அமெரிக்காவின் ‘பென்டகன்’


அமெரிக்காவின் ‘பென்டகன்’
x
தினத்தந்தி 3 Nov 2019 6:33 AM GMT (Updated: 3 Nov 2019 6:33 AM GMT)

ஆதி முதல் இன்று வரை அதன் உருவங்கள், தன்மைகள் மாறி இருக்கலாம். ஆனால் அதன் நோக்கம் மட்டும் மாறவில்லை.

யுதங்கள்...

ஆதி முதல் இன்று வரை அதன் உருவங்கள், தன்மைகள் மாறி இருக்கலாம். ஆனால் அதன் நோக்கம் மட்டும் மாறவில்லை.

உயிர் பாதுகாப்பில் மனிதனுக்கு உள்ள அச்ச உணர்வுதான் ஆயுதங்கள் உருவாக முக்கிய காரணமாக அமைந்தது.

கற்காலத்தில் காடுகளில் வாழ்ந்த மனிதன் விலங்குகளிடம் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள கல், கம்பு ஆகியவற்றை ஆயுதங்களாக பயன்படுத்தினான். மிருகங்களை வேட்டையாட வில்-அம்பை கண்டுபிடித்தான்.

கூட்டமாக சேர்ந்து வாழத்தொடங்கிய பிறகும் மனிதனுக்கு அச்ச உணர்வு நீங்கவில்லை. மற்றவர்களிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள உலோகங்களை பயன்படுத்தி ஆயுதங்களை தயாரித்தான்.

மண்ணாசை கொண்ட மன்னர்கள் ஆண்டபோது தங்கள் பாதுகாப்புக்கும், எதிரிகளை வீழ்த்தி பிற நாடுகளை கைப்பற்றவும் ஆயுதங்களை தயாரித்து கிடங்குகளில் குவித்தார்கள். இந்த காலகட்டத்தில்தான் படைகள் உருவாயின.

நாகரிகம் மேம்பட்டு, தகவல் தொடர்பு மற்றும் விஞ்ஞான வளர்ச்சி அடைந்த பின்னரும் கூட தனி மனிதனுக்கு மட்டுமின்றி, ஒவ்வொரு நாட்டுக்கும் தனது பாதுகாப்பை பற்றிய அச்ச உணர்வு உள்ளது. பாதுகாப்புக்காக மட்டுமின்றி, பிற நாடுகளை அச்சுறுத்தவும் ஒவ்வொரு நாடும் ஆயுதங்களை தயாரிக்கிறது. அது போதாத பட்சத்தில் பிற நாடுகளிடம் இருந்து விலை கொடுத்து வாங்குகிறது.

அந்த வகையில் எல்லா நாடுகளுமே தங்கள் ராணுவத்தை பலப்படுத்தி வருகின்றன. ராணுவத்துக்காக அதிக தொகையையும் செலவிடுகின்றன.

சினிமாவில் பார்த்து இருப்போம்... 18 பட்டிக்கும் ஒரு நாட்டாமை இருப்பார். பணம், ஏராளமான நிலபுலன்கள், ஆள், அம்பு, சேனை என்று வசதியாக இருக்கும் அவர், மீசையை முறுக்கிக் கொண்டு பந்தாவாக அலைவார். அந்த 18 பட்டிக்கும் அவர் இட்டதுதான் கட்டளை. உள்ளுக்குள் குமுறினாலும், பெரிய இடத்து பொல்லாப்பு நமக்கு எதற்கு? என்று எல்லோரும் வாயை பொத்திக்கொண்டு போய்விடுவார்கள்.

ஊருக்கு ஒரு நாட்டாமை என்றால், உலகுக்கு ஒரு நாட்டாமை இருக்கத்தானே செய்வார். அவர்தான் பெரிய அண்ணன் அமெரிக்கா. பொருளாதாரம், வர்த்தகம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், படைபலம் என்று கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் 50 மாநிலங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தேசமான அமெரிக்கா, உலகின் நம்பர் 1 நாடாக விளங்குவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

வசதியாக இருப்பதால் பல நாடுகளுக்கு கடன் கொடுக்கிறது. கடன் வாங்கிய நாடுகளை தனது கைக்குள் வைத்துக் கொள்கிறது.

அண்டை நாடுகள் அடிக்கடி வாலாட்டுவதாலும், பயங்கரவாதிகளை சமாளிக்கவும் சில நாடுகள் முறையிடும் போது, அந்த நாடுகளில் பாதுகாப்புக்காக அமெரிக்கா தனது படைகளை நிறுத்துகிறது. அப்படி படைகள் நிறுத்தப்பட்ட நாடுகளின் குடுமியும் அமெரிக்காவின் கையில்தான் என்பதை சொல்லவேண்டியதில்லை.

