கஞ்சா வியாபாரிகள்-உறவினர்களின் 146 வங்கி கணக்குகள் முடக்கம் போலீஸ் சூப்பிரண்டு தகவல்


கஞ்சா வியாபாரிகள்-உறவினர்களின் 146 வங்கி கணக்குகள் முடக்கம்  போலீஸ் சூப்பிரண்டு தகவல்
x

தேனி மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகள் மற்றும் அவர்களுக்கு உதவியாக செயல்பட்ட உறவினர்களின் 146 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தெரிவித்தார்.

தேனி

வங்கி கணக்குகள் முடக்கம்

தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்க பல்வேறு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கஞ்சா கடத்தல், பதுக்கல், விற்பனை போன்றவற்றை தடுக்க சிறப்பு தனிப்படைகள் அமைத்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இத்தகைய குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் முதற்கட்டமாக 110 வழக்குகள் அடையாளம் காணப்பட்டு அவற்றுடன் தொடர்புடைய நபர்களின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இதுவரை 81 வழக்குகளில் கைது செய்யப்பட்ட 92 பேரின் 99 வங்கிக் கணக்குகள், கஞ்சா விற்பனைக்கு உதவியாக இருந்த அவர்களது உறவினர்கள் 47 பேரின் வங்கிக் கணக்குகள் என மொத்தம் 146 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

கடும் நடவடிக்கை

இந்த வங்கி கணக்குகளில் இருந்து மொத்தம் ரூ.5 லட்சத்து 9 ஆயிரத்து 931 முடக்கம் செய்யப்பட்டுள்ளது. மற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களின் வங்கி கணக்குகளையும் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எனவே, இனிவரும் காலங்களில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடும் நபர்களின் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, அவர்களின் வங்கிக் கணக்குகளும், அவர்களுக்கு உதவி செய்யும் உறவினர்களின் வங்கி கணக்குகளும் முடக்கம் செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story