மாநில செய்திகள்

பஸ் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நீடிப்பு சென்னையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + The fight against the bus tariff hike

பஸ் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நீடிப்பு சென்னையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பஸ் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நீடிப்பு சென்னையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
பஸ் கட்டண உயர்வை கண்டித்து பொதுமக்களின் போராட்டம் தொடர்கிறது. #BusFare #Protest
சென்னை,

பஸ் கட்டண உயர்வை கண்டித்து பொதுமக்களின் போராட்டம் தொடர்கிறது. சென்னையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் பஸ் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டதை கண்டித்து நேற்று 2-வது நாளாக பல இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை செங்குன்றத்தை அடுத்த காந்திநகரில் இந்திய மாணவர் சங்கமும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் இணைந்து ஆர்்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை திரும்ப பெறவேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

குமரி மாவட்டம் தக்கலை, ஈரோடு மாவட்டம் கோபி ஆகிய இடங்களில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் சத்தியமங்கலத்தில் மறியலில் ஈடுபட்ட அக்கட்சியினர் 37 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே வெள்ளோட்டில், பஸ் கட்டணம் உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 2 பஸ்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பஸ் நிலையத்தில் கூடுதல் கட்டணம் கேட்டதால், கண்டக்டரை கத்தியை காட்டி மிரட்டியதாக வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விறகு வெட்டும் தொழிலாளியான அவர், முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் டிக்கெட்டுக்கு பணம் கேட்ட பஸ் கண்டக்டரை தாக்கி பணப்பையை பறித்து சென்ற தொழிலாளியை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினரும், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பா.ஜனதா சார்பிலும், பரமத்திவேலூரில் தமிழ்புலிகள் கட்சி சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் பட்டுக்கோட்டை அருகே கரம்பயம் கத்திரிக்கொல்லை சாவடியிலும், திருவையாறு அடுத்த மேலத்திருப்பூந்துருத்தியிலும் பொதுமக்கள் திரண்டு சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.