அந்த வகையில் 150 நாடுகளில் அமெரிக்க ராணுவம் உள்ளது. அதிகபட்சமாக தலீபான்களுடன் மல்லுக்கு நிற்கும் ஆப்கானிஸ்தானில் 1 லட்சத்து 3,700 அமெரிக்க ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர். வட கொரியாவின் குடைச்சலை சமாளிக்க தென்கொரியாவில் 28,500 வீரர்களையும், ஜெர்மனியில் 52,440 வீரர்களையும், ஜப்பானில் 35,688 வீரர்களையும் அமெரிக்க ராணுவம் நிறுத்தி இருக்கிறது.

உலகிலேயே பலம் பொருந்திய ராணுவமாக கருதப்படும் அமெரிக்க ராணுவத்தில் 12 லட்சத்து 81 ஆயிரத்து 900 வீரர்கள் உள்ளனர். இவர்கள் தவிர ரிசர்வ் வீரர்கள் என்ற வகையில் 8 லட்சத்து 1,200 பேர் இருக்கிறார்கள். அளவை பொறுத்தமட்டில் (வீரர்களின் எண்ணிக்கை) சீனா, இந்தியாவுக்கு அடுத்தபடியாக 3-வது பெரிய படையாக அமெரிக்க ராணுவம் விளங்குகிறது.

மற்ற நாடுகளை விட ராணுவத்துக்காக அமெரிக்கா அதிகம் செலவிடுகிறது. 2017-ம் ஆண்டில் அமெரிக்க ராணுவத்துக்கான பட்ஜெட் தொகை 610 பில்லியன் டாலர் ஆகும்.

பணக்கார நாடான அமெரிக்காவிலும் வேலையில்லா திண்டாட்டம், அகதிகள் ஊடுருவல், பொருளாதார நெருக்கடி என்று பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. என்றாலும் உலகில் தனது அந்தஸ்தை காப்பாற்றிக் கொள்ளவும், செல்வாக்கை நிலைநிறுத்தவும் ராணுவத்துக்காக அதிகம் செலவிடுகிறது.

ஒரு காலத்தில் ரஷியாதான் எல்லா வகையிலும் அமெரிக்காவுக்கு சரியான போட்டியாக விளங்கியது. ரஷியா பல நாடுகளாக சிதறுண்ட பின், தற்போது சீனாதான் அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக விளங்குகிறது. பொருளாதார வளர்ச்சி, ராணுவ பலம் என்று எல்லா துறைகளிலும் அமெரிக்காவுக்கு சரிசமமாக தற்போது சீனா முண்டா தட்டிக்கொண்டு நிற்கிறது.

இதனால் சீனாவின் போட்டியை சமாளிக்க அமெரிக்கா தொடர்ந்து தனது படைகளை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

தன்னிகரற்ற அமெரிக்க ராணுவம் சகல வல்லமை பொருந்தியது என்றால், அதன் தலைமையகம் எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை.

பலம் பொருந்திய அமெரிக்க ராணுவத்தின் தலைமையகம் ‘பென்டகன்’ என அழைக்கப்படுகிறது.

தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டும் என்பார்கள். அப்படித்தான் பென்டகனில் எடுக்கப்படும் முடிவுகள் அமெரிக்காவை மட்டும் சார்ந்து அல்லாமல் சர்வதேச அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது

அவ்வளவு சக்திவாய்ந்த இடமான பென்டகன், விர்ஜீனியாவில் போட்டோமோக் நதிக்கரையில் அமைந்துள்ளது. பென்டகன் என்றால் ஐங்கோணம் என்று அர்த்தம். அதன்படி, இந்த ராணுவ தலைமையக கட்டிடம் ஐங்கோண வடிவில் கட்டப்பட்டு இருக்கிறது.

65 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட பென்டகன்தான் உலகிலேயே மிகப்பெரிய அலுவலக கட்டிடம் ஆகும். இதில் 37 லட்சம் சதுர அடி அலுவலகமாக பயன்படுத்தப்படுகிறது. தரை தளத்துக்கு மேல் 5 தளங்களும், பூமிக்கு அடியில் 2 தளங்களும் கொண்ட இந்த பிரமாண்ட கட்டிடத்தில் ராணுவம் மற்றும் சிவில் பிரிவைச் சேர்ந்த 23 ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள். இவர்கள் தவிர ராணுவம் அல்லாத பிற ஆதரவு ஊழியர்களாக 3 ஆயிரம் பேரும் பணிபுரிகிறார்கள்.

ஜார்ஜ் பெர்க்ஸ்டிராம் என்ற கட்டிட கலை நிபுணர் வடிவமைத்த இந்த கட்டிடத்தை கட்டும் பணி ஜான் மெக்ஷைன் என்ற ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1941-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி கட்டுமான பணி தொடங்கியது. 71 அடி உயரம் கொண்ட ஐங்கோண வடிவிலான இந்த கட்டிடத்தின் ஒவ்வொரு பக்கமும் 921 அடி நீளம் உடையது.

