பட்ஜெட் உரை:திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு பிரதமரை சந்திக்க அரசு முயற்சி எடுக்கவில்லை என மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு


பட்ஜெட் உரை:திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு பிரதமரை சந்திக்க அரசு முயற்சி எடுக்கவில்லை என மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 15 March 2018 5:29 AM GMT (Updated: 15 March 2018 5:29 AM GMT)

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். #MKStalin #DMK #CauveryIssue

சென்னை,

தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை 10.30 மணிக்கு 2018-19-ம் ஆண்டுக்கான அரசின் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) தாக்கல் செய்தார். அவர் ஏற்கனவே 7 பட்ஜெட்களை சட்டசபையில் தாக்கல் செய்துள்ளார். 

இந்த நிலையில், தமிழக பட்ஜெட் கூட்டத்தொடருக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பின்பும் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.

அரசின் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்து கொண்டிருக்கும் போதே 2018- 19 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையை புறக்கணித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அதனை தொடர்ந்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியார்களிடம் கூறியதாவது:

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி இன்று வரை காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுத்த முடிவின்படி பிரதமரை சந்திக்க அரசு முயற்சி எடுக்கவில்லை. காவிரி விவகாரத்தில் பிரதமர் சந்திக்க மறுக்கிறார், திமுக சார்பில் முதலமைச்சரிடம் சிறப்பு சட்டமன்றத்தை கூட்ட கோரிக்கை வைத்தோம்.  இதுவரை சட்டமன்றத்தை கூட்ட அரசு முன்வரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story