மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறாதது அதிர்ச்சி அளிக்கிறது டாக்டர் ராமதாஸ் அறிக்கை


மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறாதது அதிர்ச்சி அளிக்கிறது டாக்டர் ராமதாஸ் அறிக்கை
x
தினத்தந்தி 13 May 2018 9:15 PM GMT (Updated: 13 May 2018 7:46 PM GMT)

காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வரைவு செயல்திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்காக மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறாதது அதிர்ச்சியளிக்கிறது என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss

சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வரைவு செயல்திட்டத்தை நாளை (இன்று) தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ள நிலையில், அத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்காக மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறாதது அதிர்ச்சியளிக்கிறது. காவிரி விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுவது இதன்மூலம் மீண்டும் உறுதியாகியுள்ளது.

கர்நாடக தேர்தல் பரப்புரை முடிவடைந்த பின்னர் பிரதமர் நரேந்திரமோடி திடீர் பயணமாக நேபாளம் சென்றதன் நோக்கமும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தையும், அதில் காவிரி வரைவுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதையும் தவிர்ப்பதற்காகத் தானோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நேபாள பயணம் முடிந்து பிரதமர் தாயகம் திரும்பிவிட்ட நிலையில், அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் தென்படவில்லை. இது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.

அதுமட்டுமின்றி, ஒருவேளை காவிரி வரைவுத் திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு நாளை (இன்று) தாக்கல் செய்தாலும் கூட, அதன்படி அமைக்கப்படவிருக்கும் அமைப்பு காவிரி மேலாண்மை வாரியத்திற்கு இணையான அதிகாரம் கொண்டதாக இருக்காது. இதை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் அவரையும் அறியாமல் உச்சநீதிமன்றத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

தமிழகத்திற்கு எதிரான மத்திய அரசின் துரோகம் இனியும் தொடர உச்சநீதிமன்றம் அனுமதிக்கக்கூடாது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வரைவுத் திட்டத்துடன் மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திர பிரகாஷ் சிங் நேர் நிற்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. அதன்படி காவிரி வரைவு திட்டம் தாக்கல் செய்யப்படவில்லை என்றால், அதை நீதிமன்ற அவமதிப்பாக கருதி, அதற்கு காரணமான மத்திய நீர்வளத்துறை செயலாளர் உள்ளிட்டவர்களை கைது செய்து சிறையில் அடைக்க உச்சநீதிமன்றம் ஆணையிட வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story