மத்திய நிதி ஆணையத்தின் அதிகார வரம்பை முழுமையாக ஏற்க முடியாது


மத்திய நிதி ஆணையத்தின் அதிகார வரம்பை முழுமையாக ஏற்க முடியாது
x
தினத்தந்தி 23 March 2018 12:00 AM GMT (Updated: 22 March 2018 11:00 PM GMT)

மத்திய நிதி ஆணையத்தின் அதிகார வரம்பை முழுமையாக ஏற்க முடியாது என்று சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சென்னை,

சட்டசபையில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், 15-வது மத்திய நிதி ஆணையத்துக்கு கொடுக்கப்பட்டு இருக்கக்கூடிய ஆய்வு வரம்பு, மாநிலங்கள் நிதி தன்னாட்சியை பாதிக்கக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது. அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தினார்.
இதற்கு பதில் அளித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது.

15-வது மத்திய நிதி ஆணையம் என்.கே.சிங் தலைமையில் அமைப்பதற்கான அறிவிக்கையை, 2017-ம் ஆண்டு நவம்பர் 27-ந்தேதி, மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த குழுவின் பரிந்துரைகள், 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல், 2025-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை, 5 ஆண்டு காலத்துக்கு இருக்கும்.

கடந்தகால மத்திய நிதி ஆணையங்களை போல அல்லாமல், 15-வது மத்திய நிதி ஆணையத்துக்கான அதிகார வரம்புகள், மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. கடந்த காலங்களில் மத்திய நிதி ஆணையத்தின் நிதிப்பகிர்வு பரிந்துரைகள், 1971-ம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் தான் அமைந்திருந்தன. ஆனால், 15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் 2011-ம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் நிதி பகிர்வை மேற்கொள்ள வழி வகுக்கிறது.

தமிழ்நாடு மக்கள்தொகையை சிறப்பான முறையில் கட்டுப்படுத்தியுள்ள நிலையில், மக்கள்தொகையை கட்டுப்படுத்த எந்தவித நடவடிக்கைகளும் எடுக்காத மாநிலங்கள், தமிழ்நாடு போன்ற மாநிலங்களைவிட கூடுதல் நிதி உதவி பெறும் வகையில், இந்த அதிகார வரம்பு உள்ளது. அதனால் தான் தமிழ்நாடு அரசு இதை கடுமையாக எதிர்க்கிறது.

நிதி பகிர்வு பரிந்துரைகள், 2011-ம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில் என்று வரம்பு இருந்தால், மக்கள்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்தி, பிறப்பு-இறப்பு விகிதத்துக்கு சமமான நிலையை அடைய எடுத்த நடவடிக்கைகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கு இந்த வரம்புகளில் இடம் இருந்தாலும், இந்த ஊக்கத்தொகை, ‘வெயிட்டேஜ்’ அளவு மக்கள் தொகை, ‘வெயிட்டேஜ்’ அடிப்படையில் வழங்கப்படும் நிதி பகிர்வை சமன் செய்தால் மட்டுமே, தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு இதனால் பாதகம் ஏற்படாது.

பல்வேறு பொருத்தமற்ற காரணிகளை மத்திய நிதி ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் கொண்டு வந்திருப்பது, ஒரு தவறான முயற்சி என தமிழக அரசு கருதுகிறது. தேவையற்ற ஷரத்துகள் நீக்கப்பட வேண்டும் என்றும், நியாயமான வகையில் நிதி பகிர்வு கணிக்கப்பட்டு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்படும். 15-வது மத்திய நிதி ஆணையம் கூட்டும் கலந்துரையாடல் கூட்டங்களில், மத்திய நிதி ஆணையத்தின் அதிகார வரம்பை முழுமையாக ஏற்க முடியாது என்ற கருத்துகள் வலியுறுத்தப்பட்டு, மாநிலத்தின் நிலை, தொடர்ந்து நிலைநாட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) மீதான விவாதத்துக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்து பேசினார். அவர் பேசியதாவது:-

இந்த பட்ஜெட் பற்றி பத்திரிகைகளும், ஊடகங்களும், தங்களுடைய கருத்துகளை ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளன. ‘தினத்தந்தி’ நாளிதழில், நிதி நிலை அறிக்கையின் பல்வேறு அம்சங்களை தனித்தனியாக எடுத்துக்கூறி 16.3.2018 அன்று தலையங்கம் வெளியிட்டுள்ளது.

அதில், குறிப்பாக, “அத்திக்கடவு -அவிநாசி குடிநீர் வழங்கல் மற்றும் நீர்ப்பாசனத் திட்டத்தை ரூ.1,789 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த அரசு விரைவில் அனுமதி வழங்க உள்ளது என்ற அறிவிப்பு நிச்சயமாக கொங்கு மண்டல விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் ஒரு மகிழ்ச்சிகரமான அறிவிப்பாகும். இந்த பட்ஜெட்டில் சில புதிய அறிவிப்புகள் இருப்பதை பாராட்டித்தான் ஆக வேண்டும்” என்று கூறி ‘தினத்தந்தி’ நாளிதழ் பாராட்டு தெரிவித்துள்ளது.

