‘ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்தால் வியாபாரிகள் வாழ்த்துவார்கள்’ சட்டசபையில் எச்.வசந்தகுமார் பேச்சு


‘ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்தால் வியாபாரிகள் வாழ்த்துவார்கள்’ சட்டசபையில் எச்.வசந்தகுமார் பேச்சு
x
தினத்தந்தி 7 Jun 2018 11:30 PM GMT (Updated: 2018-06-08T01:53:11+05:30)

தமிழகத்தில் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்தால் வியாபாரிகள் அரசை வாழ்த்துவார்கள் என்று காங்கிரஸ் உறுப்பினர் எச்.வசந்தகுமார் கூறினார்.

சென்னை,

சட்டசபையில் நேற்று நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் எச்.வசந்தகுமார் (நாங்குநேரி தொகுதி) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

எச்.வசந்தகுமார்:- சென்னை அம்பத்தூர், கிண்டியில் உள்ள தொழிற்பேட்டைகளில் எத்தனை தொழிற்சாலைகள் இப்போது இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை அமைச்சர்கள் ஆய்வு செய்து கண்டறிய வேண்டும். டன்லப் டயர் தொழிற்சாலை மூடப்பட்டுவிட்டது. இந்தியாவில் அதிக மோட்டார் பம்புகள் கோவையில்தான் தயாரிக்கப்படுவதாக சொல்வார்கள். இப்போது அதன் நிலை என்ன?.

அமைச்சர் எம்.சி.சம்பத்:- தொழிற்சாலை எண்ணிக்கையில், தொழிலாளிகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. தொழில் தொடங்க சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.

அமைச்சர் பென்ஜமின்:- கோவையில் மோட்டார் பம்பு தயாரிக்கும் தொழிற்சாலை 600 உள்ளது. உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை 4,500 இருக்கிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி 28 சதவீதத்தில் இருந்து 15 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் கா.பாண்டியராஜன்:- டன்லப் ஆலை மூடப்பட்டது காங்கிரஸ் ஆட்சியில் தான். அப்போது 10 சதவீதம் அளவுக்குத்தான் தமிழகத்தில் டயர் உற்பத்தி இருந்தது. இப்போது 40 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.

அமைச்சர் பி.தங்கமணி:- தொழில் முதலீடுகளில் தமிழகம் பின்னோக்கி செல்வதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சொல்லிவருகிறார்கள். இது தொழிலதிபர்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்தும். மக்கள் மத்தியிலும் தவறான எண்ணத்தை ஏற்படுத்தும். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.

எச்.வசந்தகுமார்:- ஆன்லைன் வர்த்தகத்தை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், சிறு, குறு வியாபாரிகள் உங்களை (அரசை) வாழ்த்துவார்கள்.

அமைச்சர் சி.வி.சண்முகம்:- சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை கொண்டு வர அனுமதி அளித்ததே காங்கிரஸ் ஆட்சியில் தான். ஆனால், தமிழகத்தில் அதை அனுமதிக்க முடியாது என்று எதிர்த்தவர், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா.

இவ்வாறு விவாதம் நடந்தது. 

Next Story