‘காலா’ படத்துக்கு தடை கேட்ட வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு


‘காலா’ படத்துக்கு தடை கேட்ட வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 7 Jun 2018 11:15 PM GMT (Updated: 7 Jun 2018 9:09 PM GMT)

ரஜினிகாந்த் நடித்து, வெளியாகியுள்ள ‘காலா’ திரைப்படத்துக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

சென்னை போரூரை சேர்ந்தவர் முத்துரமேஷ் என்ற ரமேஷ்குமார் நாடார். தமிழ்நாடு நாடார் சங்கத்தின் தலைவரான இவர், சென்னை ஐகோர்ட்டில் காலா படத்துக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு மனுவில், ‘பிழைப்புக்காக மும்பை சென்ற தமிழர்களுக்கு வேலை வாங்கிக் கொடுத்து, பாதுகாப்பு வழங்கியவர் திரவிய நாடார். இவரது வாழ்க்கை வரலாற்றை, ‘காலா’ என்ற பெயரில் ரஞ்சித் படம் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். திரவிய நாடாரின் புகழை இருட்டடிப்பு செய்து, இந்த படத்தை ரஞ்சித் எடுத்துள்ளார். அதனால், இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும், தமிழக அரசுக்கு நான் கொடுத்த மனுவை பரிசீலிக்கும்படி உத்தரவிடவேண்டும், காலா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று முன்தினம் நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கடைசி நேரத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதால், ‘காலா’ படத்துக்கு தடை விதிக்க முடியாது என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும், மனுதாரர், திரவிய நாடாரின் வாரிசுகளிடம் அனுமதி பெற்றுத்தான் இந்த வழக்கை தொடர்ந்தரா?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு மனுதாரர் தரப்பில் ஆமாம் என்று கூறியதால், அதற்குரிய ஆவணங்களை தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, திரவிய நாடாரின் மகன் ஜவகர் நாடாரிடம் பெறப்பட்ட அனுமதி கடிதத்தை கோர்ட்டில், மனுதாரர் வக்கீல் தாக்கல் செய்தார். அப்போது, ஜவகர் நாடாரும் கோர்ட்டில் ஆஜராகி இருந்தார். இதை மனுதாரர் வக்கீல், நீதிபதியிடம் கூறினார்.

இதையடுத்து ஜவகர் நாடாரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். ‘காலா’ படத்தை பார்த்தீர்களா? அந்த படத்தில் உங்களது தந்தை பற்றி அவமரியாதை செய்யும் விதமான காட்சிகள், வசனங்கள் உள்ளனவா? எந்த விதத்தில் இந்த படத்தினால், உங்களுக்கு பாதிப்பு என்று சரமாரியாக நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த ஜவகர் நாடார், ‘காலா படம் என் தந்தையின் வாழ்க்கையில் நடந்த கதை தான். இந்த படத்தை இன்று காலையில் நான் பார்த்தேன். இந்த படத்தின் கதைக்காக நாங்கள் யாரிடமும் பணம் கேட்கவில்லை. என் தந்தையின் வாழ்க்கையை படமாக்கும்போது, அதை அங்கீகரிக்க வேண்டும். என் தந்தைக்கு நன்றி தெரிவித்து, திரைப்படத்தில் ‘டைட்டில் கார்டு’ போடவேண்டும். அவரது வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதை என்று பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும். இதுதான் எங்கள் கோரிக்கை. இந்த படத்தில், பல காட்சிகள், மும்பையில் என் தந்தையின் வாழ்க்கையில் நடந்தவை. இயக்குனர் ரஞ்சித் என்னோடு தொடர்பில் தான் இருந்தார். அவர் என் தந்தையின் வாழ்க்கையை படமாக எடுத்துவிட்டு, அவரை வேறு சமூகத்தை சேர்ந்தவர் போல் சித்தரித்துள்ளார்’ என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘காலா படத்துக்கு ஏப்ரல் 2-ந் தேதி தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டு விட்டது. இதுநாள் வரை என்ன செய்தீர்கள்? கடைசி நேரத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதுவும், படத்துக்கு தடை கேட்பதற்கு அழுத்தமான, சட்டப்படியான காரணங்கள் எதுவும் குறிப்பிடவில்லை. படமும் வெளியாகிவிட்டது. இந்த படத்தின் கதை, உங்கள் தந்தையின் வாழ்க்கையில் நடந்தவை என்றால், அதுகுறித்து சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று கருத்து கூறினார்.

பின்னர், நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்’ என்று கூறினார். 

Next Story