கட்டுமான பணி நடந்த போது இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்ததால் இரும்புக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவியது. இதனால் இரும்பின் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டது. கட்டுமானத்துக்காக போட்டோமாக் நதியில் இருந்து 6 லட்சத்து 80 ஆயிரம் டன் மணல் எடுக்கப்பட்டது. கணிசமான சுண்ணாம்பும் பயன்படுத்தப்பட்டது.

இந்த கட்டிடத்தில் பாதுகாப்பு துறை அலுவலகங்கள் மட்டுமின்றி உடற்பயிற்சி கூடங்கள், தியானம் மற்றும் பிரார்த்தனை நடத்துவதற்கான அறைகள், உணவகங்கள் போன்றவையும் உள்ளன.

‘ஹால் ஆப் ஹீரோஸ்‘ என்ற பெயரில், ராணுவத்தில் ‘மெடல் ஆப் ஹானர்‘ என்ற உயரிய விருது பெற்ற அமெரிக்க ராணுவ வீரர்களை கவுரவிக்கும் வகையில் ஒரு மிகப்பெரிய மண்டபமும் இங்கு இருக்கிறது. விருது பெற்ற முப்படை வீரர்களின் பெயர்கள் அங்கு பொறிக்கப்பட்டு உள்ளன.

ராணுவத்தினரின் பதவி உயர்வு, பணி ஓய்வு நிகழ்ச்சிகளும், பிற விழாக்களும் இங்கு நடைபெறும்.

3 கோடியே 11 லட்சம் டாலர் (சுமார் ரூ.218 கோடி) செலவில் கட்டி முடிக்கப்பட்ட பென்டகன் கட்டிடம் 1943-ம் ஆண்டு ஜனவரி 15-ந் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

பென்டகன் கட்டிடத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் முன் அப்போது ஜனாதிபதியாக இருந்த ரூஸ்வெல்ட், அங்கு சென்று பார்வையிட்டார். அந்த காலகட்டத்தில் விர்ஜீனியா மாகாணத்தில் இனவெறி பாகுபாடு சட்டம் அமலில் இருந்தது. இதனால் கட்டிடத்தில் வெள்ளையர்கள், கறுப்பினத்தவர்களுக்கென்று தனித்தனியாக உணவகங்கள், கழிவறைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அதைப்பார்த்த ரூஸ்வெல்ட் அந்த பாகுபாட்டை உடனடியாக நீக்குமாறு உத்தரவிட்டார்.

பாதுகாப்பு மிகுந்த பென்டகன் முன்பு, அமெரிக்க அரசின் கொள்கைகளை கண்டித்து அவ்வப்போது போராட்டங்கள் நடத்தப்படுவது உண்டு. வியட்நாம் போர் நடைபெற்ற காலத்தில் பலமுறை போராட்டங்கள் நடைபெற்று உள்ளன. வியட்நாம் போரை நிறுத்தக் கோரி 1967-ம் ஆண்டு அக்டோபர் 21-ந் தேதி நடைபெற்ற போராட்டத்தில் 35 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அப்போது பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

பென்டகன் கட்டிடத்தின் 4-வது தளத்தில் உள்ள பெண்கள் கழிவறையில் 1972-ம் ஆண்டு மே 19-ந் தேதி குண்டு வெடித்தது. வியட்நாம் போர் இறுதி கட்டத்தில் இருந்த போது, அந்த நாட்டின் தலைநகர் ஹனோய் மீது அமெரிக்கா குண்டு வீசியதற்கு பழிவாங்கும் வகையில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டதாக பின்னர் தெரியவந்தது.

ஈராக் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்கு எதிராக 2007-ம் ஆண்டு மார்ச் 17-ந் தேதி சுமார் 15 ஆயிரம் பேர் திரண்டு, லிங்கன் நினைவிடத்தில் இருந்து பென்டகனை நோக்கி பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

போராட்டங்கள் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக பென்டகன் கட்டிடம் எப்போதும் உச்சக்கட்ட பாதுகாப்பிலேயே இருந்து வருகிறது.

விமான தாக்குதலில் உருக்குலைந்த கட்டிடம்

பெரிய மனிதர்கள் என்றால் அவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் அதிகம் இருக்கும். அதேபோல் அவர்களுக்கு ஆபத்தும் அதிகம். இது தனி மனிதர்களுக்கு மட்டும் அல்ல; முக்கியமான இடங்கள் மற்றும் கட்டிடங்களுக்கும் பொருந்தும்.

