ஐகோர்ட்டு உத்தரவை விமர்சித்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரி கைது


ஐகோர்ட்டு உத்தரவை விமர்சித்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரி கைது
x
தினத்தந்தி 22 Sep 2017 9:00 PM GMT (Updated: 22 Sep 2017 7:13 PM GMT)

ஐகோர்ட்டு உத்தரவை சமூக வலைதளங்களில் விமர்சித்து கருத்துக்களை வெளியிட்ட ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

ஐகோர்ட்டு உத்தரவை சமூக வலைதளங்களில் விமர்சித்து கருத்துக்களை வெளியிட்ட ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

பல்வேறு கோரிக்கைகளுக்காக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடத்திய வேலைநிறுத்த போராட்டம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் காரசாரமான சில கருத்துக்களை கூறியிருந்தார். இதை விமர்சித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்கள் வெளியானது.

நீதிபதி கிருபாகரனை பற்றியும் விமர்சனம் செய்யப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் ஐகோர்ட்டு உத்தரவை சமூக வலைதளங்கள் வாயிலாக அவதூறான தகவல்களை வெளியிட்டவர் யார் என்று தெரிய வந்தது. அவரது பெயர் சுபாஷ் சந்திரபோஸ் (வயது 65) என்பதாகும்.

தமிழக அரசின் உள்ளாட்சி தணிக்கை துறையில் அதிகாரியாக வேலைபார்த்து இவர் ஓய்வு பெற்றுள்ளார். சுபாஷ் சந்திரபோசை சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் நேற்று காலையில் சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் கைது செய்தனர். அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.

எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. உடல்நலக்குறைவாக அவர் இருந்ததால் ஜாமீனில் விடுதலை செய்யப்படுவார் என்று சைபர் கிரைம் போலீசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நெல்லை மாவட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் சார்பில் நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பாளையங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு கடந்த 14-ந் தேதி நடந்த போராட்டத்தின் போது ஐகோர்ட்டு நீதிபதியை விமர்சித்து பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பான காட்சிகள் மற்றும் சுருக்கெழுத்து பதிவு ஆகியவற்றை பாளையங்கோட்டை போலீசார் ஆய்வு செய்து வந்தனர்.

இது குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாளையங்கோட்டை திருமால் நகரை சேர்ந்த முருகன்(வயது 47) என்பவரை நேற்று கைது செய்தனர். இவர் அரசு வாகன பணிமனையில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

இதுபோல ஐகோர்ட்டு உத்தரவுகளை விமர்சித்தும், நீதிபதிகளை பற்றி தனிப்பட்ட முறையில் அவதூறு தகவல்கள் வெளியிடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story