் கூடாது என்று உத்தரவு போட்டதாகச் செய்தி வந்தது. தமிழ்நாட்டில் அதற்கு எதிர்ப்புகள் எழுந்தபோது, அந்த உத்தரவைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்கள் என்று தற்போது சொல்கிறார்கள். அவ்வாறு திரும்பப் பெற்றுக் கொண்டதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த உத்தரவு வந்ததற்கு என்ன காரணம் என்று பார்ப்போம்.

சில நாட்களுக்கு முன், மதுரை திருமங்கலம் அருகே ஒரே இருப்புப் பாதையில் எதிர் எதிரே இரு ரெயில்கள் சென்றதால் பெருவிபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டது. நிலைய அதிகாரி ஒருவர், வேறு நிலையத்திலிருந்த அதிகாரிக்கு ரெயிலை நிறுத்துமாறு தமிழில் சொல்லி உள்ளார். அவருக்குத் தமிழ் தெரியாதாம். அதனால் இரு ரெயில்களும் மோத இருந்தனவாம். அந்த அதிகாரிக்குத் தமிழ் தெரியவில்லை என்றால், தனக்குப் புரியவில்லை. ஆங்கிலத்தில் சொல்லுங்கள் எனக் கேட்டிருக்க வேண்டும். என்ன காரணமோ அவர் புரிந்ததுபோல் இருந்துள்ளார். அப்படி இருந்தும் இரு ரெயில்கள் ஒரே பாதையில் வருவதை அதிகாரிகள் எப்படியோ தடுத்து நிறுத்தி உள்ளார்கள். பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதில் பெருமகிழ்ச்சியே. ஒரு அதிகாரிக்குத் தமிழ் தெரியவில்லை என்பதால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரெயில்நிலைய அதிகாரிகளும் இந்தியில் அல்லது ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்று தெற்கு ரெயில்வே நிர்வாகத்தினர் உத்தரவு போட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மெத்த படித்த பலருக்கே ஆங்கிலம் தெரியவில்லை. அந்த நிலையில் இந்தி மட்டும் தெரிந்த அதிகாரியிடம் ஆங்கிலம் தெரிந்த அதிகாரி ஆங்கிலத்தில் பேசினாலும் இவ்வாறான விபத்து நேரிடலாம். அப்போது என்ன சொல்வார்கள். அதிகாரிகள் இந்தியில் மட்டும்தான் பேச வேண்டும் என்று உத்தரவிடக் கூடும்.

இந்தி பேசும் மாநில மக்கள், தென்மாநிலங்களில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில், பொதுத்துறை நிறுவனங்களில் பெருமளவில் வேலைக்கு அமர்த்தப்பட்டு உள்ளனர். தற்போது தமிழக அரசு வேலைகளிலும் பிற மொழி பேசும் மக்கள் நியமிக்கப்படுகின்றனர் எனச் சொல்கிறார்கள். வங்கிகளிலும் பிற மாநில இளைஞர்கள் பணிகளில் உள்ளனர். இவ்வாறே பிற மாநிலப் பணிகளில் நம் தமிழ்மக்களும் அமர்த்தப்பட்டிருக்கலாம். இந்த நிறுவனங்கள் எல்லாம் மக்களுடன் நேரடியாகத் தொடர்புடையவை. மாநில மொழிபுரியாமல் மக்களுக்காக எவ்வாறு இவர்கள் சேவையாற்ற முடியும்?

அண்மையில் சென்னையில் அஞ்சல் அலுவலகத்தில் தமிழில் முகவரிகள் எழுதப்பட்ட பதிவஞ்சல்களைப் பதிவு செய்ய மறுத்துள்ளார்கள். காரணம் அந்த அலுவலருக்குத் தமிழ் தெரியாதாம். இதேபோல் தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகள் தெரிந்த நம் மாநில இளைஞர் ஒருவர், கர்நாடகாவில் பணியமர்த்தப்பட்டாலும் அங்குள்ள மக்களுக்குச் சிரமம்தான்.

