மாநில செய்திகள்

‘காலா’ வெற்றியால் மட்டும் ரஜினிகாந்த் தலைவராகி விட முடியாது அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி + "||" + Minister Jayakumar Interview

‘காலா’ வெற்றியால் மட்டும் ரஜினிகாந்த் தலைவராகி விட முடியாது அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

‘காலா’ வெற்றியால் மட்டும் ரஜினிகாந்த் தலைவராகி விட முடியாது
அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
‘காலா’ பட வெற்றியால் மட்டும் ரஜினிகாந்த் தலைவராகி விட முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை, 

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகு வெளியான படம் ‘காலா’. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார், ஒரு படத்தின் வெற்றியால் மட்டும் யாரும் தலைவராகி விட முடியாது என்று கூறி பரபரப்பு தீயை பற்ற வைத்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உலக பொம்மைகள் தினம். உலகமே ஒரு நாடக மேடை. இதில் அனைவரும் பொம்மைகள். மனிதர்கள் வெறும் பொம்மைகளாக இல்லாமல் சமுதாயத்திற்கு படைப்பாளிகளாக இருக்க வேண்டும்.

கடல் தூய்மை குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு இருந்தாலே போதும். மக்கள் மனதில் மாற்றம் தேவை. அதே போல் அனைத்து துறைமுகங்களிலும் சுத்தமாக இருப்பது குறித்து போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் கடலில் பிளாஸ்டிக் கலக்காமல் இருக்க சென்னை மாநகராட்சி மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு படத்தின் (காலா) வெற்றி ரஜினிகாந்தின் அரசியலை தீர்மானிக்காது. எனவே அந்த (காலா) படத்தின் வெற்றியால் மட்டும் தலைவராகி விட முடியாது. அதை ஏற்கவும் முடியாது. படம் வெற்றி பெறுவது படத்தின் கதை, நடிப்பை வைத்து மக்கள், ரசிகர்கள் தீர்மானிக்கிறார்கள். அதற்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தம் இல்லை.

அரசியலில் தலைவராக வர வேண்டும் என்றால் கொள்கை இருக்க வேண்டும், லட்சியம் வேண்டும், மக்களுக்கு சேவை ஆற்ற வேண்டும். இந்த மூன்றையும் மக்கள் ஏற்க வேண்டும். அதை வைத்து தான் தலைவருக்கான அங்கீகாரத்தை பெறுகின்றனர்.

எம்.ஜி.ஆர். மக்களுடன் ஒன்றியிருந்தார். அதனால் அரியணைக்கு வந்தார். எம்.ஜி.ஆரை மக்கள் அப்படித்தான் (சினிமாவை வைத்து) ஏற்றுக் கொண்டனர் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறும் கருத்தை ஏற்க முடியாது. அவர் மத்திய மந்திரி என்ற பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். சாதாரண மனிதர் போல, தெருவில் செல்பவர் போல் பேசக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.