மாநில செய்திகள்

“அரசியலில் என்னை வளர்த்தவர் ஜெயலலிதா தான்” ஓ.பன்னீர்செல்வத்துக்கு, எடப்பாடி பழனிசாமி பதில் + "||" + For Panneerselvam, Edappadi Palaniasamy answered

“அரசியலில் என்னை வளர்த்தவர் ஜெயலலிதா தான்” ஓ.பன்னீர்செல்வத்துக்கு, எடப்பாடி பழனிசாமி பதில்

“அரசியலில் என்னை வளர்த்தவர் ஜெயலலிதா தான்” ஓ.பன்னீர்செல்வத்துக்கு, எடப்பாடி பழனிசாமி பதில்
அரசியலில் என்னை வளர்த்தவர் ஜெயலலிதாதான் என்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
சென்னை, 

அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் திண்டுக்கல்லில் கடந்த 17-ந்தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நான் பார்த்து வளர்ந்தவர். அவர் எனக்கு நிதி அமைச்சர் பதவி தருகிறேன் என்று கூறுவது நகைப்பாக இருக்கிறது” என்று கூறியிருந்தார். இதற்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.

புரட்சித்தலைவியால் வளர்க்கப்பட்டவன்

ஊட்டியில் நேற்று நடைபெற்ற மலர்கண்காட்சி தொடக்க விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

நேற்று முன்தினம் ஒருவர் (ஓ.பன்னீர்செல்வம்) குறிப்பிட்டதாக பத்திரிகையிலே ஒரு செய்தியை பார்த்தேன். அதில், ஒருவரால் நான் பார்த்து வளர்க்கப்பட்டேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். அது தவறு. புரட்சித்தலைவி அம்மா என்ற தெய்வத்தால் நான் வளர்க்கப்பட்டவன். 1974-ம் ஆண்டில் பொதுவாழ்க்கையில் நான் ஈடுபட்டேன். அப்போது எம்.ஜி. ஆரோடு அ.தி.மு.க.வில் என்னை நான் இணைத்துக்கொண்டேன்.

அப்பொழுதே என்னுடைய சிற்றூரான சிவன்மலை கிளை கழகச்செயலாளராக என்னுடைய கட்சிப் பணியைத் தொடங்கினேன், சிறப்பாக கட்சிப்பணி ஆற்றி, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா பேரவையை 1985-ம் ஆண்டிலே என்னுடைய பகுதியிலே உருவாக்கி ஜெயலலிதா மனதிலே இடம் பெற்றவன் நான். 1989-ம் ஆண்டு அவர் தன்னந்தனியாக சட்டமன்ற தேர்தலை சந்தித்தபோது, சேவல் அணியில் நான் எடப்பாடி சட்டமன்ற தொகுதியிலே போட்டியிட்டு ஜெயலலிதா செல்வாக்கால் அன்று எடப்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவன். அதற்கு பிறகு, 1991-ம் ஆண்டில் எடப்பாடி சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் வெற்றி பெற்றவன்.

வரலாறு

பிறகு 1993-ம் ஆண்டில் சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தினுடைய தலைவராகவும், சேலம் மாவட்ட திருக்கோவில் வாரியத்தினுடைய தலைவராகவும் நான் சிறப்பான முறையிலே பணியாற்றினேன். திருச்செங்கோடு நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. நான் வேட்புமனு செய்யாமலேயே திருச்செங்கோடு நாடாளுமன்ற வேட்பாளராக அ.தி.மு.க.வில் போட்டியிடும் வாய்ப்பை ஜெயலலிதா தந்தார். அப்பொழுது நான் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினேன்.

அதற்கு பிறகு 2011-ம் ஆண்டில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியிலே போட்டியிட்டு, வெற்றி பெற்று ஜெயலலிதா அமைச்சரவையிலே நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக பொறுப்பேற்று திறம்பட நான் பணியாற்றினேன். 2016 சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஜெயலலிதா தலைமையிலே நல்ல ஆட்சி அமைக்கப்பட்டது.

என்னை வளர்த்தவர் ஜெயலலிதா

அவரது அமைச்சரவையிலே நான் நெடுஞ்சாலைத்துறை, சிறு துறைமுகங்கள் துறை, கூடுதலாக பொதுப்பணித்துறையையும் எனக்கு வழங்கினார். நான் கழகத்திலே பல்வேறு பொறுப்புகளில் இருந்திருக்கின்றேன். 1991-ம் ஆண்டில் சேலம் மாவட்டம், நாமக்கல் மாவட்டம் ஒருங்கிணைந்து இருந்தபொழுதே மாவட்ட கழகத்தினுடைய செயலாளராக இருந்து பணியாற்றியவன். அதேபோல கழகத்திலே கொள்கை பரப்பு செயலாளராகவும், அமைப்புச் செயலாளராகவும் இருந்து பணியாற்றி இருக்கிறேன்.

ஜெயலலிதா என்னை தலைமை நிலையச்செயலாளராகவும், இப்பொழுது மாவட்ட செயலாளராகவும் பணியாற்றும் வாய்ப்பினை அளித்தார். என்னை வளர்த்தவர் ஜெயலலிதா ஒருவர் தான் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக்கொள்கின்றேன். நான் மட்டுமல்ல, இங்கே மேடையிலே இருக் கின்ற அத்தனை கழக தொண்டர்களையும், இங்கே வருகை தந்துள்ள அத்தனை கழக நிர்வாகிகளையும் உருவாக்கிய பெருமை எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் சாரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சட்டசபை விரைவில் கூடும்

இதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

மானிய கோரிக்கை விவாதம் தொடர்பான சட்டசபை கூட்ட தொடர் விரைவில் தொடங்க உள்ளது. ‘நீட்’ தேர்வு குறித்த வழக்கு கோர்ட்டில் உள்ளதால் இப்போது எதுவும் கூற இயலாது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த சில்ஹல்லா நீர்மின்திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும். அரசு தாவரவியல் பூங்காவை மேம்படுத்த ரூ.8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.