மீத்தேன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


மீத்தேன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்  மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 July 2017 11:00 PM GMT (Updated: 11 July 2017 7:30 PM GMT)

நெடுவாசல் மீத்தேன் திட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

சென்னை,

சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து, கதிராமங்கலம் மற்றும் நெடுவாசல் பிரச்சினை தொடர்பாக பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

மு.க.ஸ்டாலின்:- கதிராமங்கலம் பகுதியில் ஓ.என்.ஜி.சி-க்கு எதிராக தொடர்ந்து கடந்த மே 19-ந்தேதி முதல் பல போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எண்ணெய் கசிவால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய சூழ்நிலை, நீராதாரம் மோசமாகக்கூடிய நிலை உருவாகியிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, 2.6.2017 அன்று நடைபெற்றிருக்கும் போராட்டத்தையொட்டி முதல்-அமைச்சர் கூட இங்கே அவையில் அதற்கு விளக்கும் சொல்லும்போது, அது சம்பந்தமாக 93 பேர் மீது வழக்கு போடப்பட்டிருக்கிறது என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

அதற்கு பிறகு தொடர்ந்து 5.6.2017 அன்று அமைதியாக ஒரு போராட்டம் அங்கு நடந்திருக்கிறது. அதற்குப்பிறகு 30.06.2017 அன்று பொதுமக்கள், அங்கிருக்கக்கூடிய தாய்மார்கள், இளைஞர்கள், மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து நடத்திய போராட்டத்தில் பல சம்பவங்கள் நடந்திருக்கிறது. அதையொட்டி பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் மீது ஜாமீனில் வர முடியாத அளவிற்கு வழக்குப் போடப்பட்டிருக்கிறது. கடந்த மூன்றாம் தேதியன்று கதிராமங்கலம் மக்களுக்காக வணிகர்கள் ஒன்றுசேர்ந்து கடையடைப்பு போராட்டத்தையும் நடத்தி வருகிறார்கள்.

மாணவ, மாணவிகள் ஒருபக்கம் அணிவகுத்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நேற்றைய தினம் சுமார் 27 கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு மிகப்பெரிய பேரணியை நடத்தியிருக்கின்றன. எனவே, தங்கள் வாயிலாக நான் முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்வது, அங்கு சுமுகமான சூழ்நிலையை ஏற்படுத்த அவர்கள் மீது போடப்பட்டிருக்கக்கூடிய வழக்கு களை உடனடியாக திரும்பப் பெற்றுக்கொண்டு, அத்தனை பேரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்திட வேண்டும். அப்படி ஒரு நிலையை உருவாக்கி அங்கே ஒரு அமைதி சூழ்நிலையை உருவாக்கித்தர வேண்டும்.

அதேபோல, நெடுவாசல் பகுதியில் நடந்து கொண்டிருக்கக்கூடிய ஒரு தொடர் போராட்டம்....

சபாநாயகர்:- நேற்றே (நேற்று முன்தினம்) இது தொடர்பாக விவாதிக்கப்பட்டு விட்டது. அமைச்சரும் விளக்கமாக கூறி விட்டார். எனவே மேற்கொண்டு இதை அனுமதிக்க முடியாது.

மு.க.ஸ்டாலின்:- விவாதம் நீண்ட நேரம் நடந்திருக்கிறது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே அந்த விவாதத்திற்கு செல்ல விரும்பவில்லை. நெடுவாசல் பிரச்சினையை பொறுத்த வரைக்கும், அதை அனுமதிக்க மாட்டோம், அனுமதிக்க மாட்டோம் என்று அரசு சொல்கிறது. வரவேற்கிறோம். ஆக, அதை சட்டமன்றத்தில் ஒரு தீர்மானமாக நிறைவேற்ற இந்த அரசு முன்வர வேண்டும். அப்படி முன்வருகிறபோது, எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய தி.மு.க. அதற்கு முழு ஆதரவு தர காத்திருக்கிறது. அந்த வகையில், நான் அதை முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டுவந்து அமைகிறேன்.

அமைச்சர் எம்.சி.சம்பத்:- எதிர்க்கட்சித்தலைவர் குறிப்பிட்ட பிரச்சினைகள் குறித்து ஏற்கனவே முதல்-அமைச்சர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து இருக்கிறார். பிரதமரை சந்தித்து நம்முடைய உணர்வுகளை தெரிவித்து இருக்கிறார். பெட்ரோலியத்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியிருக்கிறார். கடந்த மே மாதம் 16-ந்தேதி மத்திய அரசிடம் இருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறது. அதில், மாநில அரசின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கிறோம், நீங்கள் விருப்பாவிட்டால் அந்த திட்டம் அனுமதிக்கப்படாது என்று தெரிவித்து இருக்கிறது. எனவே நெடுவாசல் திட்டம் செயல்படாது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story