சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு: வீடு புகுந்து விவசாயிகள் 2 பேர் கைது


சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு: வீடு புகுந்து விவசாயிகள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 9 Jun 2018 10:45 PM GMT (Updated: 9 Jun 2018 10:45 PM GMT)

சென்னை-சேலம் இடையேயான 8 வழி பசுமை சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சேலத்தில் வீடு புகுந்து விவசாயிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்,

சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமை சாலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படும் பணிகள் தற்போது தொடங்கி உள்ளது. விளை நிலங்கள், வனப்பகுதிகள் அழிக்கப்படுவதாக கூறி இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போலீசார் விசாரணை

இந்த நிலையில் நேற்று அதிகாலை போராட்டம் நடைபெற்றுவரும் சேலம் மாவட்டம் குப்பனூர் கிராமம் கொட்டாயூர் பகுதிக்கு அம்மாபேட்டை மற்றும் வீராணம் போலீசார் சென்றனர்.

பின்னர் பசுமை சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் அதே பகுதியை சேர்ந்த விவசாயிகள் முத்துக்குமார்(வயது 35), நாராயணன்(40) ஆகியோரின் வீட்டுக்குள் போலீசார் புகுந்து விசாரணைக்கு வருமாறு அழைத்தனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்ததால் போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக போலீஸ் வாகனத்தில் ஏற்றி அம்மாபேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். அதே பகுதியை சேர்ந்த மேலும் சிலரை போலீசார் விசாரணைக்கு அழைத்து வந்தனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார், பசுமை வழி சாலை திட்டத்தால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து விசாரித்தனர்.

விவசாயி கைது

இதையடுத்து முத்துகுமார், நாராயணனை தவிர மற்றவர்களை போலீசார் விடுவித்தனர். இதனிடையே வீராணம் போலீசார், அரசுக்கு எதிராக பொதுமக்களை போராட்டத்துக்கு தூண்டும் வகையில் நடந்து கொண்டதாக முத்துகுமாரை கைது செய்தனர். கைதான இவர் தி.மு.க. பிரமுகர் என்று கூறப்படுகிறது. நாராயணனிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்தனர்.

இதற்கிடையில் குப்பனூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் அம்மாபேட்டை போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விசாரணையில் உள்ளவர்களை விடுவிக்க கூறி போலீசாரிடம் அவர்கள் வலியுறுத்தினர்.

போலீசார் குவிப்பு

இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் நிலையம் முன்பு ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து மதியம் 12 மணி அளவில் நாராயணனை போலீசார் விடுவித்தனர்.

சேலம் சீலநாயக்கன்பட்டி சூரியகவுண்டர்காடு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (30). விவசாயியான இவர் நாம் தமிழர் கட்சியின் வீரபாண்டி தொகுதி இளைஞர் பாசறை இணை செயலாளராக உள்ளார். இவர் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று அன்னதானப்பட்டி போலீசார் வீடு புகுந்து அவரை கைது செய்தனர். இதேபோல் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் சிலரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். 

Next Story