புதிய பார்வை ஆசிரியர் ம.நடராஜன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்


புதிய பார்வை ஆசிரியர் ம.நடராஜன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்
x
தினத்தந்தி 18 March 2018 7:08 AM GMT (Updated: 18 March 2018 7:17 AM GMT)

புதிய பார்வை ஆசிரியர் ம.நடராஜன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Natarajan

சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜன் (வயது 74) சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் ம.நடராஜன் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் மாற்ற ஆலோசனை வழங்கினார்கள்.

அதன்படி அக்டோபர் 4-ந்தேதி அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகம் தானமாக பெறப்பட்டு பொருத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

உடல் நிலை சற்று தேறிய பின்னர் மருத்துவமனையில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் 2-ந்தேதி வீடு திரும்பி மகாலிங்கபுரத்தில் தங்கி ஓய்வு எடுத்து வந்தார்.

கடந்த 5 மாதமாக மாதம் தோறும் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு சற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

உடனடியாக அவர் குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் அவசர சிகிச்சை பிரிவில் தொடர் சிகிச்சையில் ம.நடராஜன் இருந்து வருகிறார். 

இந்தநிலையில், சென்னை குளோபல் மருத்துவமனை நிர்வாகம்  ம.நடராஜன் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது,

அதில் புதிய பார்வை ஆசிரியர் ம.நடராஜன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. நடராஜனுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. மார்பக தொற்றுநோய் காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா பரோலில் வர இருப்பதாகவும், அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Next Story