கனிம வளங்களின் விற்பனையை ‘ஆன்லைன்’ மயமாக்க வேண்டும் மணல் லாரி உரிமையாளர்கள் வேண்டுகோள்


கனிம வளங்களின் விற்பனையை ‘ஆன்லைன்’ மயமாக்க வேண்டும் மணல் லாரி உரிமையாளர்கள் வேண்டுகோள்
x
தினத்தந்தி 9 Jun 2018 9:44 PM GMT (Updated: 9 Jun 2018 9:44 PM GMT)

கனிம வளங்களின் விற்பனையை ‘ஆன்லைன்’ மயமாக்க வேண்டும் என்று மணல் லாரி உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சென்னை, 

தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ்.யுவராஜ் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் முதல் தமிழக அரசே ‘ஆன்லைன்’ மூலம் குவாரிகளில் மணலை வழங்கி வருகிறது. இதனால் அரசுக்கு வருவாய் நேரடியாகவே சென்றடைகிறது. ஆனால் அரசின் மூலம் சவுடு, ஏரிமண், பட்டாமண், கருங்கல், களிமண், செம்மண், கிராவல் மற்றும் முகத்துவார மணல் ஆகியவற்றை அரசின் அனுமதி பெற்ற தனியார் நிறுவனங்கள், வெளியே கொள்ளை லாபத்துக்கு விற்பனை நடத்தி வருகின்றனர்.

முறைகேடு

ஆற்றுமணல் கொள்ளையில் ஈடுபட்ட அதே கும்பல் தான் இன்றைக்கு கனிமவளங்கள் விற்பனையிலும் ஆக்கிரமிப்பு செய்து, அனுமதித்த அளவை மீறி முறைகேடாக அள்ளி கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். அதேபோல மலைகளில் ஜெனரேட்டர் உதவியுடன் கற்களை அளவுக்கு மீறி உடைத்து முறைகேடு செய்கிறார்கள்.

இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி வரை நஷ்டம் ஏற்படுகிறது. மலையை உடைத்து ஜல்லி எடுத்தது போக மீதமுள்ள உதிரி மணல் தான் எம்.சாண்டாக சுத்தம் செய்து தரப்படுகிறது. ஆனால் அரசு தரக்கட்டுப்பாடு இன்றி இந்த எம்.சாண்ட் மணல் விற்பனையால் தரம் கேள்விக்குறியாகிறது.

‘ஆன்லைன்’ மயமாக்கி...

திருவள்ளூர், வேலூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மணல் திருட்டு அதிகம் நடக்கிறது. குவாரிகளில் ஒரு ரசீதை காட்டி பல லோடுகள் முறைகேடாக கொண்டு செல்லப்படுகின்றன. எனவே மணல் விற்பனை போல இதர கனிம வளங்களின் விற்பனையையும் ‘ஆன்லைன்’ மயமாக்கி, தனியார் உரிமத்தை ரத்து செய்யவேண்டும். தமிழக முதல்-அமைச்சர் இதுகுறித்து உடனடி நடவடிக்கைகளை கையாளவேண்டும். இல்லையென்றால் மாநிலம் தழுவிய அளவில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story