கல்லூரிகளுக்கு உபகரணம் வாங்கியதில் மோசடி: 3 பேருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை உறுதி


கல்லூரிகளுக்கு உபகரணம் வாங்கியதில் மோசடி: 3 பேருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை உறுதி
x
தினத்தந்தி 9 Jun 2018 10:33 PM GMT (Updated: 9 Jun 2018 10:33 PM GMT)

அரசு கல்லூரிகளுக்கு உபகரணங்கள் வாங்கியதில் மோசடியில் ஈடுபட்ட 3 பேருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை உறுதி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை, 

அரசு கலைக் கல்லூரிகளில் உள்ள ஆய்வுக்கூடங்களுக்கு ரசாயன பொருட்கள், உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை விழுப்புரம் கூட்டுறவு சங்கம், திண்டுக்கல் கூட்டுறவு சங்கம், திருவண்ணாமலை அண்ணாமலையார் கூட்டுறவு சங்கம் ஆகிய சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்ய கடந்த 1995-ம் ஆண்டு கல்லூரி கல்வி இயக்குனரகம் முடிவு செய்தது.

ஆய்வுக்கூட உபகரணங்கள் வாங்காமலே அதற்கான பணத்தை அனுமதிக்க அப்போதைய கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் காசிநாதன் ரூ.56 லட்சத்து 36 ஆயிரம் பெற்றதும், இதற்கு அப்போதைய விழுப்புரம் கூட்டுறவு சங்க தனி அதிகாரி பெருமாள், திண்டுக்கல் கூட்டுறவு சங்க தலைவர் திருப்பதிராஜ், திருவண்ணாமலை அண்ணாமலையார் கூட்டுறவு சங்க தலைவர் கார்மேகம், கொள்முதல் அதிகாரி கோவிந்தராஜன் ஆகியோர் உடந்தையாக இருந்ததும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தெரியவந்தது.

சிறை தண்டனை

இதைத்தொடர்ந்து அவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு கோர்ட்டு, காசிநாதனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் மற்ற 4 பேருக்கும் தலா ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து கடந்த 2007-ம் ஆண்டு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து அவர்கள் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு நிலுவையில் இருந்த போதே காசிநாதன், கார்மேகம் ஆகியோர் இறந்து விட்டனர். மற்ற 3 பேர் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், அவர்களுக்கு கீழ்கோர்ட்டு விதித்த சிறைதண்டனையை உறுதி செய்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அடுத்த மாதம்(ஜூலை) 4-ந் தேதிக்குள் அவர்கள் சம்பந்தப்பட்ட கோர்ட்டில் சரண் அடைய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Next Story