மாநில செய்திகள்

திருமண ஆசைகாட்டி ரூ.1 கோடி சுருட்டிய கோவை இளம்பெண் குடும்பத்துடன் கைது + "||" + Coimbatore arrested with family

திருமண ஆசைகாட்டி ரூ.1 கோடி சுருட்டிய கோவை இளம்பெண் குடும்பத்துடன் கைது

திருமண ஆசைகாட்டி ரூ.1 கோடி சுருட்டிய கோவை இளம்பெண் குடும்பத்துடன் கைது
என்ஜினீயர்களை குறி வைத்து அவர்களுக்கு திருமண ஆசைகாட்டி ரூ.1½ கோடிக்கு மேல் பணம் சுருட்டிய கோவை இளம்பெண் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டார்.
கோவை,

வெளிநாட்டில் அதிக சம்பளத்துடன் வேலை பார்த்த என்ஜினீயர்களை குறி வைத்து அவர்களுக்கு திருமண ஆசைகாட்டி ரூ.1½ கோடிக்கு மேல் பணம் சுருட்டிய கோவை இளம்பெண் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் சித்தூரை அடுத்த எடப்பள்ளி அருகே உள்ள காட்டுவளவு என்ற ஊரைச் சேர்ந்தவர் பாலமுருகன்(வயது 29). ஆட்டோ மொபைல் என்ஜினீயர். இவர் கடந்த 6 ஆண்டுகளாக ஜெர்மனி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர் திருமணத்துக்கு பெண் தேடி வந்தார். பாரத் திருமண தகவல் பதிவு மையம் என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டு இருந்த ஒரு இளம்பெண்ணின் அழகிய புகைப்படத்தை பார்த்து அந்த பெண் பிடித்து இருப்பதாக கூறினார்.

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சுருதி (வயது 21) என்பவர் இணைய தளம் மூலம் பாலமுருகனுடன் அறிமுகம் ஆகி செல்போனிலும் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, திருமண தகவல் மைய இணையதளத்தில் நீங்கள் பார்த்தது தனது புகைப்படம்தான் எனவும், உங்களை எனக்கு பிடித்து இருப்பதால் திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

சினிமா நடிகை போல் அழகிய தோற்றத்தில் இருந்த சுருதியின் ஆங்கில பேச்சும் பாலமுருகனை கவர்ந்தது. இதனால் சுருதியுடன் முகநூலில் நட்பாகி இருவரும் காதல் மொழிகளை பகிர்ந்து கொண்டனர்.

அப்போது, சுருதி, தனது தாய் சித்ராவுக்கு மூளையில் கட்டி இருப்பதால் ஆபரேஷன் செய்தால் உயிர் பிழைப்பார் என டாக்டர்கள் கூறி விட்டனர். மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்படுகிறது என பாலமுருகனிடம் கூறி உள்ளார்.

இதை நம்பிய அவர் ரூ.5 லட்சத்தை சுருதியின் வங்கி கணக்கிற்கு முதலில் அனுப்பினார். அதன்பிறகு சுருதி தன் வீடு மீது கடன் இருக்கிறது. அதை அடைத்தால் தான் திருமணம் செய்ய முடியும் என கூறினார். வருங்கால மனைவி தானே என கருதிய பாலமுருகன் பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.41 லட்சம் வரை அனுப்பினார்.

இந்த நிலையில் பாலமுருகன் சென்னையில் உள்ள தனது நண்பர் ஒருவரிடம், சுருதி பற்றி கூறி அவரது புகைப்படத்தை அனுப்பினார். அதோடு, வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பி வந்ததும் சுருதியை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறினார். சுருதியின் புகைப்படத்தை பார்த்த நண்பர் அதிர்ச்சி அடைந்தார்.

