சென்னையில் வன்னியர் சங்க தலைவர் குரு மரணம்


சென்னையில் வன்னியர் சங்க தலைவர் குரு மரணம்
x
தினத்தந்தி 25 May 2018 9:15 PM GMT (Updated: 25 May 2018 8:45 PM GMT)

வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு சென்னையில் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

சென்னை,

வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு சென்னையில் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது இறுதிச்சடங்குகள் சொந்த ஊரில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

பா.ம.க.வின் முன்னணி தலைவர்களில் ஒருவராகவும், வன்னியர் சங்க தலைவராகவும் இருந்தவர் ஜெ.குரு (வயது 57). முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர் நுரையீரல் காற்றுப்பை திசு பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 12-ந்தேதி சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

டாக்டர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இந்தநிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

தொடர்ந்து கண்காணிப்பில் இருந்த வந்த ஜெ.குருவுக்கு, நேற்று இரவு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, அவர் மரணம் அடைந்தார்.

மரணம் அடைந்த ஜெ.குருவின் உடல் அவருடைய சொந்த ஊரான, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள காடுவெட்டிக்கு நேற்று இரவு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படுகிறது. அதற்கு பிறகு அங்குள்ள சுடுகாட்டில் அவருடைய உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது.

மரணம் அடைந்த ஜெ.குரு 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். 2001-ம் ஆண்டு ஆண்டிமடம் தொகுதியில் இருந்தும், 2011-ம் ஆண்டு ஜெயங்கொண்டம் தொகுதியில் இருந்தும் சட்டசபைக்கு உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

நான் பெற்றெடுக்காத எனது மூத்த பிள்ளையும், வன்னியர் சங்கத்தின் தலைவருமான குரு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியை கண்ணீருடன் பகிர்ந்து கொள்கிறேன். எனது வாழ்வில் எத்தனையோ இழப்புகளை நான் எதிர்கொண்டு இருக்கிறேன். அவை அத்தனையையும் தாண்டிய பெருஞ்சோகம் குருவின் மறைவு தான். எனக்கு அறிமுகமான நாளில் இருந்து கடைசி மூச்சுவிடும் நாள் வரை எனது நம்பிக்கைக்குரிய தளபதியாக திகழ்ந்தவர் குரு. அதேபோல் குரு மீது நான் கொண்டிருந்த அன்பும், அக்கறையும் ஒரு நாளும் குறைந்ததில்லை. குருவுக்கும், எனக்கும் இடையிலான உறவு அரசியல் கட்சி நிறுவனருக்கும், தொண்டருக்கும் இடையிலானதாக ஒருபோதும் இருந்ததில்லை; மாறாக பாசமுள்ள தந்தைக்கும் விசுவாசமுள்ள மகனுக்கும் இடையிலான உன்னதமான உறவாகவே இருந்தது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய தூண்களில் ஒருவரும், சாமான்ய மக்களுக்காக இறுதிவரை போராடியவருமான பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குரு. அவர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு துயரமுற்றேன். பாட்டாளிகளின் குரலாக திகழ்ந்த, அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில், குருவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாசுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அறிக்கையில் கூறி உள்ளார்.

Next Story