தமிழகத்துக்கு மத்திய அரசு செய்த உதவிகள் என்ன? பிரதமர் மோடி விளக்கம்


தமிழகத்துக்கு மத்திய அரசு செய்த உதவிகள் என்ன? பிரதமர் மோடி விளக்கம்
x
தினத்தந்தி 24 Feb 2018 11:30 PM GMT (Updated: 24 Feb 2018 6:42 PM GMT)

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு செய்த உதவிகள் பற்றி பிரதமர் மோடி விளக்கி பேசினார். #PMModi

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு செய்த உதவிகள் பற்றி பிரதமர் மோடி விளக்கி பேசினார்.

பெண்களுக்கு மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும் விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-

தமிழகத்தில் மத்திய அரசு 24 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலான மதிப்புள்ள திட்டங்களை அமல்படுத்திக்கொண்டிருக்கிறது. மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்த திட்டங்கள் தொடங்கப்பட்டன. அந்த திட்டங்களில், சூரிய சக்தி நிலையங்கள், கச்சா எண்ணெய் குழாய்கள், தேசிய நெடுஞ்சாலைகள், துறைமுகம் ஆகியவை அமைக்கும் பணி அடக்கம். சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்துக்காக மட்டும் ரூ.3,700 கோடிக்கும் மேலாக அனுமதிக்கப்பட்டுள்ளது.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்தபோது 13-வது நிதிக் கமிஷன் மூலம் தமிழகத்துக்கு 81 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்தது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு 14-வது நிதிக்கமிஷன் மூலம் தமிழகம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் அளவு நிதியை, அதாவது 120 சதவீதம் கூடுதலாக பெற்றுள்ளது.

2022-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு ஏழைக்கும் ஒரு வீடு என்ற நிலையை எட்டுவதற்கு அரசு பணியாற்றி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் ஒரு கோடி வீடுகள் கட்டப்பட்டுவிட்டன. ஊரக வீடுகள் கட்டும் திட்டத்துக்காக தமிழகத்துக்கு 2016-2017-ம் ஆண்டுகளில் ரூ.700 கோடியும், 2017-2018-ம் ஆண்டில் ரூ.200 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற வீடுகள் கட்டும் திட்டத்துக்காக ஆறாயிரம் கோடி ரூபாய் தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் பாசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் தமிழக விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் தமிழக விவசாயிகள் ரூ.2,600 கோடி பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.

தமிழக மீன்வளத்தையும் நவீனப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு தேவையான லாங் லைனர் படகுகளை வாங்குவதற்கான நிதியுதவியை நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்குகிறது. கடந்த ஆண்டில் 750 மீன்பிடி படகுகளை லாங் லைனர் படகுகளாக மாற்றுவதற்கு ரூ.100 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக வருவாயை மீனவர்கள் ஈட்ட முடியும்.

சாகர்மாலா திட்டம் மூலமாகவும் தமிழகத்துக்கும், கடலோரம் வாழும் மக்களுக்கும் பல பயன்கள் கிடைக்கும். கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஆயுஷ்மேன் பாரத் திட்டம் மூலம் ஒரு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சையை குறிப்பிட்ட ஆஸ்பத்திரிகளில் ஏழை குடும்பத்தினர் பெற இயலும். இந்த திட்டத்தின் மூலம் 45 கோடி முதல் 50 கோடி மக்கள் பயனடைவர்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Next Story