சென்னை பெண்ணை கொன்ற வழக்கில் மேலும் 11 பேர் கைது
போளூர் அருகே குழந்தை கடத்தல் கும்பல் என கருதி சென்னை பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
போளூர்,
போளூர் அருகே குழந்தை கடத்தல் கும்பல் என கருதி சென்னை பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பெண் பலி
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே குழந்தை கடத்தல் கும்பல் என கருதி 5 பேர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சென்னையைச் சேர்ந்த ருக்மணி அம்மாள் (வயது 65) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த கஜேந்திரன், சந்திரசேகரன் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெங்கடேசன், மோகன்குமார் இருவரும் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் பலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 5 பேர் மீதான தாக்குதல் குறித்த வீடியோ காட்சி மூலம் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
தலைமறைவு
போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து களியம், தம்புகொட்டான்பாறை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமத்தினர் பலர் தங்களது வீடுகளை காலி செய்து விட்டு தலைமறைவாகி விட்டனர். ஒரு சில வீடுகளில் பெண்கள் மட்டும் உள்ளனர்.
இதனால் அந்த கிராமங்கள் 3-வது நாளாக நேற்றும் வெறிச்சோடி காணப்பட்டன.
மேலும் 11 பேர் கைது
இந்த வழக்கில் ஏற்கனவே 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று மேலும் 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ளவர்கள் மலைக்கிராமங்களில் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 364 மலைக் கிராமங்களில் போலீசார் தேடுதல் வேட்டையில் இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story