ராமானுஜரின் 1,000–வது அவதார திருநாளை கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள்


ராமானுஜரின் 1,000–வது அவதார திருநாளை கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள்
x
தினத்தந்தி 27 April 2017 9:45 PM GMT (Updated: 27 April 2017 4:13 PM GMT)

ராமானுஜரின் 1,000–வது அவதார திருநாளை கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் எம்.வீரசண்முக மணி கூறியுள்ளார்.

சென்னை,

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் எம்.வீரசண்முக மணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

அவதார திருநாள்

ராமானுஜரின் 1,000–வது அவதார திருநாள் சிறப்பாக கொண்டாட இந்து சமய அறநிலையத்துறை மூலம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ரூ.86 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகாரசுவாமி திருக்கோவில் ஐந்து நிலை ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள், ஸ்ரீ எத்திராஜ நாகவள்ளி தாயார் சன்னதி சம்ரோ‌ஷனம், ஸ்ரீவேணுகோபாலசுவாமி சன்னதி, ஸ்ரீமூலவர், ஸ்ரீகருடாழ்வார் சன்னதி, மடப்பள்ளி, திருக்கோவில் அலுவலகம், வாகனங்கள் பழுதுபார்த்தல், தரிசன வரிசை சீரமைக்கும் பணிகள், மின் விளக்குகள் மற்றும் வயரிங் பணிகள், திருக்குளம் சீரமைத்தல், 16 இடங்களில் விழாவிற்கு வருகைதரும் பக்தர்களின் வசதிக்காக சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்களும், அகன்ற எல்.இ.டி. திரைகளும் அமைக்கப்பட்டுள்ளன. 2 இடங்களில் நுழைவு வளைவுகள் புதுப்பித்தல், குடிநீர் மற்றும் கழிவறைகள் அமைக்கும் பணிகள் நிறைவேற்றப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

பேச்சு போட்டிகள்

தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையால் பள்ளி மாணவர்களிடையே ராமானுஜர் குறித்த பேச்சு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன, ராமானுஜர் வாழ்க்கை குறித்த குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 16–ந்தேதி முதல் மே 2–ந்தேதி வரை சிறந்த ஆன்மிக பேச்சாளர்களை அழைத்து சிறப்பு சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கலை நிகழ்ச்சிகள்

இதுதவிர விழா நாட்களில் தென்னக கலை பண்பாட்டு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நாள்தோறும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் உள்ள 84 திவ்ய தேசங்களிலும், வைணவ திருக்கோவில்களிலும் ராமானுஜர் 1,000–வது அவதார நாளை முன்னிட்டு பல்வேறு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ராமானுஜரின் அவதார திருவிழாவில் முக்கிய நாட்களான ஏப்ரல் 30–ந்தேதி மற்றும் மே 1–ந்தேதி அதிகளவு பக்தர்கள் வரவுள்ளதை எதிர்நோக்கி பல்வேறு அரசு துறைகளான இந்து சமய அறநிலையத்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத் துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் இணைந்து ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சுகாதார துறை மூலம் மருத்துவ முகாம் நடத்தவும், 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைத்திருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உணவுப்பொருள் பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே அன்னதானம் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story