தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட துளிகள்


தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட துளிகள்
x
தினத்தந்தி 23 May 2018 12:00 AM GMT (Updated: 22 May 2018 10:16 PM GMT)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பாலத்தின் கீழ் பகுதியில் இருந்த 2 மோட்டார் சைக்கிள்களை தீவைத்து எரித்தனர்.

தூத்துக்குடியில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு போலீஸ் வாகனம் வந்தது. அந்த வாகனம் மீது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல்வீசி தாக்கினார்கள்.

மேலும் 3-வது மைல் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மற்றொரு போலீஸ் வாகனத்துக்கு தீவைக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் நின்ற அரசு ஜீப்கள் கவிழ்த்து போட்டு தீவைத்து கொளுத்தப்பட்டன.

தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களில் மொத்தம் 67 மோட்டார் சைக்கிள்கள், 42 கார்கள், ஒரு போலீஸ் வாகனம் தீவைத்து எரிக்கப்பட்டன. மேலும் 2 ஆம்புலன்ஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன.

துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போராட்டக்காரர்கள் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். அப்போது, ஆஸ்பத்திரி வளாகத்தில் 2 ஆம்புலன்சுகள் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தன. அந்த ஆம்புலன்சுகள் காயம் அடைந்தவர்களை மீட்க செல்லவில்லை என்று கூறி அவர்கள் ஆம்புலன்சுகளை கல்வீசி தாக்கினார்கள். மேலும் அங்கு நின்ற இரண்டு 108 ஆம்புலன்சுகளையும் ஒன்றன் பின் ஒன்றாக ஓட்டிச் சென்றனர். அப்போது, நெல்லை மாவட்டத்தில் இருந்து பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசார் அரசு ஆஸ்பத்திரியில் இருந்த போராட்டக்காரர்களை விரட்டி அடித்தனர். இதில் சிலர் காயம் அடைந்தனர்.

போராட்டக்காரர்கள் நேற்று காலையில் தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் இருந்து பேரணியாக தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர். அவர்கள் 9 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்தே கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர். அவர்களுக்கு சாலையில் இருந்த பொதுமக்கள் தண்ணீர், பிஸ்கெட் உள்ளிட்டவற்றை இலவசமாக கொடுத்தனர்.

துப்பாக்கி சூட்டில் பலியான மாணவி குறித்து உறவினர்கள் உருக்கம்.
கலெக்டர் அலுவலகத்தில் நேற்று போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தூத்துக்குடியைச் சேர்ந்த வெனிஸ்டா (வயது 17) என்பவர் உயிரிழந்தார். இவர் தற்போது, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதி விட்டு முடிவுக்காக காத்து இருந்தார்.

மாணவி இறந்த தகவல் அறிந்ததும் அவரது பெற்றோர், உறவினர்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர். அவர்கள் வெனிஸ்டா உடலை பார்த்து கதறி அழுதனர்.

மேலும் மாணவியின் உறவினர்கள் கூறுகையில், வெனிஸ்டா சிறுவயதில் இருந்தே நன்றாக படிப்பவர். தற்போது, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதி உள்ளார். தேர்வில் நல்ல மதிப்பெண் எடுப்பேன் என்று வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்து வந்தார். நாளை (அதாவது இன்று) தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டபோது துரதிர்ஷ்டவசமாக அவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியாகிவிட்டார் என்று உருக்கமாக தெரிவித்தனர்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் 4 பேர் மீது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.

அவர்களின் கேமராவையும் பறித்து சேதப்படுத்தினார்கள். அவர்களின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஒரு பத்திரிகையாளரின் வாகனம் தீவைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

போராட்ட துளிகள்

* ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், முள்ளக்காடு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 18 ஆயிரம் கடைகள் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன.

* தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு பஸ்கள் எதுவும் இயக்கப்படாததால் தூத்துக்குடி பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டன.

* தூத்துக்குடியில் அனைத்து தியேட்டர்களிலும் நேற்று காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

* போராட்டத்தில் ஏராளமான பெண்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர். சில இளைஞர்கள் தங்களது செல்போனில் ‘செல்பி’ எடுத்துக்கொண்டனர்.

* மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு நேற்று மதியம் முதல் பஸ்கள் இயக்கப்படவில்லை. ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி வழியாக திருச்செந்தூர், கன்னியாகுமரிக்கு செல்லும் பஸ்கள் எப்போதும்வென்றானில் இருந்து பசுவந்தனை, கடம்பூர், கயத்தாறு, நெல்லை வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன.

* தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. இதனால் நாட்டுப்படகுகள் கடற்கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

* ஐ.ஜி.க்கள் சண்முகராஜேசுவரன், ரதராஜ் ஆகியோர் மாலையில் தூத்துக்குடிக்கு வந்தனர். மேலும் ஏராளமான வெளிமாவட்ட போலீசார் தூத்துக்குடியில் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் சந்தேகத்துக்கு இடமான நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

* நேற்று காலை 9 மணி அளவில் தொடங்கிய போராட்டம் மாலை 4 மணி அளவில் முடிவடைந்தது.

Next Story