பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவி புகார் போலீசார் விசாரணை


பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவி புகார் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 13 May 2018 10:15 PM GMT (Updated: 13 May 2018 8:51 PM GMT)

மாற்றுச்சான்றிதழ் வாங்கி செல்லும்படி வற்புறுத்தியதாக பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவி புகார் அளித்துள்ளார்.

கோவை, 

மாற்றுச்சான்றிதழ் வாங்கி செல்லும்படி வற்புறுத்தியதாக பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவி புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் வல்லிகுன்னு பகுதியை சேர்ந்தவர் ஹரிதா செக்குண்ணி (வயது 23). இவர் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. உளவியல் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக அவர் அங்குள்ள விடுதியில் தங்கி உள்ளார்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மாணவி ஹரிதா செக்குண்ணி, தேசிய மகளிர் ஆணையம் மற்றும் மேற்கு மண்டல ஐ.ஜி. பாரியிடம் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த 14.11.2017 அன்று மாலை என்னுடன் தங்கியுள்ள விடுதி மாணவி, காய்ச்சலால் அவதிப்பட்டார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல விடுதி காப்பாளரை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் முடியவில்லை.

அதன் பின்னர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அந்த மாணவியை சக மாணவிகளின் உதவியுடன் கால் டாக்சி ஒன்றில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, சிகிச்சை பெற்றுவிட்டு அதே கால் டாக்சியில் இரவு 11 மணிக்கு விடுதிக்கு திரும்பினோம். அப்போது விடுதியின் கதவு பூட்டப்பட்டு இருந்தது.

நாங்கள் நீண்ட நேரம் கழித்து வந்ததால் விடுதி கண்காணிப்பாளர் பிரேமா எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. பின்னர் கால் டாக்சி டிரைவர் மருத்துவமனையில் இருந்து வருவதாக தெரிவித்ததையடுத்து, நாங்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டோம்.

இதுதொடர்பாக என்னிடம் விசாரணை நடத்தாமல் 16.11.2017 அன்று மாலை மாற்றுச்சான்றிதழ் பெற்று செல்லுமாறு எங்கள் துறை தலைவர் பேராசிரியர் வேலாயுதம் வற்புறுத்தியதுடன், தகாத வார்த்தைகளை பேசினார். இதனால் மனமுடைந்த நான் மாற்றுச்சான்றிதழ் பெற்றுக்கொண்டேன். இதனால் என்னுடைய கல்வி தடைபட்டு விட்டது. சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து மாணவி அளித்த மனு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் அந்த மனு பேரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன், வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைசாமி ஆகியோர் நேற்று மதியம் ஹரிதா செக்குண்ணியிடம் நேரில் விசாரணை நடத்தினர். தொடர்ந்து பல்கலைக்கழக துறை தலைவர் வேலாயுதம், விடுதி காப்பாளர் பிரேமா, மேற்பார்வையாளர் தர்மராஜ் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, மாணவி அளித்த புகார் தொடர்பாக இரு தரப்பிடமும் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து மாணவி ஹரிதா செக்குண்ணியுடன் படித்த சக தோழிகளுக்கு தற்போது கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் அவர்கள் கல்லூரிக்கு வந்த உடன் அவர்களிடமும் விசாரணை நடத்தப்படும் என்றனர்.

Next Story