மாநில செய்திகள்

“பாலகுமாரனின் எழுத்துகள் இன்னும் பல காலம் வாசிக்கப்படும்” கவிஞர் வைரமுத்து இரங்கல் + "||" + Balakumaran chapters are still available Will be read for a long time Poet Vairamuthu mourning

“பாலகுமாரனின் எழுத்துகள் இன்னும் பல காலம் வாசிக்கப்படும்” கவிஞர் வைரமுத்து இரங்கல்

“பாலகுமாரனின் எழுத்துகள் இன்னும் பல காலம் வாசிக்கப்படும்” கவிஞர் வைரமுத்து இரங்கல்
பாலகுமாரனின் எழுத்துகள் இன்னும் பல காலம் வாசிக்கப்படும் என்றும், ஒரு முழுநேர எழுத்தாளனை காலம் கவர்ந்துவிட்டது என்றும் கவிஞர் வைரமுத்து தெரிவித்தார். இதுகுறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது.
சென்னை,

பாலகுமாரனின் இழப்பு எழுத்துலகத்தின் மீது விழுந்த இடி. என் வயிறு வரைக்கும் வருத்தம் கெட்டிப்பட்டுக்கிடக்கிறது. மூளைச் சோம்பேறித்தனமில்லாத முழுநேர எழுத்தாளனை காலம் கவர்ந்து கொண்டது. இரண்டு கைகளாலும் எழுதியவரைப்போல சிறுகதைகளையும், நாவல்களையும் சலிக்காமல் படைத்த சாதனையாளர் பாலகுமாரன்.

‘பெண்களைப் புரிதல்’ என்ற ஒற்றை வரி கொள்கையை ஊடு சரடாக வைத்துக்கொண்டு, அவர் படைத்த எழுத்து இன்னும் பல காலம் வாசிக்கப்படும். தொழில்நுட்பத்தின் வல்லாண்மையால் வாசிப்பை விட்டுத் தப்ப நினைத்த ஒரு தலைமுறையை, சட்டையைப் பிடித்து, ‘உட்கார்ந்து வாசி, பிறகு யோசி’ என்று உலுக்கியவர்களில் பாலகுமாரனும் முக்கியமானவர். சலிக்காத நடை அவரது நடை. கரையைத் தொட்டுக்கொண்டே நடக்கும் நதி மாதிரி கவிதையைத் தொட்டுக்கொண்டே நடந்த நடை அவரது உரைநடை.

தொடக்கத்தில் அவர் கவிதை எழுத வந்தவர்தான். கவிதையைவிடச் சந்தை மதிப்பு உள்ளது உரைநடைதான் என்பதை உணர்ந்து தெளிந்த அறிவாளி அவர். அவரது ‘இரும்புக் குதிரைகள்’, ‘மெர்க்குரிப் பூக்கள்’, ‘உடையார்’, ‘கங்கைகொண்ட சோழன்’, ‘கரையோர முதலைகள்’ போன்ற படைப்புகள் வாசகர்களை வசீகரித்தவை.

கலைத்துறையிலும் புகழ் பெறவே ஆசைப்பட்டார் இந்த பாலகுமாரன். கலைத்துறைக்குச் சென்ற எழுத்தாளர்களில் தங்கள் அறிவுக்குரிய நாற்காலியை அடைந்தவர்கள் குறைவு. புதுமைப்பித்தன், பி.எஸ்.ராமையா, விந்தன், அகிலன் போன்ற பலரையும்கூட வெள்ளி திரையுலகம் தள்ளியே வைத்திருந்தது. ஆனால் பாலகுமாரனுக்கு திரையுலகம் வெற்றி கொடுத்தது. ‘சிந்து பைரவி’, ‘நாயகன்’, ‘காதலன்’, ‘பாட்ஷா’, ‘இது நம்ம ஆளு’ போன்ற படங்களில் அவரது பங்களிப்பு அற்புதமானது.

மரணத்தை வெல்ல வேண்டும் என்பதே விஞ்ஞானத்தின் நீண்டநாள் விருப்பம். ஆனால் அந்த போட்டியில் விஞ்ஞானத்தை விட கலைதான் வெற்றி பெற்றிருக்கிறது. தன் கலையை முன்வைத்து ஒரு படைப்பாளன் தன் மரணத்தை வென்றுவிடுகிறான். அந்த வகையில் பாலகுமாரன் தன் படைப்புகளால் மரணத்தை வென்று நீண்ட காலம் தமிழோடு வாழ்ந்திருப்பார். அவரது குடும்பத்தாரும், வாசகர் உலகமும் அமைதியுறுக என்று என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை