சுடுகாட்டு கொட்டகை இடிந்து விழுந்து 2 பேர் உடல் நசுங்கி சாவு மழைக்கு ஒதுங்கிய போது பரிதாபம்


சுடுகாட்டு கொட்டகை இடிந்து விழுந்து 2 பேர் உடல் நசுங்கி சாவு மழைக்கு ஒதுங்கிய போது பரிதாபம்
x
தினத்தந்தி 13 May 2018 9:05 PM GMT (Updated: 13 May 2018 9:05 PM GMT)

சுடுகாட்டு கொட்டகை இடிந்து விழுந்து 2 பேர் உடல் நசுங்கி பலியாயினர். மழைக்கு ஒதுங்கிய போது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

நெல்லை,

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள தெற்கு வாகைகுளத்தை சேர்ந்தவர் சுடலையாண்டி (வயது 85). இவர் நேற்று இறந்து விட்டார். இவரது உடல் தகனம் நேற்று மாலையில் ஊருக்கு அருகே உள்ள சுடுகாட்டில் நடந்தது. இதில் தெற்கு வாகைகுளத்தை சேர்ந்த வேலுமயில் (29), அவருடைய உறவினர் கனகராஜ் (34) ஆகியோர் கலந்து கொண்டனர். சுடலையாண்டி உடலுக்கு உறவினர்கள் இறுதி மரியாதை செலுத்தி விட்டு அனைவரும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

வேலுமயில், கனகராஜ் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டனர். அப்போது பலத்த மழை பெய்தது. உடனே இருவரும் மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்தி விட்டு சுடலையாண்டி உடலை தகனம் செய்த சுடுகாட்டு கொட்டகையில் மழைக்காக ஒதுங்கி நின்றனர்.

அப்போது, திடீரென்று கொட்டகை பயங்கர சத்தத்துடன் இடிந்து 2 பேர் மீதும் விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய வேலுமயில், கனகராஜ் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

தகவல் அறிந்த அவர்களது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இருவரது உடல்களையும் பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பலியான வேலுமயில் தனியார் பைப் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு கனி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளது. கனகராஜ் தனியார் டயர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு மகேஷ் என்ற மனைவியும் 3 ஆண் குழந்தைகளும் உள்ளன.

Next Story