சக்திவாய்ந்த அமெரிக்காவின் மிக முக்கிய இடமான பென்டகன் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி சேதம் அடைந்ததை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

அமெரிக்காவில் பின்லேடனின் ‘அல்கொய்தா‘ பயங்கரவாதிகள் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந் தேதி, அங்குள்ள பல்வேறு நகரங்களில் இருந்து பயணிகள் விமானங்களை கடத்திச் சென்று நியூயார்க் வர்த்தக மைய கட்டிடம் உள்ளிட்ட சில இடங்களில் மோதி பலத்த உயிர்ச்சேதத்தையும், பொருட்சேதத்தையும் ஏற்படுத்தி உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்தனர். அப்படி பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட கட்டிடங்களில் பலத்த பாதுகாப்பு மிகுந்த இரும்பு கோட்டை போன்ற பென்டகனும் ஒன்று.



வாஷிங்டனில் இருந்து லாஸ்ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்று கொண்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தை பயங்கரவாதிகள் கடத்தி வந்து காலை 9.37 மணிக்கு பென்டகன் கட்டிடத்தின் மேற்கு பகுதியின் மீது மோதினார்கள்.

விமானம் வெடித்துச் சிதறி தீப்பிடித்ததில் பென்டகன் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

இந்த கொடூர தாக்குதலில் விமானத்தில் இருந்த பயணிகள் 59 பேர், பயங்கரவாதிகள் 5 பேர் மற்றும் கட்டிடத்தில் இருந்த 125 பேர் என மொத்தம் 189 பேர் பலி ஆனார்கள்.

தீப்பிடித்த கட்டிடம் இடிந்து விழ சுமார் 30 நிமிடம் ஆனது. அதற்குள் கட்டிடத்துக்குள் இருந்த பெரும்பாலானவர்கள் வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவத்தின்போது பென்டகன் கட்டிடத்தை சீரமைக்கும் பணி நடந்து கொண்டு இருந்தது. விமான தாக்குதலில் உருக்குலைந்த பென்டகன் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்டு, மீண்டும் புதுப்பொலிவு பெற்றது.

தாக்குதலில் உயிர் இழந்தவர்களின் நினைவாக அங்கு 2 ஏக்கர் நிலப்பரப்பில் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டு 2008-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி திறக்கப்பட்டது.

இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, பென்டகனை சுற்றுலா பயணிகள் பார்வையிட தடை விதிக்கப்பட்டது.

பென்டகனுக்கான கட்டுமான பணி 1941-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி தொடங்கியது. சரியாக 60 ஆண்டுகள் கழித்து 2001-ம் ஆண்டு அதே செப்டம்பர் மாதம் 11-ந் தேதி அந்த கட்டிடம் பெரும் தாக்குதலுக்கு இலக்காகி சேதம் அடைந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

பென்டகனின் வைர விழாவில் இப்படியொரு மறக்க முடியாத சோகம் நிகழ்ந்தது வரலாற்றில் நிலைத்துவிட்டது.

1812-ம் ஆண்டு தொடங்கி 1814 வரை அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நடைபெற்ற போரில், இங்கிலாந்து படைகளின் குண்டுவீச்சில் வாஷிங்டன் நகரில் பல கட்டிடங்கள் எரிந்து நாசமாயின. அதன்பிறகு வெளிநாட்டைச் சேர்ந்தவர்களால் அமெரிக்காவில் நடத்தப்பட்ட முதல் பெரிய தாக்குதல் இது என கருதப்படுகிறது.

அமெரிக்கா-ஒரு பார்வை


* பரப்பளவு 9,83,520 சதுர கி.மீ.

* மக்கள் தொகை 32 கோடியே 72 லட்சம். இதில் 82 சதவீதம் பேர் நகரங்களில் வசிக்கிறார்கள்.

* அமெரிக்க மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் 4.3 சதவீதம் என்றபோதிலும், உலக சொத்து மதிப்பில் 31 சதவீதம் அமெரிக்கர்களிடம் உள்ளது.



* உள்நாட்டு மொத்த உற்பத்தி 20.891 டிரில்லியன் டாலர்.

* தனி நபர் ஆண்டு வருமானம் 62,518 டாலர்.

* 1,000 பேருக்கு 765 வாகனங்கள் உள்ளன.

* கடற்கரையின் நீளம் 19,924 கி.மீ.

* அண்டை நாடுகளுடன் எல்லை 12,048 கி.மீ.

* சாலைகளின் மொத்த நீளம் 64 லட்சம் கி.மீ.

* ரெயில் பாதைகளின் மொத்த நீளம் 2,50,000 கி.மீ.

* நீர்வழிப்பாதை 41,009 கி.மீ.

* அமெரிக்காவின் தேசிய கொடியில் உள்ள 50 நட்சத்திரங்கள் அங்குள்ள 50 மாநிலங்களை குறிப்பிடுகின்றன.

Next Story