கோயம்பேட்டில் போலீஸ்காரரின் கை விரலை கடித்து துண்டாக்கிய வழிப்பறி திருடன் கைது
மாணவரின் கைப்பையை திருடிக்கொண்டு ஓடியவர் தன்னை விரட்டிப்பிடித்த போலீஸ்காரரின் விரலை கடித்து துண்டாக்கினார்.
கோயம்பேடு,
மாணவரின் கைப்பையை திருடிக்கொண்டு ஓடியவர் தன்னை விரட்டிப்பிடித்த போலீஸ்காரரின் விரலை கடித்து துண்டாக்கினார். அதை பொருட்படுத்தாமல் போலீஸ்காரர் அவரை கைது செய்தார்.
சென்னை கொளத்தூரைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் மகன் ஜெகதீஷ்(வயது 17), பள்ளி மாணவர். இவர் நேற்று மாலை காஞ்சீபுரம் சென்றுவிட்டு, அங்கிருந்து கோயம்பேடு பஸ்நிலையம் வந்தார். அவர் கொளத்தூர் செல்வதற்காக ஷேர் ஆட்டோ ஏறுவதற்கு 100 அடி சாலையில் நின்றுகொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒருவர் ஜெகதீஷின் கைப்பையை பிடுங்கிக்கொண்டு ஓடினார். ஜெகதீஷ் கத்தி கூச்சல்போட்டார். சத்தம் கேட்டு அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸ்காரர் கார்த்திக் அந்த நபரை விரட்டிச் சென்று பிடித்தார். அப்போது அந்த நபர் தப்பிக்க போலீஸ்காரர் கார்த்திக்கின் கை விரலை கடித்ததில் விரல் துண்டானது.
வலியையும் பொருட்படுத்தாமல் கார்த்திக் பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை கைது செய்தார். விசாரணையில், அவர் பல்லாவரம் பம்மலைச் சேர்ந்த அய்யப்பன்(24) என்று தெரிந்தது. அவர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்கள்.
Related Tags :
Next Story