தமிழ்நாட்டு வங்கிகளில் பொதுத்துறை நிறுவனங்களில் பலர் வேற்றுமொழி பேசுபவர்களாக உள்ளனர். அவர்களிடத்தில் நம் மக்கள் பேச முடியவில்லை. பேசினாலும் அந்த அலுவலர்களில் சிலர், மொழி புரியாத காரணத்தினால் “தேமே” என்று உட்கார்ந்திருக்கிறார்கள்.

மக்களுக்காக மொழியா? அரசுக்காக மொழியா? என்பதை அறிய வேண்டிய தருணம் இது.

இந்தியா என்பது பலமொழிகள், பல இனங்கள், பல மதங்கள், பல பண்பாடுகள் கொண்டு சிறந்து விளங்கும் நாடு. வேற்றுமையிலும் ஒற்றுமை என்பது நம்பெருமை ஆகும். அந்த வகையில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் இந்த நாட்டின் எஜமானன்தான். அந்தக் குடிமகனுக்குப் புரியும் மொழியில் சேவையாற்ற வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும்.

நம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ஐ.பி.எஸ். அதிகாரிகள் பல மாநிலங்களில் பணியாற்றுகிறார்கள். எந்த மாநிலத்தில் பணியாற்றுகிறார்களோ அந்த மாநில மொழியைக் கற்றுக்கொண்டு மக்களிடத்தில் உரையாடுகிறார்கள். வடமாநிலங்களில் இருந்து நம் மாநிலத்துக்கு வந்த பல உயர் அதிகாரிகள், நன்றாகத் தமிழ் பேசுகிறார்கள். பணிக்கு வந்த புதிதில் சரியாக மொழி பேச முடியாத போது மொழி பெயர்ப்பாளர்களை வைத்து மக்களிடத்தில் உரையாடுகிறார்கள். இதுபோல் தமிழகத்திலிருந்து சென்ற அதிகாரிகள் அந்தந்த மாநில மொழிகளைக் கற்று அந்த மக்களோடு உரையாடுகிறார்கள். அப்படி இருந்தால்தான் மக்களிடத்தில் நெருங்கிப் பணியாற்ற முடியும்.

வெள்ளைக்காரர்கள் கூட இந்தியாவை ஆண்டபோது, அந்தந்த வட்டார மொழிகளைக் கற்றுப் பேசினார்கள். மொழிபெயர்ப்பாளர்களை வைத்துக் கொண்டார்கள். மக்களின் மொழிக்கு மரியாதை தர வேண்டும். மாநில மொழி தெரியாத ஒரு சில அதிகாரிகளுக்காக ஒட்டுமொத்த மாநில மக்களும் தங்கள் தாய்மொழியைத் துறந்து வேற்று மொழியில்தான் பேச வேண்டும் என்று சொல்வது சமநீதி அல்ல.

நம் வங்கிகளில் அதிகாரிகள் பலர், வேற்று மொழியினராக இருக்கிறார்கள். அவர்களை நம்மக்கள் எளிதாக அணுக முடியவில்லை. ஆனால் அதே நேரத்தில் வங்கியின் வெளியில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில், கணக்குப்புத்தகப் பதிவு இயந்திரங்களில் தமிழ்மொழிப் பயன்பாடு உள்ளது. பலரும் தமிழில் அந்த இயந்திரங்களை இயக்குகிறார்கள். மேலும் தமிழ் எழுத்துகள் திரையில் தெரிகிற போதே அதன் பேச்சொலி காதில் விழுகிறது. அந்தத் தமிழ் வழிகாட்டுதல்படி நம் மக்கள் அந்த இயந்திரங்களைப் பயன்படுத்திச் சேவையைப் பெறுகிறார்கள். ஆக இயந்திரம் தமிழ்பேசுகிறது. இதயங்கள் பேசக் கூடாதா?

மொழிப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்பது எளிதல்ல. எனினும் இந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வு.? அந்தந்த மாநில மக்களுக்கே வேலைகளில் பெரும்பங்கு கொடுக்கப்பட வேண்டும். பிற மாநிலத்தில் வேலைகளில் அமர்கின்றவர்கள் கட்டாயமாக அந்த மாநில மொழியைக் கற்றிருக்க வேண்டும்.

- கோ.மன்றவாணன், வக்கீல், மாவட்ட நீதிமன்றம். கடலூர்