பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி நாள் விழா: நோயற்ற சமுதாயத்தை உருவாக்க நாம் உறுதி ஏற்க வேண்டும்


பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி நாள் விழா: நோயற்ற சமுதாயத்தை உருவாக்க நாம் உறுதி ஏற்க வேண்டும்
x
தினத்தந்தி 12 May 2018 2:45 AM IST (Updated: 12 May 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

நோயற்ற சமுதாயத்தை உருவாக்க நாம் உறுதி ஏற்க வேண்டும் என்று பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி நாள் விழாவில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பொதுமருத்துவ துறை தலைவர் டாக்டர் கனி பேசினார்.

திருச்செந்தூர், 

நோயற்ற சமுதாயத்தை உருவாக்க நாம் உறுதி ஏற்க வேண்டும் என்று பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி நாள் விழாவில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பொதுமருத்துவ துறை தலைவர் டாக்டர் கனி பேசினார்.

கல்லூரி நாள் விழா

திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியின் 7-ம் ஆண்டு கல்லூரி நாள் விழா, கல்லூரி வளாகத்தில் நேற்று மாலையில் நடந்தது. கல்லூரி செயலாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜன் தொடக்க உரையாற்றினார். கல்லூரி முதல்வர் கலைக்குரு செல்வி ஆண்டறிக்கை வாசித்தார்.

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பொதுமருத்துவ துறை தலைவர் டாக்டர் கனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

நல்ல எண்ணங்களுடன்...

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். எந்த நோயும் இல்லாதவர்களே கோடீசுவரர்களாக கருதப்படும் காலம் இது. செவிலியர்களுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது. செவிலியர்கள் நோயாளிகளிடம் அன்பு, இரக்கம், பொறுமை, அரவணைப்புடன் நடந்து கொள்ள வேண்டும். நாம் எப்போதும் நல்ல எண்ணங்களுடன் நேர்மையாக செயல்பட வேண்டும். நமது சுற்றுச்சூழலையும், மனதையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இதனால் மன அழுத்தம் இன்றி வாழலாம்.

மேலும் நாம் தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்பட வேண்டும். நாம் எதிர்காலத்தில் எப்படி இருக்க வேண்டும்? என்று நினைக்கின்றோமோ, அப்படியே ஆகின்றோம். எனவே நாம் உயர்வான சிந்தனைகளுடன் வாழ வேண்டும்.

விடாமுயற்சியுடன்...

தற்போதைய காலகட்டத்தில் தொற்றும் நோய்கள், தொற்றோ நோய்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நோயற்ற சமுதாயத்தை உருவாக்க நாம் உறுதி ஏற்க வேண்டும். நமது உடலையும், மனதையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். சமுதாய பணிக்காக எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் உழைக்க செவிலியர்கள் தயாராக இருக்க வேண்டும். முடியாது என்ற சொல், முட்டாள்களின் அகராதியில்தான் இருக்கும்.

நாம் கடின உழைப்புடனும், விடாமுயற்சியுடனும், பணிவுடனும், ஒழுக்கத்துடன் செயல்பட்டால் வாழ்வில் வெற்றி பெறலாம். ஒவ்வொருவரும் ஒரு லட்சியத்தை நிர்ணயித்து, அதனை நோக்கி பயணித்து வெற்றி பெற வேண்டும். மாணவிகள் வாழ்வின் சிறந்த நிலையை அடைய வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆண்டு மலர் வெளியீடு

பின்னர் கல்லூரியின் ஆண்டு மலரை கல்லூரி செயலாளர் கோபாலகிருஷ்ணன் வெளியிட்டார். அதனை தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை பொதுமருத்துவ துறை தலைவர் டாக்டர் கனி பெற்று கொண்டார். பின்னர் அவர், தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது.

விழாவில் கல்லூரி முதல்வர்கள் சுப்பிரமணியம் (ஆதித்தனார் கல்லூரி), ஜெயந்தி (கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி), வைஸ்லின் ஜிஜி (டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி), சுவாமிதாஸ் (டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி), பெவின்சன் பேரின்பராஜ் (டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி), மரிய செசிலி (டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்) மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி துணை முதல்வர் ஸ்ரீபிரியா நன்றி கூறினார்.

Next Story