தொடர்ந்து சென்னையில் தங்கி இருந்து பிச்சை எடுப்பேன் ரஷிய சுற்றுலா பயணி பிடிவாதம்
எனக்கு ரஷ்ய துதரக உதவித் தேவையில்லை. ட்ராவல் செய்வது பிடித்துள்ளது. தொடர்ந்து மக்களிடம் பிச்சையெடுப்பேன் என ரஷ்ய சுற்றுலா பயணி கூறி உள்ளார்.
சென்னை,
ரஷியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஈவ்ஜெனீ பெர்ட்னி கோவ். காஞ்சீபுரத்துக்கு சுற்றுலா வந்த இவர் கடந்த வாரம் செலவுக்கு பணம் இல்லாமல் தவித்தார். அங்குள்ள கோவில் வாசலில் அமர்ந்து பிச்சை எடுத்து பரபரப்பு ஏற்படுத்தினார்.
அங்கு ஏற்கனவே அழுக்கு படிந்த நிலையில் பிச்சைக்காரர்கள் பலர் அமர்ந்து இருந்தனர். அவர்களுக்கு பக்தர்கள் காசு போட்டு செல்வதைப் பார்த்த ரஷிய சுற்றுலா பயணி திடீர் என்று அவர்களுடன் அமர்ந்து துணியை விரித்தார்.
வெள்ளைக்காரரான இவரை மற்ற பிச்சைக்காரர்கள் ஒரு மாதிரியாக பார்த்தனர். அதை அவர் கண்டு கொள்ளவில்லை. கோவிலுக்கு வந்த பக்தர்கள், வெள்ளைக்காரருக்கு என்ன பண நெருக்கடியா என இரக்கப்பட்டு அவருக்கு காசு பணம் போட்டு உதவினர்.
வெளிநாட்டுக்காரர் பிச்சை எடுப்பதை பார்த்த சிலர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து ரஷிய வாலிபரிடம் பிச்சை எடுக்க கூடாது என்று அறிவுரை கூறினர். மற்ற உதவிகளுக்கு சென்னையில் உள்ள ரஷிய தூதரகத்தை அணுகுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
அதன்பிறகு சென்னை வந்த அவர் தியாகராய நகரில் சுற்றித்திரிந்தார். அங்குள்ள கோவிலில் சாமி கும்பிட்டார். அவரை சந்தித்து பேசியபோது, ரஷியா-உக்ரைன் இடையே ராணுவ நடவடிக்கை காரணமாக பதட்டம் நிலவுகிறது. இதனால் நான் உக்ரைனில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா விசாவில் வந்தேன். வரும் போது என் கையில் இந்திய ரூபாய் 4,000 மட்டுமே இருந்தது. பணம் தீர்ந்து விட்டதால் காஞ்சீபுரத்தில் பிச்சை எடுத்தேன். அது பத்திரிகைகளில் வந்ததைப் பார்த்த சிலர் என்னை அடையாளம் கண்டு பண உதவி செய்தனர் என்றார்.
எப்போது ரஷியா திரும்புவீர்கள் என்று கேட்டதற்கு, தொடர்ந்து சென்னையில் தங்கி இருந்து பிச்சை எடுப்பேன் என்று ரஷிய வாலிபர் வெட்கப்படாமல் கூறினார்.
இதுபற்றி ரஷிய தூதரக அதிகாரிகளிடம் கேட்ட போது, எங்களிடம் அவர் எந்த உதவியும் கேட்க வில்லை. முறைப்படி உதவி கேட்டு வந்தால்தான் நாங் கள் எதுவும் செய்ய முடியும் என்றனர். ரஷிய சுற்றுலா பயணியின் இந்திய விசா வருகிற நவம்பர் மாதம் 22-ந்தேதியுடன் முடிவடைகிறது.
ரஷிய சுற்றுலா பயணி பிச்சை எடுக்கும் தகவல் வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜூக்கு தெரிய வந்தது. உடனே அவர் தனது டுவிட்டர் மூலம், ஈவ்ஜெனீ உங்கள் நாடான ரஷியா எங்களது நண்பன். சென்னையில் உள்ள வெளியுறவுத்துறை அதிகாரிகள் உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறார்கள்’’ என்று கூறி யுள்ளார்.
ரஷிய சுற்றுலா பயணி ஏற்கனவே சீனா, தாய்லாந்து, கம்போடியா நாடுகளுக்கு சென்றுள்ளார். அந்த நாடுகளின் கொடிகளை தனது வலது தோள் பட்டையில் பச்சை குத்தி இருக்கிறார்.
Related Tags :
Next Story