சுருதி திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏற்கனவே பல வாலிபர்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்தவர் என்பதை அறிந்த அவரது நண்பர் உடனடியாக பாலமுருகனிடம் விஷயத்தை கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பாலமுருகன் இது குறித்து சுருதியிடம் கேட்டார். ஆனால் அவர் சரியாக பதில் அளிக்காமல் செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார். அதன்பிறகு செல்போனை ‘சுவிட்ச்ஆப்’ செய்து விட்டார். அப்போது தான் சுருதி தன்னை ஏமாற்றி பணம் பறித்ததை பாலமுருகன் உணர்ந்தார்.

இதையடுத்து அவர் உடனடியாக கோவை வந்து மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சுருதி பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அது பற்றி விவரம் வருமாறு:-

சிதம்பரத்தை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் அருள்குமார குருராஜாவிடம் 20 பவுன் தங்கநகை, நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் சந்தோஷ்குமாரிடம் ரூ.43 லட்சம், நாகப்பட்டினத்தை சேர்ந்த சுந்தர் என்பவரிடம் ரூ.15 லட்சம், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சசிகுமாரிடம் ரூ.22 லட்சம், திண்டுக்கல்லை சேர்ந்த ராஜ்கமலிடம் ரூ.21 லட்சம் என்று பல வாலிபர்களிடம் இணையதளம் மூலம் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி ரூ.1½ கோடிக்கு மேல் சுருதி மோசடி செய்தது தெரிய வந்தது.

கடந்த 2016-ம் ஆண்டு சந்தோஷ்குமார், அருள்குமார குருராஜா ஆகியோர் அளித்த புகாரின்பேரில் கோவை நகர குற்றப்பிரிவு போலீசார் சுருதி மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்தனர். அப்போது அவர் தலைமறைவாகிவிட்டார். இதனால் கைதாகவில்லை.

இதுபோல் சென்னை புதுவண்ணாரபேட்டையை சேர்ந்த விஜய் அளித்த புகாரின்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசிலும், நாகப்பட்டினத்தை சேர்ந்த ராமச்சந்திரன் அளித்த புகாரின்பேரில் நாகப்பட்டினம் மத்திய குற்றப்பிரிவு போலீசிலும் சுருதி மீது போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

பல வழக்குகள் பதிவு செய்யப்பட்ட போதும் போலீசில் சிக்காததால் சுருதி, தொடர்ந்து மோசடியை அரங்கேற்றி வந்துள்ளார். மேலும் சுருதி தனது பெயரை மைதிலி வெங்கடேஷ் என்று மாற்றி வைத்துக்கொண்டு, முகநூலில் பலருடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார். இதற்கான தனது கவர்ச்சி படங்கள் பலவற்றையும் பதிவேற்றம் செய்து இருந்தார்.

சுருதியின் தாய் சித்ரா, இணையதளம் மூலம் திருமண தகவல் மையம் நடத்தி வந்ததால் மகளின் படத்தை வெளிநாட்டில் அதிக சம்பளத்துடன் வேலை பார்க்கும் என்ஜினீயர்களை குறிவைத்து அனுப்பி மோசடி வலையில் விழ வைத்துள்ளார்.

இதற்கிடையில் கோவை பாப்பநாயக்கன்பாளையம் தனலட்சுமிநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கோவை சைபர் கிரைம் போலீசார் திடீர் சோதனை நடத்தி சுருதி (21), அவருடைய தாய் சித்ரா(48), வளர்ப்பு தந்தை பிரசன்ன வெங்கடேஷ் (38), தம்பி சுபாஷ் (18) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

இவர்கள் மீது கூட்டுசதி, தகவல் தொழில் நுட்ப சட்டப் பிரிவு உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் போலீசார் நேற்று மாலை சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். கைதான 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் சுருதியை நேரில் பெண் பார்க்க வந்தவர்களையும் ஏமாற்றி உள்ளனர். இந்த மோசடியில் மேலும் பல என்ஜினீயர்கள், பட்டதாரிகள் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.