போக்குவரத்து போலீசார் லஞ்சம் வாங்குவதை தடுக்க அதிரடி


போக்குவரத்து போலீசார் லஞ்சம் வாங்குவதை தடுக்க அதிரடி
x
தினத்தந்தி 10 May 2018 11:30 PM GMT (Updated: 10 May 2018 8:43 PM GMT)

போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம், அபராத தொகையை ரொக்கப்பணமாக வசூலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. #TNPolice

சென்னை, 

போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம், அபராத தொகையை ரொக்கப்பணமாக வசூலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ரொக்கமாக பணம் வாங்கினால் அது லஞ்சமாக கருதப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை நகரில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம், அபராத தொகை வசூலிக்கும் முறையில் தற்போது அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. ‘டிஜிட்டல் முறை’யில் அபராத தொகையை வசூலிக்கும் இந்த புதிய நடைமுறை நேற்று முதல் சென்னையில் அமலுக்கு வந்தது. ரொக்கப்பணம் இல்லாமல், அபராத தொகை வசூலிக்கும் புதிய திட்டத்தின் தொடக்கவிழா நேற்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது.

போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இந்த புதிய திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசுகையில் கூறியதாவது:-

இனிமேல் வாகன ஓட்டிகளிடம் அபராத தொகையை போக்குவரத்து போலீசார் ரொக்கப்பணமாக வாங்கமாட்டார்கள். பணமாக போலீசார் வாங்குவதும் தவறு. அபராத தொகையை வாகன ஓட்டிகள் பணமாக கொடுப்பதும் தவறு. அபராத தொகை வசூலிப்பதற்காக மிகவும் எளிதான நவீன தொழில்நுட்பத்தோடு கூடிய புதிய திட்டம் இன்று (நேற்று) முதல் அமலுக்கு வந்துள்ளது.

அபராத தொகைக்கு இ-சலான் ரசீது மட்டுமே இனிமேல் போக்குவரத்து போலீசாரால் வழங்க முடியும். அதோடு அவர்கள் பணி முடிந்துவிட்டது. அபராத தொகை எப்படி செலுத்த வேண்டும் என்பதை வாகன ஓட்டிகள்தான் முடிவு செய்ய வேண்டும்.

சமீப காலமாக நடந்த கசப்பான சம்பவங்கள்தான் இந்த திட்டத்தை கொண்டுவர வழிவகை கண்டுள்ளது. இந்த திட்டம் சிறப்பாக செயல்படுவதற்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் போக்குவரத்து போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த புதிய திட்டம் குறித்து போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் அருண் விளக்கம் அளித்து பேசினார். அவர் கூறியதாவது:-

வாகன ஓட்டிகளிடம் ‘ஸ்பாட்பைன்’ மூலம் ரொக்கப்பணமாக அபராதம் வசூலிக்கும் முறை கடந்த 25 ஆண்டுகளாக, 1992-ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. அதன்பின்னர் கடந்த 2011-ம் ஆண்டு இ-சலான் ரசீது மூலம் அபராத தொகை செலுத்தும் நடைமுறை கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படவில்லை.

‘டிஜிட்டல் முறை’யில், ரொக்கப்பணம் இல்லாமல் அபராத தொகையை செலுத்தும் புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 6 வழிமுறைகள் மூலமாக அபராத தொகையை செலுத்தலாம்.

முதல் வழியில் ‘கிரெடிட் கார்டு’ அல்லது ‘டெபிட் கார்டு’ மூலமாக போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளிடமே அபராத தொகை செலுத்தலாம். இரண்டாவது வழியில் பாரத ஸ்டேட் வங்கியின் இணையதள பரிவர்த்தனை மூலமாக அபராத தொகையை கட்டலாம். மூன்றாவதாக ‘பேடிஎம்’ வழியாக அபராத தொகையை செலுத்தலாம். நான்காவதாக சென்னையில் உள்ள 132 இ-சேவை மையங்கள் மூலமாகவும் அபராத தொகையை கட்டலாம். இ-சேவை மையங்கள் மூலம் அபராத தொகையை செலுத்தும்போது, குறிப்பிட்ட வாகன எண்ணையும், இ-சலான் குறியீட்டு விவரத்தையும் தெரிவிக்க வேண்டும். ஐந்தாவதாக அருகில் உள்ள தபால் நிலையங்களுக்குச் சென்றும் வாகன எண், இ-சலான் குறியீடு விவரத்தை தெரிவித்து அபராத தொகையை செலுத்தலாம். ஆறாவதாக நீதிமன்றத்தின் மூலமாகவும் அபராத தொகையை செலுத்தலாம்.

நடமாடும் நீதிமன்றங்கள் மூலமாகவோ அல்லது வாரத்தின் இறுதி நாட்களில் மற்ற நீதிமன்றங்கள் மூலமாகவோ அபராத தொகையை கட்டலாம்.

அபராத தொகைக்கான இ-சலான் ரசீது பெற்ற 48 மணி நேரத்திற்குள் மேற்கண்ட 6 வழிமுறைகள் வாயிலாக வாகன ஓட்டிகள் அபராத தொகையை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், அபராத தொகை கட்டாத வாகன ஓட்டிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அபராத தொகை வசூலிக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

போக்குவரத்து போலீசார் அபராத தொகையை ரொக்கப்பணமாக வாங்குவது கடுமையான குற்றமாக கருதப்படும். ரொக்கப்பணமாக வாங்கினால் லஞ்சப்பணமாக கருதப்பட்டு, சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அபராத தொகைக்கான இ-சலான் ரசீது வழங்குவதற்காக 300 எந்திரங்கள் சென்னை நகர போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது. ‘ஸ்வைப் கருவி’களும் கொடுக்கப்பட்டுள்ளது. இ-சலான் எந்திரங்களை போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளுக்கு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இந்த நிகழ்ச்சியில் வழங்கினார்.

அபராத தொகையை ரொக்கப்பணமாக இல்லாமல் ‘டிஜிட்டல் முறை’யில் எவ்வாறு செலுத்துவது என்பது பற்றிய, துண்டு பிரசுரங்களும் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. இந்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும். இந்த நிகழ்ச்சியில் மாநில குற்ற ஆவண காப்பக கூடுதல் டி.ஜி.பி. சீமாஅகர்வால், கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் சாரங்கன், ஜெயராம், சேஷசாயி, கணேசமூர்த்தி உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். வங்கி அதிகாரிகளும் பங்கேற்றனர்.

Next Story