குரங்கணி காட்டுத்தீ விபத்து: சென்னை ஆசிரியை உள்பட மேலும் 2 பேர் சாவு


குரங்கணி காட்டுத்தீ விபத்து: சென்னை ஆசிரியை உள்பட மேலும் 2 பேர் சாவு
x
தினத்தந்தி 15 March 2018 11:15 PM GMT (Updated: 15 March 2018 9:30 PM GMT)

குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சென்னையைச் சேர்ந்த ஆசிரியை உள்பட மேலும் 2 பேர் உயிர் இழந்தனர்.

மதுரை,

தேனி மாவட்டம், குரங்கணி மலைப்பகுதியில் கடந்த வாரம் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் மலையேற்ற பயிற்சிக்காக சென்றிருந்த சென்னை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 36 பேர் சிக்கித் தவித்தனர். அவர்களில் சம்பவ இடத்திலேயே 9 பேர் காட்டுத்தீயில் கருகி இறந்தனர். 15-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த தீக்காயம் அடைந்து மதுரையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.

அவர்களில் சென்னையைச் சேர்ந்த நிஷா, ஈரோடு கவுந்தப்பாடியைச் சேர்ந்த திவ்யா, கோவை மாவட்டம் கிணத்துக்கடவைச் சேர்ந்த திவ்யா விஸ்வநாதன் ஆகியோர் அடுத்தடுத்த நாட்களில் இறந்து போனார்கள். மீதமுள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பேர் நேற்று பரிதாபமாக உயிர் இழந்தனர். இதனால் காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.

நேற்று இறந்தவர்களில் ஒருவர் ஈரோடு கவுந்தப்பாடியைச் சேர்ந்த கிரி என்பவரின் மகன் கண்ணன் (வயது 26) ஆவார். இவர் நேற்று மாலை உயிர் இழந்தார்.

கண்ணனுக்கு திருமணம் ஆகவில்லை. இவர் 70 சதவீத தீக்காயங்களுடன் அனுமதிக் கப்பட்டு இருந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கண்ண னின் தந்தை கிரி இறந்துவிட்டார். தாயார் வசந்தா வீட்டு வாசலில் டீக்கடை நடத்தி, மகனை படிக்க வைத்தார்.

கண்ணன், சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தார். 6 மாதங்களுக்கு முன்பு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

காட்டுத்தீ சூழ்ந்தபோது, கண்ணன் தப்பி வெளியேறி விட்டார். ஆனால் தன்னுடன் வந்த நண்பர்களான விவேக்-திவ்யா தம்பதியர், தமிழ்ச்செல்வன் ஆகியோரை காப்பாற்றுவதற்காக மீண்டும் மலைப்பகுதிக்குள் சென்ற போது நெருப்பில் சிக்கி காயம் அடைந்து சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்து விட்டார். கண்ணனுக்கு ஒரு அக்கா உள்ளார்.

கண்ணன் இறந்த சிறிது நேரத்தில், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த சென்னையைச் சேர்ந்த அனுவித்யாவும் (25) உயிர் இழந்தார்.

இவர் சென்னை சேலையூரை அடுத்த ராஜகீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த முத்துமாலை என்ற தொழில் அதிபரின் மகள் ஆவார். இவர்களுடைய சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள சிறுதொண்டநல்லூர் ஆகும். எம்.எஸ்சி. சைக்காலஜி படித்துள்ள அனுவித்யா, மந்தைவெளியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். மாரத்தான், சைக்கிளிங், நீச்சல் உள்பட பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட இவர் முதியோர்களுக்கு உதவி செய்யும் சமூக பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.

அவரது உடல் சென்னை ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு இன்று(வெள்ளிக்கிழமை) இறுதி சடங்குகள் நடைபெற உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, சென்னையில் இருந்து மதுரை வந்த சிறப்பு மருத்துவ குழுவினர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தேவி, சிவசங்கரி ஆகியோருடைய உறவினர்களிடம் அவர்களுக்கு வழங்க இருக்கிற சிறப்பு சிகிச்சை பற்றிய விளக்கத்தை எடுத்துரைத்தனர்.

