வெள்ளப்பெருக்கால் 200 குடும்பத்தினர் வெளியேற்றம்


வெள்ளப்பெருக்கால் 200 குடும்பத்தினர் வெளியேற்றம்
x

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் எதிரொலியாக 200 குடும்பத்தினர் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர். காட்டுப்புத்தூர் பகுதியில் 250 ஏக்கர் வாழைகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

திருச்சி

கொள்ளிடம் டோல்கேட், ஆக.6-

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் எதிரொலியாக 200 குடும்பத்தினர் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர். காட்டுப்புத்தூர் பகுதியில் 250 ஏக்கர் வாழைகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

உபரிநீர் வெளியேற்றம்

கர்நாடக மாநிலத்தில் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி உள்ளன. இதனால் உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் மேட்டூர் அணை நிரம்பியுள்ளதால், நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி அந்த அணையில் இருந்து 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணைக்கு வினாடிக்கு 2 லட்சத்து 16 ஆயிரம் கன அடி நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 73 ஆயிரம் கன அடி நீரும், கொள்ளிடம் ஆற்றில் 1 லட்சத்து 43 ஆயிரம் கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

200 குடும்பத்தினர் வெளியேற்றம்

இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீரானது இரு கரைகளையும் தொட்டவாறு செல்கிறது. இந்த நிலையில் திருச்சியை அடுத்த நெ.1 டோல்கேட் அருகே கொள்ளிட கரையோர பகுதியில் குடியிருக்கும் வாழவந்தபுரத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வெளியேற்றப்பட்டு, அருகில் உள்ள திருமண மண்டபத்தில் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டனர்.

அவர்களை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் சென்று சந்தித்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார். பின்னர் அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு பிச்சாண்டார்கோவில் ஊராட்சி சார்பில் ஊராட்சிமன்ற தலைவி ஷோபனா தங்கமணி ஏற்பாட்டில் அரிசி, பிஸ்கட் உள்ளிட்ட நிவாரண பொருட்களை அமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், லால்குடி கோட்டாட்சியர் வைத்தியநாதன் உள்பட அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

திருச்சி திருவளர்ச்சோலை, நடுவெட்டி உள்ளிட்ட பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பனையபுரம் பகுதியில் பூந்தோட்டத்தை வெள்ளம் மூழ்கடித்தப்படி செல்கிறது. திருச்சி-கல்லணை சாலையில் கிழிக்கூடு தரைப்பாலத்தை தண்ணீர் மூழ்கடித்தப்படி சென்றது. அங்கு பொதுமக்கள் ஆபத்தை உணராமல் நின்று இருந்ததை காணமுடிந்தது. திருச்சி பொன்னுரங்கபுரத்தில் செங்கல் சூளைகளை வெள்ளம் மூழ்கடித்தது.

வெள்ளம் புகுந்தது

காட்டுப்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் வாழைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இப்பகுதியில் ரஸ்தாளி, பூவன், கற்பூரவள்ளி, ஏலரிசி, செவ்வாழை, மொந்தன், நேந்திரம் உள்ளிட்ட வாழைகள் பயிரிடப்பட்டுள்ளன.

இந்தநிலையில் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. காவிரி கரையில் உள்ள பெரிய பள்ளிபாளையத்தில் ஜெகநாதன் என்பவருக்கு சொந்தமான 50 ஏக்கர் வாழைதோட்டத்துக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அவைகள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் உன்னியூர், சின்னபள்ளிபாளையம் கிராமங்களில் காவிரிக்கரை ஓரம் உள்ள சுமார் 250 ஏக்கர் வாழைகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் உன்னியூர் கிராமத்திற்கு குடிநீர் வழங்கக்கூடிய நீரேற்று பம்பு காவிரியில் மூழ்கி உள்ளதாலும், மின் வயர்கள் அடித்து ெசல்லப்பட்டதாலும் குடிநீர் வழங்குவதில் தடை ஏற்பட்டது. இதனால் கிராம மக்கள் குடிநீர் இன்றி அவதி அடைந்து வருகின்றனர். எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று பெரிய பள்ளிபாளையம், சின்ன பள்ளிபாளையம், உன்னியூர் ஆகிய பகுதி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜீயபுரம்

இேதபோல் ஜீயபுரம் அருகே முக்கொம்பு அருகில் உ ள்ள திருப்பராய்த்துறைத்தில் 7 வீடுகள் தண்ணீரில் மூழ்கின. மேலும் ஊராட்சிக்கு குடிநீர் வழங்கும் மின் மோட்டார் அறை பகுதியையும் தண்ணீர்சூழ்ந்துள்ளன, அதேபோல பெருகமணி காவிரிகரையோரம் வசித்த 34 வீடுகளை காவிரி வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த இரண்டு ஊராட்சி பகுதியில் பாதிக்கப்பட்ட 132 பேரையும் பாதுகாப்பாக அருகில் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.


Next Story