தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் எடப்பாடி பழனிசாமி பேச்சு


தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 8 March 2018 8:37 PM GMT (Updated: 8 March 2018 8:37 PM GMT)

பூம்புகார் நிறுவன கைவினைப் பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #EdappadiPalaniasamy

சென்னை, 

பூம்புகார் நிறுவன கைவினைப் பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கைவினைஞர்கள் தினத்தையொட்டி கைவினைஞர்களுக்கு பூம்புகார் விருதுகள் வழங்குதல் மற்றும் சிறப்பு திட்டங்கள் தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்தது. அமைச்சர் பா.பென்ஜமின் தலைமை தாங்கினார்.

விழாவில் மாமல்லபுரத்தில் ரூ.5 கோடி செலவில் அமைக்கப்பட்ட நகர்ப்புற குடில், ரூ.35 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட பூம்புகார் சிற்றுண்டி உணவகம், சென்னையில் உள்ள பூம்புகார் தலைமையகத்தில் ரூ.1.68 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ‘வடிவமைப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம்’ மற்றும் சுவாமிமலை, தஞ்சாவூர், நாச்சியார்கோவில், மதுரை, வாகைகுளம், கன்னியாகுமரி ஆகிய 6 இடங்களில் ரூ.3.60 கோடியில் அமைக்கப்பட்ட பொது வசதி மையங் களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து, விழா மலரை வெளியிட்டார்.

தொடர்ந்து ‘வாழும் கைவினைப் பொக்கிஷம் விருது’, ‘பூம்புகார் மாநில மற்றும் மாவட்ட விருதுகள்’, ‘அடுத்த தலைமுறை கைவினைஞர் விருது’, ‘கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி விருது’, ‘குழு உற்பத்தி விருது’, ‘பயன்பாடு சார்ந்த கைவினைப் பொருட்கள் விருதுகளை முதல்-அமைச்சர் வழங்கினார்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

பூம்புகார் நிறுவனம் தனது பொருட்களை நேரடியாக ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய மின் வணிக இணைய தளத்தினை அமைத்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பொருட்களை தேர்வு செய்து வாங்கிக்கொள்ள முடியும். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட பொருட்கள் செல்போன் செயலியுடனும் இணைந்த வேன், மோட்டார் சைக்கிள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் நேரடியாக வழங்கப்படுகிறது.

மின் வணிக ஜாம்பவான்களான ஸ்னாப் டீல், பிளிப்கார்ட், கிராப்ட் வில்லா, ஷாப் க்ளுஸ் மற்றும் இந்தியா மார்ட் போன்ற நிறுவனங்கள் மூலம் பூம்புகார் தயாரிப்புகளை மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்வதற்காக வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இந்நிறுவனத்தின் விற்பனை உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டிலும் அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். டி.ஜெயக் குமார் உள்ளிட்ட அமைச்சர் கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ. க்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் டாக்டர் சந்தோஷ் பாபு உள்ளிட்ட அதிகாரிகள் செய்திருந்தனர்.

கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை அரசு முதன்மைச் செயலாளர் க.பணீந்திரரெட்டி நன்றி கூறினார்.

Next Story