23 கிலோ தங்கம் சென்னையில் சிக்கியது எழும்பூர் ரெயில் நிலைய சோதனையில் 4 பேர் கைது


23 கிலோ தங்கம் சென்னையில் சிக்கியது எழும்பூர் ரெயில் நிலைய சோதனையில் 4 பேர் கைது
x
தினத்தந்தி 8 March 2018 10:15 PM GMT (Updated: 8 March 2018 8:28 PM GMT)

இலங்கையில் இருந்து கடல் வழியாக கடத்திவரப்பட்ட 23 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று சிக்கியது.

சென்னை, 

இலங்கையில் இருந்து கடல் வழியாக கடத்திவரப்பட்ட 23 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று சிக்கியது. தங்கத்தை கடத்தி வந்த 4 பேரை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது. பெரும்பாலும் விமானம் மூலம் கடத்தி வரப்படும் தங்கம், விமான நிலையங்களில் நடைபெறும் சோதனையின்போது சிக்கிவிடுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு மட்டும் 193 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை கைப்பற்றியுள்ளது. தொடர்ந்து, தங்க வேட்டையும் நடந்து வருகிறது.

இந்தநிலையில், இலங்கையில் இருந்து மர்ம கும்பல் ஒன்று படகில் கடல் வழியாக தங்கக் கட்டிகளை கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஆனால், கடல் எல்லைகளை அவர்கள் நோட்டமிடுவதற்குள் அந்த மர்ம கும்பல் ராமேசுவரம் வந்து தரை இறங்கியது.

பின்னர், தாங்கள் கொண்டு வந்த தங்கக் கட்டிகளை ராமேசுவரத்தை சேர்ந்த 4 பேரிடம் கொடுத்து, சென்னையில் குறிப்பிட்ட நபரிடம் ஒப்படைத்துவிட்டு கமிஷன் தொகை வாங்கிக் கொள்ளுங்கள் என்று அந்த கும்பல் தெரிவித்துள்ளது. பணத்துக்கு ஆசைப்பட்ட 4 பேரும் அதற்கு சம்மதித்தனர்.

போலீசார் சந்தேகப்பார்வையில் இருந்து தப்புவதற்காக, தங்கக்கட்டிகளை பையில் வைத்து எடுத்து வராமல், ஒவ்வொருவரும் இடுப்பில் பெல்ட் அணிவதுபோல், பிரத்யேக உடையில் தங்கக் கட்டிகளை வைத்து ராமேசுவரத்தில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு சேது எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னைக்கு புறப்பட்டனர்.

ரெயிலில் தங்கக் கட்டிகளுடன் 4 பேர் வரும் தகவல் மத்திய வருவாய் புலனாய்வுத் துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நேற்று காலை எழும்பூர் ரெயில் நிலையத்தில் சேது எக்ஸ்பிரஸ் ரெயிலுக்காக காத்திருந்தனர். ரெயில் வந்து நின்றதும் பயணிகள் அனைவரும் இறங்கிச் செல்ல தொடங்கினர்.

அப்போது, கூட்டத்தோடு கூட்டமாக தங்கம் கடத்தி வந்த 4 பேரும் வெளியேற முயன்றனர். ஆனால், அவர் களை கண்டு கொண்ட வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தங்கம் கடத்தி வந்ததை ஒப்புக் கொண்டனர். பின்னர், இடுப்பில் மறைத்து வைத்திருந்த தங்கக் கட்டிகளை எடுத்து புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

மொத்தம் 123 தங்கக் கட்டிகள் இருந்தது. அதன் எடை 23 கிலோ 100 கிராம் ஆகும். அதன் மதிப்பு ரூ.6 கோடியே 73 லட்சம். தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், அதை கொண்டு வந்த 4 பேரையும் கைது செய்து அழைத்து சென்றனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அதே நேரத்தில், கைது செய்யப்பட்ட 4 பேரின் விவரங்களை வெளியிட அவர்கள் மறுத்து விட்டனர்.

கடந்த 30 நாட்களில் மட்டும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் 53 கிலோ தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story