ரெயிலில் ஏ.சி. பெட்டிகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம்...


ரெயிலில் ஏ.சி. பெட்டிகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம்...
x

நீங்கள் அடிக்கடி ரெயிலில் பயணிப்பவராக இருந்தால், நீண்ட தூரம் செல்லும் ரெயில்களில் எப்போதும் ரெயிலின் குறிப்பிட்ட பகுதியில் ஏ.சி. பெட்டிகள் இணைக்கப்பட்டிருப்பதை கவனித்திருப்பீர்கள்.

பொதுவாகவே ரெயிலின் என்ஜினுக்கு அடுத்து பொது பெட்டிகள், அதற்கு அடுத்து ஏ.சி. பெட்டிகள், அடுத்து படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், பின்பு பொது பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். சில ரெயில்களில் என்ஜினுக்கு அடுத்தபடியாக இணைக்கப்படும் பொது பெட்டிக்கு அடுத்தும், கடைசியாக இணைக்கப்படும் பொதுப்பெட்டிக்கு முன்பாகவும் ஏ.சி. பெட்டிகள் அமைந்திருக்கும்.

இந்திய ரெயில்வே, இந்த முடிவுக்கான காரணத்தை குறிப்பிடவில்லை. ஆனால் ஏ.சி. பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் சவுகரியமாகவும், வசதியாகவும் பயணிக்கும் நோக்கோடு இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ரெயிலின் இருபுறமும் பொது பெட்டிகள், லக்கேஜ் பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட பெட்டி களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதனை ஒப்பிடும்போது ஏ.சி. பெட்டிகளில் பயணிகளின் கூட்டம் குறைவாகவே இருக்கும்.

அதேவேளையில் ஏ.சி பயணிகள் சில கூடுதல் வசதிகைளயும் பெறுவார்கள். பெரும்பாலான ரெயில் நிலைய வாசல்களின் நடுவிலோ, வெளியேறும் பகுதியிலோ ஏ.சி. பெட்டிகள் அமைந்திருப்பதை கவனித்திருப்பீர்கள். இதனால், ஏ.சி பெட்டியில் பயணிக்கும் பயணிகள், லக்கேஜுடன் பயணிக்கும் போது, எவ்வித சிரமமும் ஏற்படுவதில்லை. அந்த அளவுக்கு வெளியேறும் வாசலுக்கு அருகில் ஏ.சி பெட்டிகள் அமைந்திருக்கும்.

ஆங்கிலேயர் காலத்தில் நீராவி என்ஜின்கள் மூலம் ரெயில் இயக்கப்பட்டபோது என்ஜினுக்கு அருகில் ஏ.சி பெட்டிகள் வைக்கப்பட்டன. ஆனால், என்ஜின் சத்தத்தால் ஏ.சி வகுப்பில் பயணம் செய்த பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். அதைக் கருத்தில் கொண்டு, ஏ.சி பெட்டிகள் என்ஜினில் இருந்து தள்ளி வைக்கப்பட்டன. அந்த நடைமுறை இன்றும் தொடர்கிறது.


Next Story