இந்த பட்ஜெட் பற்றி அவரவரின் மனநிலைப்படி கருத்துகளை பிரதிபலித்துள்ளனர். அவர்கள் கூறிய குறைகளும் நிவர்த்தி செய்யப்படும். சிரமமான நிதிச்சூழல் இருந்தாலும்கூட, மக்கள் நலத்திட்டங்களை தொய்வின்றி அரசு செயல்படுத்தி வருகிறது.

பிற மாநிலங்களில் இல்லாத அளவிற்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியச் செலவினம் தமிழ்நாட்டில் உள்ளது. அதனால்தான் நமது மாநிலம் மனிதவளக் குறியீட்டிலும் மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளது.

2011-2012 மற்றும் 2012-2013 வரை நமது மாநிலம் வருவாய் உபரியுள்ள மாநிலமாகத்தான் இருந்தது. ஆனால், 2013-2014 முதல் உலகப் பொருளாதார வளர்ச்சியில் இந்திய அளவில் மந்த நிலை ஏற்பட்டது. இந்திய அளவிலும் பொருளாதார வளர்ச்சி குறைந்ததுபோல் தமிழ்நாட்டிலும் பொருளாதார வளர்ச்சி குறைந்தது.

இந்த மாற்றம் தமிழ்நாட்டில் மட்டும் நிகழ்ந்தது அல்ல. பல மாநிலங்களிலும் இந்த மாற்றம் ஏற்பட்டது. அதனால்தான், நமது மாநில வரி வருவாய் வரவு 2013-2014 முதல் கணிசமாக குறைந்துவிட்டது.

2013-2014-ல் மாநிலத்தினுடைய சொந்த வரி வருவாய் 3.46 சதவீத வளர்ச்சியும், அதே காலகட்டத்தில் வருவாய் செலவினங்கள் சராசரியாக ஆண்டுதோறும் 14.63 சதவீதம் அளவிற்கு மிகவும் கூடியது. மாநில வரி வருவாய் போதிய வளர்ச்சியைப் பெறாத நிலையில், வருவாய்ப் பற்றாக்குறை இந்த காலகட்டத்தில் ஏற்பட்டது.

நிதி பற்றாக்குறையைப் பொறுத்தவரையில் அது கட்டுக்குள்தான் உள்ளது. 2016-2017-ம் ஆண்டில் மட்டும், இது 4.20 என்ற அளவில் இருந்தது. இதற்கான காரணமும் உதய் திட்டம்தான். உதய் திட்டத்தைச் செயல்படுத்திய ராஜஸ்தான், அரியானா, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்கள், தமிழ்நாட்டைப்போல் நிதி பற்றாக்குறையை அடுத்த ஆண்டுகளில் 3 சதவீத வரையறைக்குள் கொண்டுவர இயலவில்லை. ஆனால் அதை நாம் கட்டுப்படுத்தி இருக்கிறோம்.

ஆனால், 2017-2018-ம் ஆண்டிலும் தமிழ்நாட்டின் நிதி பற்றாக்குறை 40 ஆயிரத்து 736 கோடி ரூபாயாகவும், 2018-2019-ம் ஆண்டில் இது 44 ஆயிரத்து 481 கோடி ரூபாயாகவும் இருப்பதால், மாநில உற்பத்தி மதிப்பில், முறையே இவை 2.82 சதவீதமாகவும் 2.79 சதவீதமாகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட வரையறைக்குள்தான் உள்ளது.

திறமையான நிதி மேலாண்மையின் காரணமாக நிதி பற்றாக்குறை மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 2019-2020-ம் ஆண்டில் 2.76 சதவீதமாகவும், 2020-2021-ம் ஆண்டில் 2.57 சதவீதமாகவும் படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடன் அளவைப்பற்றி பலரும் பல்வேறு கருத்துகளை இங்கே கூறி வருகின்றனர். வெளியிலும் கூறி வருகின்றனர். 2010-2011-ம் ஆண்டின் இறுதியில் (தி.மு.க. ஆட்சி இறுதியில்), நிகரக் கடன் அளவு ஒரு லட்சத்து ஓராயித்து 349 கோடி ரூபாய். அந்த ஆண்டின் மாநில உற்பத்தி மதிப்பு 5 லட்சத்து 84 ஆயிரத்து 896 கோடி ரூபாய்.

ஆனால், 2017-2018-ம் ஆண்டு இறுதியில், நிகரக் கடன் அளவு 3 லட்சத்து 11 ஆயிரத்து 882 கோடி ரூபாயாகவும், ஆனால், மாநில உற்பத்தி மதிப்பு 14 லட்சத்து 45 ஆயிரத்து 227 கோடி ரூபாயாகவும் இருக்கும். மாநில உற்பத்தி மதிப்பு உயர்வதுபோல், கடன் அளவும் உயர்வது இயல்பான ஒன்றுதான்.

வட்டிச் செலவினத்தைப் பொறுத்தவரை, அது உயர்ந்துள்ளது என்பது உண்மைதான். 2018-2019-ம் ஆண்டு வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகளின்படி, சற்று குறைந்து 16.81 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வரவு-செலவுத் திட்டத்தை நாங்கள் வரியில்லாத பட்ஜெட் என்று கூறவில்லை. புதிய வரிகள் எதுவும் போடவில்லை என்பதுதான் உண்மை. எங்களைப் பொறுத்தவரை, மக்கள்மீது தேவையற்ற வரிச்சுமையைச் சுமத்தக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story