பஸ்சில் 2 பெண்களிடம் 13½ பவுன் தங்க சங்கிலி பறிப்பு
நெல்லையில் பஸ்சில் சென்ற 2 பெண்களிடம் 13½ பவுன் தங்க சங்கிலிகளை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை பாளையங்கோட்டை அண்ணாநகரை சேர்ந்தவர் தமிழ்செல்வி (வயது 52). இவர் நேற்று முன்தினம் வீட்டுக்கு செல்வதற்காக நெல்லை சந்திப்பு பஸ் நிறுத்தம் முன்பு இருந்து அரசு பஸ்சில் ஏறினார். அதே பஸ்சில் கைக்குழந்தையுடன் ஒரு பெண் பஸ்சில் ஏறியுள்ளார். இதனை பார்த்த தமிழ்செல்வி அந்த குழந்தையை வாங்கி தனது மடியில் வைத்து இருந்தார். பின்னர் குழந்தையை கொடுத்துவிட்டு சமாதானபுரத்தில் இறங்கினார். அப்போது அவர் அணிந்து இருந்த 5½ பவுன் தங்க சங்கிலி மாயமானது தெரியவந்தது.
அதேபோல் தச்சநல்லூர் கிராமசாவடி தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி கங்காதேவி (62) என்பவர் பாளையங்கோட்டை கோர்ட்டு பகுதியில் இருந்து பொருட்காட்சி திடலுக்கு செல்ல பஸ்சில் ஏறினார். பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் பஸ் சென்று கொண்டு இருந்தபோது, தனது கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்க சங்கிலி மாயமானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இந்த 2 சம்பவங்கள் குறித்தும் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் விசாரணையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் தங்க சங்கிலியை பறித்து சென்று இருக்கலாம் என்று தெரியவந்தது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன் விசாரணை நடத்தி வருகிறார்.