மாநில செய்திகள்

உங்கள் பணி காலத்தில் ஜனநாயக கடமை ஆற்ற லஞ்சம் வாங்க கூடாது சைதை துரைசாமி அறிவுரை + "||" + Your period of work Democratic duty Do not buy bribes Advice from Saidai Duraisamy

உங்கள் பணி காலத்தில் ஜனநாயக கடமை ஆற்ற லஞ்சம் வாங்க கூடாது சைதை துரைசாமி அறிவுரை

உங்கள் பணி காலத்தில் ஜனநாயக கடமை ஆற்ற லஞ்சம் வாங்க கூடாது சைதை துரைசாமி அறிவுரை
‘உங்கள் பணி காலத்தில் ஜனநாயக கடமை ஆற்ற லஞ்சம் வாங்க கூடாது’ என்று மனிதநேய மையத்தில் படித்து தேறியவர்களுக்கு சைதை துரைசாமி அறிவுரை வழங்கினார்.
சென்னை,

மனிதநேய மையத்தில் படித்து ‘சிவில் சர்வீஸ்’ தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா மனிதநேய மையத்தின் சார்பில் சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. விழாவுக்கு மனிதநேய மையத்தின் தலைவரும், பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான சைதை துரைசாமி தலைமை தாங்கினார்.


மையத்தின் (பயிற்சி) இயக்குனர் கார்த்திகேயன், மையத்தின்(அறக்கட்டளை) இயக்குனர்கள் வெற்றி துரைசாமி, வசந்தா வெற்றி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.இறையன்பு, ஓய்வுபெற்ற டி.ஜி.பி. அலெக்சாண்டர், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சித்திர சேனன், நாகல்சாமி, ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி காமராஜ், ஓய்வுபெற்ற வருவான வரித்துறை அதிகாரிகள் வசந்த்குமார், சாரங்கி, ஆர்.எம்.டி. கல்வி குழும தலைவர் எஸ்.ஆர்.முனிரத்தினம், ‘வேல்ஸ்’ பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், தியாகராயநகர் ஜெயின் கல்லூரி தாளாளர் அபய்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் சைதை துரைசாமி பேசியதாவது.

மனிதநேய மையம் நேர்முக தேர்வில் 7 ஆண்டு காலமாக தொடர்ந்து முதன்மையான இடத்தை பெற்று வருகிறது. 2006-07-ம் ஆண்டு நேர்முக தேர்வுக்கு சென்று வந்தோம். அதன்பின்னர் தொடர்ந்து சென்று வந்தோம். அப்போது நேர்முக தேர்வில் பங்கேற்றவர்களிடம் கடந்த முறை என்ன கேள்வி கேட்டார்கள்? என்று நான் கேட்டேன். ஆனால் யாரிடத்திலும் எந்த குறிப்பும் இல்லை. பிறகு நான் டெல்லிக்கு சென்று 12 நாட்கள் அங்கேயே இருந்தேன். அப்போது ஒட்டுமொத்தமாக தேர்வு நடந்தது. தேர்வு நடைபெறும் அரங்கிற்கு வெளியே உள்ள மரத்தடியிலேயே நான் நின்றுகொண்டிருப்பேன். தேர்வு முடிந்து வெளியே வருபவர்களிடம், என்ன கேள்வி கேட்டார்கள்? என்று எல்லா விவரங்களையும் சேகரித்தேன். தொடர்ந்து நேர்முக தேர்வில் இந்த போர்ட்டில், இந்த சேர்மன் என்ன கேள்வி கேட்டார், என்ன கேட்பார்கள் என்ற குறிப்புகளை எல்லாம் வரிசையாக சேகரித்து, ஒரு வங்கியை போல் சேமித்து வைத்ததன் விளைவு தான் இந்த வெற்றிக்கு அடிப்படை காரணம்.

மனிதநேய மையம் இதுவரையில் அகில இந்திய அளவில் 3-வது இடத்தை மட்டும் பிடித்து இருக்கிறது. முதல் இடத்தை விரைவில் பிடிப்போம் என்று இந்த வெற்றி விழாவில் தெரிவித்துக்கொள்கிறேன். 21 வயதில் தேர்வு எழுதக்கூடிய இளைஞனை அகில இந்திய அளவில் முதல் இடத்தில் கொண்டு வருவது லட்சியம். அதற்காக கடந்த 2 ஆண்டுகளாக முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறோம். நிச்சயம் இந்த ஆண்டு வெற்றி பெறுவோம்.

சராசரிக்கு மனிதனுக்கு இருக்கும் எண்ணங்கள், வீடு, சொத்துகள், தோட்டம் வாங்க வேண்டும் என்ற பேராசைகள் உங்களுக்கு இருக்க கூடாது.

ஜனநாயக கட்டமைப்பு என்பது தனிமனித நாணயத்தின் மீது கட்டப்பட்டுள்ளது. ஆகவே கடமையை செய்வதற்கு பிரதிபலன் என்ற பெயரில் லஞ்சத்தை தவிர்க்கின்ற ஒரு பாங்கினை பிரதானப்படுத்த வேண்டும். சாதி, மதங்களை கடந்து மனிதர்களை மட்டும் நேசிக்கின்ற பண்பு தான் முக்கியம். மனிதநேய சிந்தனையுடன் நீங்கள் பணியாற்ற வேண்டும்.

“மாபெரும் சபை தனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும். ஒரு மாற்று குறையாத மன்னவன் இவன் என்று போற்றி புகழ வேண்டும்” என்ற எம்.ஜி.ஆரின் பாடல் என் நினைவில் எப்போதும் இருக்கும். நான் 5 ஆண்டுகள் பெருநகர சென்னை மாநகராட்சி மேயராக இருந்த போது, உலகத்தில் எவருக்கும் கிடைக்காத மிகப்பெரிய சிறப்பு எனக்கு வாய்த்தது.

நான் மேயராக இருந்த போது எனக்கு கீழ் என்னால் உருவாக்கப்பட்ட மனிதநேய மாணவர்கள் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள். துணை கலெக்டர்கள், குருப்-1, குருப்-2 அதிகாரிகள் என 9 பேர் எனக்கு கீழ் பணியாற்ற கூடிய அற்புதமான வாய்ப்பை பெற்றேன்.

மனிதநேயம் மையம் 3,127 பேரை மத்திய-மாநில அரசுகளின் குறிப்பிடத்தக்க பணிகளில் அமர்த்தி உள்ளது. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை அரசின் கடைநிலை ஊழியர்களாக ஆக்கியிருக்கிறது. உங்களுக்கும் நாங்கள் வழிகாட்டி உள்ளோம். எனவே இந்த அரிய வாய்ப்பை சமூகத்துக்காக அர்ப்பணியுங்கள். ஆரோக்கியத்தை பேணுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...