இணைச்செயலாளர் பதவிக்கு தேர்வு செய்யும் அறிவிப்பை ரத்து செய்யவேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


இணைச்செயலாளர் பதவிக்கு தேர்வு செய்யும் அறிவிப்பை ரத்து செய்யவேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 Jun 2018 11:45 PM GMT (Updated: 11 Jun 2018 9:52 PM GMT)

தனியார் மற்றும் கன்சல்டன்சி நிறுவனங்களில் இருந்து மத்திய அரசின் இணைச்செயலாளர் பதவிக்கு தேர்வு செய்யும் அறிவிப்பை பணியாளர் துறை ரத்து செய்யவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள சமூக நீதிக் கோட்பாட்டை சீர்குலைக்கும் விதத்தில், ஒவ்வொரு நடவடிக்கையாக எடுத்து வரும் மத்திய பா.ஜ.க. அரசு இப்போது தனியார் நிறுவனங்களில் இருந்தும், கன்சல்டன்சி நிறுவனங்களில் இருந்தும் மத்திய அமைச்சகங்களில் உள்ள இணைச்செயலாளர் பதவிக்கு நியமனம் செய்ய அறிவிப்பு வெளியிட்டிருப்பதற்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 4 வருடங்களாக கொள்கைகளை வடிவமைத்திடும் திறமை இல்லாதவர்களை வைத்துக் கொண்டு இந்த முக்கிய துறைகளில் எந்த மாதிரியான நிர்வாகத்தை மத்திய பா.ஜ.க. அரசு நாட்டுக்கு கொடுத்திருக்கிறது என்பது ‘கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை’ என்பதைப்போல விளங்க வைத்துள்ளது. இணைச்செயலாளர் பதவியில் அமர்த்தப்படுபவர்கள் கொள்கை முடிவுகளை எடுக்கவும், திட்டங்களை செயல்படுத்தவும் பயன்படுத்தப்படுவார்கள் என்று கூறியிருப்பதும், மத்திய அமைச்சகங்களிலும், மத்திய அரசு பணியிலும் செயலாற்றி வரும் மத்திய அரசுப் பணியாளர்களை மட்டுமின்றி, அந்த துறைகளின் தலைவர்களாகவும் பல்வேறு பொறுப்பிலும் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் இதர அகில இந்திய சர்வீஸ் அதிகாரிகளின் திறமையை கொச்சைப்படுத்தும் செயலாகும்.

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே மத்திய அரசு பணியில் உள்ளவர்களின் செயல்பாட்டை ஆய்வு செய்கிறோம் என்று கூறி பலரை பணி நீக்கம் செய்திருக்கிறது. ‘யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்’ மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட அகில இந்திய பணி அதிகாரிகளின் தேர்வை ஒரு டஜன் விரிவுரையாளர்களிடம் ஒப்படைக்க துடிக்கிறது. மத்திய அரசு அமைச்சகங்களிலும், துறைகளிலும் மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி 27 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாக செயல்படுத்தாமல் சமூக நீதிக்கு சாவு மணி அடித்துக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. அரசு.

இந்த சூழ்நிலையில் புதிய நியமனங்கள் மூலமும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் கொள்கை முடிவு எடுக்கும் முக்கிய பதவிகளுக்கு வந்து விடக்கூடாது என்பதால் இப்போது தனியார் நிறுவனங்களில் இருந்தும், கன்சல்டன்சி நிறுவனங்களில் இருந்தும் அரசு வேலைக்கு ஆள் தேடுகிறது. இதன் மூலம், அரசின் ரகசியம் இனி தனியார் கையில் தாராளமாக போய் சேரும் சூழ்நிலை ஏற்பட்டு அரசாங்க ரகசியத்தின் புனிதம் தகர்த்து எறியப்படுவது நாட்டிற்கு பேராபத்தை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதுவரை சங் பரிவார் அமைப்புகளின் ஆலோசனையை கேட்டு செயல்பட்டு வந்த பிரதமர் ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் அவர்களை நேரடியாகவே அரசாங்கத்தில் அமர்த்தி, அரசு கஜானாவிலிருந்து சம்பளத்தை கொடுத்து, இந்துத்துவா அடிப்படையில் அரசின் கொள்கை முடிவுகளை எடுக்கும் இடத்திற்கு கொண்டுவர இந்த தேர்வை நடத்துகிறார். ஆகவே, தனியார் நிறுவனங்கள் மற்றும் கன்சல்டன்சி நிறுவனங்களில் இருந்து இணைச் செயலாளர் பதவிக்கு தேர்வு செய்யும் அறிவிப்பை பிரதமர் நரேந்திரமோடியின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் பணியாளர் துறை உடனடியாக ரத்து செய்யவேண்டும்.

மேலும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளின் படி மத்திய அரசின் முக்கிய துறைகளில் பிற்படுத்தப்பட்ட சமுதாய அதிகாரிகள் இடம்பெறுவதைத் தடுக்கும் இந்த ஆதிக்க மனப்பான்மையை அடியோடு கைவிடவேண்டும் என்று மத்திய அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இந்த அரசியல் சட்ட விரோத நியமனங்களை எதிர்க்க பா.ஜ.க. அல்லாத அனைத்து மாநில முதல்-மந்திரிகளும், குறிப்பாக சமூக நீதிக்காக பாடுபடும் முதல்-மந்திரிகள் அனைவரும் எதிர்க்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story