நெய்வேலியில் வீடு, தோட்டத்தில் வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது எதிர்கோஷ்டியினரை கொலை செய்ய திட்டமிட்டது அம்பலம்


நெய்வேலியில் வீடு, தோட்டத்தில் வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது எதிர்கோஷ்டியினரை கொலை செய்ய திட்டமிட்டது அம்பலம்
x

நெய்வேலியில் வீடு, தோட்டத்தில் வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். எதிர் கோஷ்டியினரை கொலை செய்ய திட்டமிட்டது அம்பலமாகி உள்ளது.

கடலூர்

கடலூர் மாவட்டம் நெய்வேலி 21-வது வட்டத்தில் வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருப்பதாக டெல்டா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் டெல்டா பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் 21-வது வட்டம் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரகுபதி என்பவரது வீட்டின் கழிவறை அருகில் ஒரு வெடிகுண்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதனை போலீசார் கைப்பற்றினர். பின்னர் அந்த வெடிகுண்டை பதுக்கி வைத்தது யார்?, எதற்காக பதுக்கி வைத்துள்ளார்கள்? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

2 பேர் கைது

இதற்கிடையே நெய்வேலி தெர்மல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகிரி தலைமையிலான போலீசார் 21-வது வட்டம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது போலீசாரை கண்டதும் 2 பேர் ஓட தொடங்கினர். இதை பார்த்த போலீசார், அவர்களை மடக்கி பிடித்து, போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் நெய்வேலி 3-வது வட்டத்தை சேர்ந்த அமிர்தலிங்கம் மகன் அகிலன்(வயது 21), 21-வது வட்டத்தை சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் என்பதும், 21-வது வட்டத்தை சேர்ந்த மகேஷ் என்பவர், கடலூரை சேர்ந்த ஒருவர் மூலம் அவர்களிடம் வெடிகுண்டுகளை தந்து பாதுகாப்பாக வைக்கும்படி கூறியதாகவும், அதன் பேரில் ஒரு நாட்டு வெடிகுண்டை ரகுபதி வீட்டின் அருகில் பதுக்கி வைத்ததும், 7 நாட்டு வெடிகுண்டு மற்றும் கத்தி, இரும்பு பைப் உள்ளிட்டவற்றை அதே பகுதியில் உள்ள தைலமர தோப்பில் புதைத்து வைத்துள்ளதும் தெரியவந்தது.

உடனே போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அகிலன் மற்றும் 16 வயது சிறுவனை அழைத்துக் கொண்டு தைலமர தோப்புக்கு சென்றனர். அங்கு அவர்கள் புதைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் கத்தி, இரும்பு பைப் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் காமராஜ் மகன் மகேஷ் என்ற மகேஷ்குமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நெய்வேலியை சேர்ந்த பார்த்திபன் ஆகியோரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழிக்குப்பழியாக...

நெய்வேலியில் கடந்த 2020-ம் ஆண்டு 21-வது வட்டத்தை சேர்ந்த வீரமணி மகன் சிவா தலைமையில் ஒரு கோஷ்டியினருக்கும், மகேஷ்குமார் தலைமையில் மற்றொரு கோஷ்டியினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

அப்போது ஏற்பட்ட கோஷ்டி பிரச்சினையின்போது சிவாவை, மகேஷ்குமார் கோஷ்டியினர் கொலை செய்தனர். பின்னர் பழிக்குப்பழியாக தன்னை கொலை செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் சிவாவின் தந்தை வீரமணியையும், மகேஷ்குமார் கொலை செய்தார். இந்த கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த மகேஷ்குமார் கடந்த நவம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார்.

கொலை செய்ய திட்டம்

அப்போது வீரமணி, சிவா ஆகியோரின் ஆதரவாளர்களான பிரசாந்த், மணிகண்டன், விஜய் உள்ளிட்ட 8 பேர் மகேஷ்குமாரை கொலை செய்ய முயன்றனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய அவர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து வீரமணி கோஷ்டியினரை கொலை செய்ய திட்ட மிட்டார். இதனால் இருகோஷ்டியினரும் ஒருவரை ஒருவர் கொலை செய்ய திட்டமிட்டு வந்தனர்.

இதனிடையே எதிர் கோஷ்டியினர் மீது நாட்டுவெடிகுண்டுகளை வீசி கொலை செய்ய மகேஷ்குமார் திட்டமிட்டார். அவரது ஆலோசனையின் பேரில் அகிலன் மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய இருவரும் நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களை வாங்கி வந்து மறைத்து வைத்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


8 வெடிகுண்டுகளை வெடிக்க செய்து அழித்த போலீசாா்

நெய்வேலியில் கைப்பற்றப்பட்ட 8 வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்வதற்காக சென்னையில் இருந்து இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையிலான வெடிகுண்டு பிரிவு போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வந்ததும், 8 வெடிகுண்டுகளையும் நெய்வேலி அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்றனா். பின்னா் அங்கு பொக்லைன் எந்திரத்தின் மூலம் பள்ளம் தோண்டி, அதில் வெடிகுண்டுகளை போட்டு, அதனை வெடிக்க செய்து பாதுகாப்பாக அழித்தனர்.


Next Story