ஜி.எஸ்.டி.யை எதிர்க்காமல் அ.தி.மு.க. அரசு துரோகம் இழைத்து விட்டது மு.க.ஸ்டாலின்


ஜி.எஸ்.டி.யை எதிர்க்காமல் அ.தி.மு.க. அரசு துரோகம் இழைத்து விட்டது மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 2 July 2017 11:15 PM GMT (Updated: 2017-07-03T00:40:02+05:30)

ஜி.எஸ்.டி.யை எதிர்க் காமல் அ.தி.மு.க அரசு துரோகம் இழைத்து விட்டது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

பூந்தமல்லி,

காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அக்கட்சியின் தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மண்ணிவாக்கத்தை அடுத்த கரசங்கால் பகுதியில் உள்ள அண்ணா திடலில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.30 லட்சம் மதிப்பில் 5 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

தமிழகத்தில் நடைபெறுவதை ஆட்சியாக கருதவில்லை, காட்சி பொருளாக தான் கருதுகிறோம். ஜெயலலிதா மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டார். ஆனால் தற்போது நடைபெறும் ஆட்சி மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டது அல்ல. குதிரை பேர ஆட்சி. தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு 1.1 சதவீதம் வாக்குகள் தான் வித்தியாசம்.

தி.மு.க. ஆட்சியில் இல்லை என்றாலும் மக்கள் பிரச்சினைகளை கவனித்து வருகிறது. மக்களோடு சேர்ந்து போராடுகிறது. ஏரி, குளங்களை அரசு தான் தூர்வார வேண்டும். ஆனால் எதிர்க்கட்சியான தி.மு.க. அதை செய்து வருகிறது.

முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் கருணாநிதி சிகிச்சை பெறும் புகைப்படங்களை நாம் முறையாக வெளியிட்டு வருகிறோம். அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது அவர்களின் சிகிச்சை முறைகள் குறித்து தினமும் மருத்துவ அறிக்கைகள் வெளியிடப்பட்டு வந்தன. ஓ.பன்னீர்செல்வம் பதவி பறிக்கப்பட்ட பிறகுதான் ஜெயலலிதா இறப்பு குறித்து நீதி விசாரணை வேண்டும் என்று கூறுகிறார்.

இந்த ஆட்சியின் தலைமையை அன்று குன்கா ஜெயிலுக்கு அனுப்பினார். ஆனால் தற்போது குட்கா இந்த ஆட்சியை ஜெயிலுக்கு அனுப்பிவைக்கப்போகிறது.

ஜி.எஸ்.டி.யை நாங்கள் முழுமையாக எதிர்க்கவில்லை. சிறு, குறு மற்றும் விவசாயிகள், ஓட்டல் நடத்துபவர்களை கலந்து ஆலோசிக்காமல் அவசரமாக நிறைவேற்றி விட்டார்கள். ஜி.எஸ்.டி.யால் விலைவாசி உயரும் ஆபத்து உள்ளது. இதனால் மக்கள் பாதிக்கப்படப்போகிறார்கள். இதனை குதிரை பேர அ.தி.மு.க அரசு எதிர்க்காமல் தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டது.

டி.ஜி.பி. மீது இதுவரை லஞ்சம் வாங்கியதாக புகார் வந்தது இல்லை. தற்போது முதல் முறையாக வந்துள்ளது.

ஆட்சியை நாங்கள் கவிழ்க்க தேவை இல்லை. அ.தி.மு.க.வினரே ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தானாகவே இந்த ஆட்சி கவிழும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story