அக்கிரமங்களை சொல்லும்போது சபாநாயகர் அவை குறிப்பில் இருந்து நீக்கி விடுகிறார்மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு


அக்கிரமங்களை சொல்லும்போது சபாநாயகர் அவை குறிப்பில் இருந்து நீக்கி விடுகிறார்மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 7 July 2017 11:00 PM GMT (Updated: 2017-07-08T00:47:38+05:30)

அக்கிரமங்களை சொல்லும்போது சபாநாயகர் அவை குறிப்பில் இருந்து நீக்கி விடுகிறார் என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை, 

சென்னை தியாகராயநகர் பகுதிக்கு உட்பட்ட தி.மு.க.வின் 132-வது வட்ட கிளை செயலாளர் கோ.சு.மணி இல்ல திருமண விழா சென்னை அசோக்நகரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு, தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி மணமக்கள் கோ.சு.கனிமொழி-பெ.விஜயன் ஆகியோருக்கு திருமணத்தை நடத்தி வைத்து, வாழ்த்தினார்.

இதையடுத்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கிறது, இந்த நேரத்தில் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பதாக இங்கு பேசிய மாவட்ட செயலாளர் குறிப்பிட்டபோது, “சட்டமன்றத்துக்கு சென்றால் அதிக நேரம் பேச முடியாது, இங்கேயாவது கொஞ்ச நேரம் பேசலாமே” என்று எனக்கு தோன்றியது. காரணம், அங்கு ஆட்சி பொறுப்பில் இருப்பவர்களை புகழ்ந்து, பாராட்டி பேசினால் தான் சபாநாயகர் அனுமதிக்கிறார். இந்த ஆட்சியில் நடைபெறும் ஊழல்களை, இந்த ஆட்சியின் குறைபாடுகளை எல்லாம் சுட்டிக்காட்டுகின்ற போது எங்களுடைய பேச்சுரிமை தடுக்கப்படுகிறது.

நமது அன்பழகன் எம்.எல்.ஏ., காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோது, அவர் பேசியதில் 50 சதவீதம் மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெற்றது. அவரது பேச்சில் 50 சதவீதம் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆட்சியில் நடந்து கொண்டிருக்கும் அத்துமீறல்கள், கொலை-கொள்ளைகள், அதிகாரிகள் செய்து வரும் அக்கிரமங்கள், அமைச்சர்கள் மீதான வழக்குகள் ஆகிய செய்திகளை சொல்கின்றபோது, அவற்றை எல்லாம் சபாநாயகர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிடுகிறார். இந்த நிலையில் தான் சட்டமன்றம் நடக்கிறது.

இந்த சட்டமன்றம் எத்தனையோ முதல்-அமைச்சர்களை பார்த்து இருக்கிறது. எத்தனையோ அமைச்சர்களை, சபாநாயகர்களை எல்லாம் பார்த்திருக்கின்றது. அப்போதெல்லாம் சட்டமன்றத்தில் ஜனநாயகம் எந்த அளவுக்கு செழித்து, வளர்ந்திருக்கிறது என்பதை, சட்டமன்ற நூல் நிலையத்தில் உள்ள அவை நடவடிக்கை குறித்த குறிப்புகளை எடுத்து படித்து பார்த்தால் நமக்கு தெரியும். ஆளும் கட்சி செய்கின்ற முறைகேடுகளை-குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதுதான் எதிர்க்கட்சியின் கடமை.

ஆனால், அந்த கடமையை எங்களால் இன்றைக்கு செய்ய முடிகின்றதா என்று கேட்டால், முழுமையாக எங்களால் செய்யமுடியவில்லை. முக்கியமான பிரச்சினைகளை பேச முயன்றால், அதையெல்லாம் பேசக்கூடாது என்று சபாநாயகர் சொல்லி, அவைக்குறிப்பில் இருந்து நீக்கி விடுகிறார். அதைக் கேட்டு நாங்கள் அமைதியாக உட்கார்ந்திருந்தால், தி.மு.க. சட்டமன்றத்துக்கு சென்று எதையும் செய்யவில்லை, அங்கே சென்று அமைதியாக உட்கார்ந்துவிட்டு வந்து விடுகிறார்கள் என்று செய்தி போடுவார்கள்.

இதுவரை நடந்த எல்லா மானிய கோரிக்கைகளிலும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று, முறைப்படி உரையாற்றி இருக்கிறார்கள். கவன ஈர்ப்பு தீர்மானங்களை கொண்டு வந்து உரையாற்றி இருக்கின்றனர். கேள்வி நேரத்தினை பயன்படுத்தி நமது சட்டமன்ற உறுப்பினர்கள் பிரச்சினைகளை எழுப்பி வருகின்றனர்.

நீங்கள் என்னதான் திட்டமிட்டு இப்படிப்பட்ட காரியங்களை எல்லாம் செய்தாலும், தி.மு.க.வை தொட்டுக்கூட பார்க்க முடியாது. ஆக, தி.மு.க.வை அழித்து விடலாம், ஒழித்து விடலாம் என்று இப்படிப்பட்ட காரியங்கள் திட்டமிட்டு நடந்து கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான் சட்டமன்றம் நடந்துகொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார். 

Next Story