அம்பேத்கர் சட்டக்கல்லூரியை இடமாற்ற ஐகோர்ட்டு உத்தரவு: மாணவர்கள் எந்த மாவட்டத்திற்கு செல்வார்கள் என்று தெரியவில்லை சட்ட கல்வி அதிகாரி தகவல்


அம்பேத்கர் சட்டக்கல்லூரியை இடமாற்ற ஐகோர்ட்டு உத்தரவு: மாணவர்கள் எந்த மாவட்டத்திற்கு செல்வார்கள் என்று தெரியவில்லை சட்ட கல்வி அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 11 May 2018 9:30 PM GMT (Updated: 11 May 2018 8:38 PM GMT)

சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியை திருவள்ளூர் மாவட்டத்திற்கும், காஞ்சீபுரம் மாவட்டத்திற்கும் மாற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை, 

சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியை திருவள்ளூர் மாவட்டத்திற்கும், காஞ்சீபுரம் மாவட்டத்திற்கும் மாற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் மாணவர்கள் எந்த மாவட்டத்திற்கு செல்வார்கள் என தெரியவில்லை என்று சட்ட கல்வி அதிகாரி கூறினார்.

சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ளது. இது இந்தியாவில் 2-வது பழமை வாய்ந்த கல்லூரியாகும். இந்த சட்ட கல்லூரி ‘மெட்ராஸ் லா காலேஜ்’ என்று அழைக்கப்பட்டது. 1990-ம் வருடம் டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த கல்லூரியை காஞ்சீபுரம் மாவட்டத்திற்கும், திருவள்ளூர் மாவட்டத்திற்கும் இடம் மாற்றம் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த கல்லூரி காஞ்சீபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கம் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் பட்டரைபெரும்புதூர் ஆகிய இடங்களில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்கு மாற்றப்பட உள்ளது.

சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள், நடப்பு கல்வியாண்டின் வகுப்புகள் ஜூலை 9-ந் தேதி முதல் தொடங்க உள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. எனவே, அதற்கு முன்பாக சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்யவேண்டும். இந்த பணியில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பை போலீசார் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

இதுகுறித்து சட்டக்கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி காஞ்சீபுரம் மாவட்டத்திற்கும், திருவள்ளூர் மாவட்டத்திற்கும் மாற்றப்பட உள்ளது. அந்த கட்டிடங்களை பொதுப்பணித்துறை இதுவரை எங்களிடம் ஒப்படைக்கவில்லை. இப்போது 3 வருட படிப்பு படித்துவரும் மாணவர்கள் எந்த மாவட்டத்திற்கு செல்வார்கள், 5 வருட படிப்பு படித்துவரும் மாணவர்கள் எந்த மாவட்டத்திற்கு செல்வார்கள் என்ற விவரம் தெரியவில்லை. இன்னும் எந்த முடிவும் நாங்கள் எடுக்கவில்லை. இதுகுறித்து அரசு தான் முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் சிலர் கூறியதாவது:-

கல்லூரியை மாற்றுவதில் அதிருப்தி அடைந்துள்ளோம். அடிப்படை வசதிகள் எதுவும் செய்துதராமல் எப்படி செல்வது. இப்போது படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் பலர் சென்னை ஐகோர்ட்டுக்கு பயிற்சிக்கு செல்வார்கள். அப்படி இருக்கையில் மாற்றம் செய்தால் எப்படி செல்லமுடியும்.

சட்டக்கல்லூரி அருகே 3 கிலோ மீட்டர் தூரத்திற்குள் கோர்ட்டு இருக்க வேண்டும் என்பது சட்டம். தினமும் ஐகோர்ட்டுக்கு புதிய கல்லூரி வளாகத்தில் இருந்து வர பஸ் கட்டணத்திற்கு ஏழை மாணவர்கள் என்ன செய்வார்கள்? எனவே படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களை மாற்றக்கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story