11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தொடங்கியது


11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தொடங்கியது
x
தினத்தந்தி 1 March 2023 6:45 PM GMT (Updated: 1 March 2023 6:46 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தொடங்கியது.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் விரைவில் 11, 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்த பொதுத்தேர்வின் ஒரு பகுதியான செய்முறை தேர்வு இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல், கணினி அறிவியல், புவியியல், கணக்கு பதிவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு நேற்று முதல் தொடங்கியது.

மாவட்டம் முழுவதும் 161 செய்முறை தேர்வு மையங்களில் 193 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கு செய்முறை தேர்வுகள் தொடங்கின. இதில் 11-ம் வகுப்பு செய்முறை தேர்வுகளில் 21,857 மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் ஈடுபட்டனர். அதேபோல் 12-ம் வகுப்பு செய்முறை தேர்வை 23,074 மாணவ- மாணவிகள் எழுதினர்.

இந்த தேர்வு பணியில் முதுகலை, தொழிற்கல்வி மற்றும் கணினி பயிற்றுனர்கள், ஆசிரியர்கள் என 672 பேரும் மற்றும் 250 புறத்தேர்வர்களும் ஈடுபடுத்தப்பட்டு தேர்வை கண்காணிக்கும் பணியை மேற்கொண்டனர்.

விழுப்புரம், திண்டிவனம் ஆகிய கல்வி மாவட்ட அலுவலர்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களை நேரில் கண்காணித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா, விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற செய்முறை தேர்வை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவ- மாணவிகள், செயல்முறை தேர்வுக்கும், கருத்தியல் தேர்வுக்கும் சிறப்பான முறையில் படித்து தேர்ச்சி பெறுமாறு அறிவுரை வழங்கினார். இந்த செய்முறை தேர்வானது வருகிற 9-ந் தேதி வரை நடைபெறுகிறது.


Next Story