முடங்கியது ஏர்செல் சேவை! கோவையில் வாடிக்கையாளர்கள் போராட்டம்


முடங்கியது ஏர்செல் சேவை!  கோவையில்  வாடிக்கையாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 21 Feb 2018 12:19 PM GMT (Updated: 21 Feb 2018 12:19 PM GMT)

முடங்கியது ஏர்செல் சேவை! கோவையில் ஏர்செல் நிறுவனத்தை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் போராட்டம் நடத்தினர். #TamilNews #LatestTamilNews

சென்னை

தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்செல் தன்னுடைய சேவையை முடக்கியதை அடுத்து, வாடிக்கையாளர்கள் கிளை நிறுவனங்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்செல் நிறுவனம் தனது சேவையை நிறுத்துவதற்கான பணிகளில் இறங்கியுள்ளது. ஏர்செல் நிறுவனத்தை, தமிழகத்தை சேர்ந்த சின்னக்கண்ணன் சிவசங்கரன் என்பவர் கடந்த 1999 ஆம் ஆண்டு தொடங்கினார். அதன் பின் மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல்-ன் பங்குகளை வாங்கியது. தமிழகத்தில் தொடங்கப்பட்ட இந்த சேவை, படிப்படியாக நாடு முழுவதும் விரிவாக்கப்பட்டது., சுமார் 8.5 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டு இயங்கி வந்தது ஏர்செல் நிறுவனம். 

கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது சேவையை தொடங்கிய ஜியோ, பல்வேறு அதிரடி சலுகைகளையும், இலவசங்களையும் அறிவித்தது. இதனால் ஏராளமான வாடிக்கையாளர்கள் ஜியோ சேவைக்கு மாறினர். இதனால், ஏர்டெல், ஐடியா, வோடாபோன் ஆகிய நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் ஏர்செல் நிறுவனம் கடுமையாக பாதிக்கப்படடது.   லாபம் ஈட்டப்படாத தொலைத்தொடர்பு வட்டாரங்களில் தனது சேவையை ஏர்செல் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் நிறுத்தியது. மேலும் டவர் உரிமையாளர்களுக்கு பாக்கி செலுத்தாததால், ஏர்செல் நிறுவன டவர்கள் அணைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஏர்செல் நிறுவனம் முன்னறிவிப்பின்றி பல்வேறு இடங்களில் தனது சேவையை நிறுத்துவதாக புகார் எழுந்தது. அதைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மொபைல் எண், போர்டபிலிட்டியில் வேறு நிறுவனத்துக்கு மாறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏர்செல் வாடிக்கையாளர்கள் தங்களது சேவை முடக்கப்பட்டதை அடுத்து, ஏர்செல் நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

நெட்வொர்க் துண்டிக்கப்பட்ட காரணத்தால், கோவையில் ஏர்செல் நிறுவனத்தை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் போராட்டம் நடத்தினர்.

Next Story