ஸ்டெர்லைட் வழக்கு: மாசு கட்டுப்பாட்டு வாரிய தீர்ப்பாயத்தில் வைகோ காரசார விவாதம்


ஸ்டெர்லைட் வழக்கு: மாசு கட்டுப்பாட்டு வாரிய தீர்ப்பாயத்தில் வைகோ காரசார விவாதம்
x
தினத்தந்தி 6 Jun 2018 9:30 PM GMT (Updated: 2018-06-07T02:54:01+05:30)

ஸ்டெர்லைட் தொடர்ந்த வழக்கில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வைகோ காரசாரமாக வாதாடினர்.

சென்னை, 

ஸ்டெர்லைட் தொடர்ந்த வழக்கில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வைகோ காரசாரமாக வாதாடினர்.

ஸ்டெர்லைட் வழக்கு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு கடந்த மாதம் 23-ந் தேதி உத்தரவிட்டதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதற்கு முன்னதாக ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து செயல்பட அனுமதி மறுத்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடந்த 9.4.2018 அன்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஆலை நிர்வாகம் சென்னையில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது.

ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ஸ்ரீவைகுண்டம் வக்கீல் ராமசுப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவைச் சேர்ந்த பாத்திமாபாபு ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி சுதந்திரம் மற்றும் நிபுணர்கள் ஜெயக்குமார், எத்திராஜ் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது வைகோ, ராமசுப்பு ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர். தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன், ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் மூத்த வக்கீல் சுந்தரேசன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

தள்ளுபடி செய்ய வேண்டும்

அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

வக்கீல் அரவிந்த் பாண்டியன்:- ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்துள்ள இந்த வழக்கு காலாவதி ஆகி விட்டது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.

மூத்த வக்கீல் சுந்தரேசன்:- ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல் நடவடிக்கை எடுக்க உள்ளோம். எனவே, இந்த வழக்கை முடித்து வைக்கக்கூடாது. அரசு உத்தரவுக்கு எதிரான எங்கள் தரப்பின் எழுத்து மூலமான வாதத்தைத் தாக்கல் செய்ய வாய்ப்பு அளிக்க வேண்டும்.

வக்கீல் அரவிந்த்பாண்டியன்:- ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அரசு நிரந்தர உத்தரவு பிறப்பித்துள்ளதால் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை எதிர்த்த ஸ்டெர்லைட் ஆலையின் மனுவை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த மனுவை விசாரிப்பது என்பது தேவையில்லாத ஒன்றாகும்.

உடைத்து நொறுக்குவார்கள்

வைகோ:- ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அறப்போராட்டம் நடத்தியவர்கள் மீது தமிழக காவல்துறை துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் இறந்த ஒவ்வொருவர் வீட்டுக்கும் சென்று நான் துக்கம் கேட்டேன். பொதுமக்கள் உள்ளம் எரிமலையாகக் கொதிக்கின்றது.

நீதிபதி சுதந்திரம்:- நாங்கள் பத்திரிகைகளில் எல்லாவற்றையும் படித்தோம். அதைப்பற்றி இங்கே எதுவும் கூற வேண்டாம். வழக்கு பற்றி மட்டும் பேசுங்கள்.

வைகோ:- சுற்றுச்சூழல் சட்டம் பொதுமக்கள் நலனுக்காகத்தான் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் நிர்வாகம் என்ன தீர்ப்பைப் பெற்றாலும், மராட்டிய மாநிலம் ரத்தினகிரியில் விவசாயிகள் திரண்டு ஆலையை உடைத்து நொறுக்கியது போல் தூத்துக்குடியிலும் உடைத்து நொறுக்குவார்கள்.

விசாரணை தள்ளிவைப்பு

நீதிபதி சுதந்திரம்:- இதையெல்லாம் இங்கே பேசக்கூடாது. வழக்கு பற்றித்தான் பேச வேண்டும்.

வைகோ:- இனிமேல் பேசவில்லை. ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்த வழக்கு செயல் அற்றதாக கூறி தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு காரசார விவாதம் நடந்தது.

இதன்பின்பு வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஜூலை) 10-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Next Story