இதுகுறித்து டாக்டர்கள் ஜெயராமன், ஏஞ்சலின், சுதா ஆகியோர் கூறுகையில், “சென்னையில் இருந்து சிறப்பு குழுவாக இங்கே வந்து நாங்கள் சிகிச்சை மேற்கொள்கிறோம். சிகிச்சையில் இருக்கும் அனைவருமே ஆபத்தான நிலையில் இருக்கின்றனர். தீக்காயத்தின் அளவு மாறாது. தீக்காயம் ஏற்பட்டு சில நாட்கள் ஆன நிலையில் கிருமித்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. சில நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 100 சதவீதம் காப்பற்ற தீவிரமாக முயன்று வருகிறோம்” என்றனர்.

காட்டுத்தீயில் சிக்கியவர்களில் 27 பேர் கொண்ட குழுவினர் சென்னை டிரெக்கிங் கிளப் மூலம் அனுப்பி வைக்கப்பட்டவர்கள். இந்த டிரெக்கிங் கிளப் அலுவலகம், சென்னை பாலவாக்கத்தில் உள்ளது. அதன் உரிமையாளராக பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பீட்டர் வான் ஜியாட் உள்ளார். காட்டுத்தீயால் உயிரிழப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னை டிரெக்கிங் கிளப் உரிமையாளர் உள்பட அலுவலர்கள் பலரும் தலைமறைவாகி விட்டதாக கூறப்பட்டது.

இதையடுத்து டிரெக்கிங் கிளப் உரிமையாளர் பீட்டர் வான் ஜியாட்டை பிடிப்பதற்காக, சின்னமனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ராஜ்குமார் தலைமையில் போலீசார் சென்னைக்கு விரைந்தனர். நேற்று முன்தினம் அவருடைய அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து 2-வது நாளாக சென்னையில் தனிப்படை போலீசார் முகாமிட்டு, பீட்டர் வான் ஜியாட்டை வலைவீசி தேடி வருகின்றனர். இவர் வெளிநாட்டை சேர்ந்தவர் என்பதால், வெளிநாட்டுக்கு தப்பி சென்று விடாமல் தடுக்க அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். ஆனால், அவர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளதால் சென்னையில் இருந்து வெளிமாநிலம், வெளி மாவட்டங்களுக்கு செல்லும் சாலைகளில் உள்ள சோதனை சாவடிகளை தொடர்பு கொண்டும், அவருடைய புகைப்படத்தை அனுப்பி தப்பி செல்லாமல் தடுக்கவும் போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இதேபோல் பீட்டர் வான் ஜியாட் பயன்படுத்துகிற செல்போன், இணையதளம் ஆகியவற்றின் மூலம் அவர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டறிய தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தனியாக கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்களும், நவீன தொழில்நுட்பங்கள் உதவியுடன் பீட்டர் வான் ஜியாட் எங்கிருக்கிறார்? என்பதை கண்டறியும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

குரங்கணியில் காட்டுத்தீ ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பும் சிலர் குழுவாக மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டதாக, குரங்கணி பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர். இதேபோல், ஆன்லைன் மூலம் சில தனியார் சுற்றுலா அலுவலகங்கள் வருகிற 24, 25-ந் தேதிகளில் மலையேற்ற பயிற்சி மேற்கொள்ள புதிய பயண திட்டத்தை தயார் செய்திருந்தன. இதற்கான முன்பதிவும் செய்யப்பட்டு வந்தது. ஆனால், குரங்கணி தீ விபத்து எதிரொலியாக, இந்த மலையேற்ற பயிற்சிக்கான முன்பதிவை சுற்றுலா அலுவலகங்கள் ரத்து செய்துள்ளன.

கொழுக்குமலைக்கு இதுநாள் வரை அனுமதியின்றி சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள் என்ற தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், குரங்கணி- கொழுக்குமலையை மையப்படுத்தி தொடங்கப்பட்ட சில சுற்றுலா அலுவலக இணையதளங்கள் சில நாட்களாக முடங்கி வருகின்றன. 

Next Story