ஜெயலலிதா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு


ஜெயலலிதா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு
x
தினத்தந்தி 2 Feb 2018 11:00 PM GMT (Updated: 2 Feb 2018 10:33 PM GMT)

ஜெயலலிதா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்விக்கு பிறகு, அ.தி.மு.க.வில் இருந்து டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல் (வட சென்னை மாவட்ட செயலாளர்), பார்த்திபன் (வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர்), தங்க தமிழ்செல்வன் (தேனி மாவட்ட செயலாளர்), ரெங்கசாமி (தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர்), கலைராஜன் (தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர்), நெல்லை பாப்புலர் முத்தையா (நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர்) ஆகிய 6 மாவட்ட செயலாளர்கள் உள்பட இதுவரை 2,500-க்கும் அதிகமானோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே அ.தி.மு.க. சட்டதிட்ட விதிகளின் படி புதிய நிர்வாகிகள் சேர்க்கை உறுப்பினர் அட்டை புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியுள்ளது. அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இதுவரையில் 2½ லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்ப மனுக்களை கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து பெற்று சென்றுள்ளனர்.

சலசலப்பு

இந்த நிலையில், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அ.தி.மு.க நிர்வாக ரீதியாக பிரிக்கப்பட்ட 50 மாவட்டங்களில் 44 மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், கட்சியின் அணி நிர்வாகிகள் என 80 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவைத்தலைவர் மதுசூதனன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

மாலை 5 மணிக்கு தொடங்கிய கூட்டம் இரவு 8.20 மணி வரை நீடித்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 50-லிருந்து 70 ஆக உயர்த்துவதற்கான தீர்மானம் வைக்கப்பட்டது. ஆனால் இதற்கு அமைச்சர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பழைய முறைப்படியே மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை தொடர வேண்டும் என்று சிலரும், சிலர் 60 வரை மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தலாம் என்றும் கருத்து தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

ஜெயலலிதா பிறந்தநாள்

மேலும் சிலர், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒரு சிலரை கட்சியின் வளர்ச்சி பணிகள் கருதி மீண்டும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட எந்த விஷயத்திலும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. ஜெயலலிதா பிறந்தநாள், நிர்வாகிகள் சேர்க்கை, உள்ளாட்சி தேர்தல் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். நமக்குள் இருக்கும் பிரச்சினையை ஊடகங்களில் வெளிப்படுத்தக்கூடாது. நாம் மீண்டும் கூடி பேசி எல்லா விஷயத்திலும் நல்ல முடிவை எடுப்போம் என்று பேசியதாக நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.

இதற்கிடையே மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடர்பாக அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள், செய்தி தொடர்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் கட்சியின் வளர்ச்சி பணிகள், உறுப்பினர் சேர்க்கை குறித்து விவாதிக்கப்பட்டது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story