வீட்டிற்குள் புகுந்து பெண்ணின் முகத்தில் துணியை அமுக்கி 18 பவுன் நகை கொள்ளை


வீட்டிற்குள் புகுந்து பெண்ணின் முகத்தில் துணியை அமுக்கி 18 பவுன் நகை கொள்ளை
x

இரணியலில் வீடு புகுந்து பெண்ணின் முகத்தில் துணியை அமுக்கி மயக்கமடைய செய்து 18 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மஆசாமியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை,

இரணியலில் வீடு புகுந்து பெண்ணின் முகத்தில் துணியை அமுக்கி மயக்கமடைய செய்து 18 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மஆசாமியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

துணிக்கடை உரிமையாளர் வீடு

இரணியலில் தக்கலை ரோட்டை சேர்ந்தவர் சொக்கலிங்கம் பிள்ளை. இவருடைய மகன் அஜய் குமார் கணேஷ் (வயது 50). கன்னியாகுமரியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி கோவில்பட்டியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். இதனால் அவர் அங்கேயே 2 குழந்தைகளுடன் தங்கி உள்ளார்.

இரணியலில் உள்ள வீட்டில் அஜய்குமார் கணேஷ் தனது தாயார் ராமலட்சுமி மற்றும் தந்தையுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் காலையில் சொக்கலிங்கம் பிள்ளை தலக்குளத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். தொடர்ந்து அஜய்குமார் கணேஷ் பகல் 11.10 மணிக்கு தாயார் ராமலட்சுமிக்கு மருந்து மாத்திரைகள் வாங்கி கொடுத்து விட்டு வெளியே கிளம்பினார்.

கொள்ளை

அதன் பின்னர் சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு அவர் மீண்டும் வீடு திரும்பிய போது அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது வீட்டின் முன்பக்க கதவு பூட்டிக் கிடந்தது. உடனே அவர் பதற்றத்துடன் பின்பக்க பகுதிக்கு ஓடினார். அங்கு கதவு திறந்த நிலையில் இருந்தது.

உள்ளே சென்று பார்த்த போது தாய் ராமலட்சுமி மயக்கமடைந்த நிலையில் கீழே கிடந்தார். அவருடைய கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை காணவில்லை. மேலும் பீரோவை பார்த்த போது தலா ஒரு பவுன் கொண்ட 5 தங்க வளையல்கள் மற்றும் ஒரு பவுன் உடைய கைச்செயின் என மொத்தம் 18 பவுன் நகைகள் கொள்ளை போய் இருந்தது. பின்னர் தாய் ராமலட்சுமி மீது தண்ணீர் தெளித்து மயக்கத்தில் இருந்து அவர் மீட்டார்.

பெண்ணின் முகத்தில் துணியை அமுக்கி...

மேலும் இதுகுறித்து அஜய்குமார் கணேஷ் இரணியல் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் இரணியல் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி, சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

வீட்டில் அஜய்குமார் கணேஷ், சொக்கலிங்கம் பிள்ளை ஆகியோர் இல்லாததை நோட்டமிட்டு மர்மஆசாமி வீடு புகுந்துள்ளார்.அப்போது வீட்டில் இருந்த ராமலட்சுமியின் முகத்தை அவர் துணியால் அமுக்கினார். இதனால் ராமலட்சுமி சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்தார்.

இதனை தொடர்ந்து மர்மஆசாமி வீட்டில் நகைகளை கொள்ளையடித்து சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. எனவே இந்த வழக்கில் துப்பு துலக்க அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்மஆசாமியின் நடமாட்டம் பதிவாகி இருக்கிறதா? என போலீசாரின் ஆய்வு நடத்தினர். அதே சமயத்தில் கொள்ளை நடந்த வீட்டுக்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த கைரேகையை பதிவு செய்தனர்.

போலீஸ் தேடுகிறது

மேலும் இதுதொடர்பாக இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மஆசாமியை தேடிவருகின்றனர்.

பட்டப்பகலில் துணிக்கடை உரிமையாளரின் வீடு புகுந்து அவருடைய தாயை மயக்கமடைய செய்து 18 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story